This article is from Dec 17, 2020

கோகோ கோலா, பெப்சிகோ, நெஸ்லே உலகின் டாப் பிளாஸ்டிக் மாசுபடுத்திகள்- ஆய்வுத் தகவல்!

Break Free From Plastic எனும் அமைப்பு உலகெங்கிலும் உள்ள 15,000 தன்னார்வலர்களால் மேற்கொண்ட வருடாந்திர தணிக்கை மூலம், அதிக அளவிலான நாடுகளில் காணப்படக்கூடிய உலக அளவிலான பிராண்டுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் தயாரிப்புகள் கழிவுகளாக கிடைப்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் சேகரித்த 3,46,494 பிளாஸ்டிக் கழிவுகளில் 63% அளவிற்கு நுகர்வோர் பிராண்டு என தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர்.

கோகோ கோலா, பெப்சிகோ மற்றும் நெஸ்லே ஆகிய மூன்று நிறுவனங்களே தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் அதிக பிளாஸ்டிக் மாசுபடுத்தி பிராண்ட்களாக இடம்பெற்று உள்ளதாக தணிக்கை கூறுகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில்  ” Zero Progress ” எனக் குறிப்பிட்டு உள்ளது.

உலக அளவில் பிளாஸ்டிக் மாசுபடுத்துவதில் கோகோ கோலா நிறுவனம் முதல் இடம் பிடித்து உள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 55 நாடுகளில் 51 நாடுகளின் கடற்கரைகள், ஆறுகள், பூங்காக்கள் மற்றும் பிற குப்பை தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட குளிர்பான பாட்டில்களில் பெரும்பாலும் இடம்பெற்றதால் கோகோ கோலா நம்பர் 1 பிளாஸ்டிக் மாசுபடுத்தியாக மதிப்பிட்டுள்ளது.

Courtesy : Break Free From Plastic

இந்த தணிக்கையில், 51 நாடுகளில் 13,834 பிளாஸ்டிக் துண்டுகளில் கோகோ கோலா பிராண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. 43 நாடுகளில் 5,155 பிளாஸ்டிக் துண்டுகளில் பெப்சிகோவும், 37 நாடுகளில் நெஸ்லே நிறுவனத்தின் பிளாஸ்டிக்கும் கண்டுபிடிக்கப்பட்டன.

” உலகின் டாப் மாசுபடுத்தும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தீர்க்க கடுமையாக உழைத்து வருவதாக கூறுகின்றனர், ஆனால் அதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பேக்கேஜிங்கைத் தொடர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றன ” என Break Free From Plastics உடைய உலகளாவிய பிரச்சார ஒருங்கிணைப்பாளர் எம்மா ப்ரிஸ்ட்லேண்ட் தெரிவித்து உள்ளார்.

2019-ம் ஆண்டு Break Free From Plastic அமைப்பால் எடுக்கப்பட்ட தணிக்கையிலும், இந்த நிறுவனங்களே டாப் 10 இடங்களில் இடம்பெற்று இருந்தன. கோகோ கோலா உலகின் நம்பர் 1 பிளாஸ்டிக் மாசுபடுத்தி பிராண்ட் ஆக இருப்பதாக போர்ப்ஸ் செய்தி நிறுவனமும் இந்த தணிக்கை குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்தது.

உலக அளவில் எங்கும் மறுசுழற்சி இல்லாத ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கிறது. உலக அளவிலான முன்னணி நிறுவனங்களின் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நுகர்வோர்களும் அதிக அளவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்களை தொடர்ந்து பயன்படுத்தியே வருகிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் வெளிப்புற செலவுகளான கழிவு சேகரிப்பு செலவுகள், சுத்திகரிப்பு மற்றும் அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றிற்கும் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால், பிளாஸ்டிக் உற்பத்தி 2030-க்குள் இரட்டிப்பாகவும், 2050-க்குள் மூன்று மடங்காக உயரக்கூடும் என Break Free From Plastic தெரிவித்து உள்ளது.

Links : 

The Coca-Cola Company, PepsiCo and Nestlé named top plastic polluters for the third year in a row

Coca-cola Named the worlds most polluting brand in plastic waste audit

Please complete the required fields.




Back to top button
loader