This article is from Nov 23, 2018

‘கஜா’புயலை மிஞ்சும் ‘சாதி’ப்புயல் நடந்தது என்ன ?

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணம் அளிக்க சென்ற இளைஞர்களிடம் அவர்களுக்கு தனியாக கொடுங்கள், எங்களுக்கு தனியாக கொடுங்கள் என கூறியதற்கு வீடியோவில் ஒரு இளைஞர் இப்படி வாழ்வதற்கு செத்து போகலாம் என கடுமையாகப் பேசி இருப்பார். பாதிப்பிலும் சாதிப் பாகுபாடு இருக்கிறது என இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பற்றி முழுவிவரம் அறிய அந்த இளைஞர் உமர் முக்தரிடம் youturn தொடர்பு கொண்டு பேசிய போது நடந்த நிகழ்வை பற்றி பல தகவல்களை அளித்துள்ளார்.

 

கேள்வி : அன்றைக்கு என்ன நடந்தது ?

பதில் : மீண்டும் புயல் என பரவிய வதந்தியால் ஒரே முகாமில் மக்கள் இருந்தால் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை அளிக்க எளிதாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், மக்கள் தனித் தனியாக இருப்பதை அறிந்து அதைப் பற்றி விசாரித்த போதுதான் சாதி ரீதியாக பிரிந்து இருப்பதை அறிய முடிந்தது. அதற்காக தான் இப்படி வாழ்றதுக்கு செத்து போகிடலாம். எதற்காக கஷ்டப்பட்டு இப்படி பண்ண வேண்டும் எனக் கூறி இருப்பேன்.

அவர்கள் இயற்கையாகவே சாதிய ரீதியான வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு தெருவும் அப்படித்தான் இருக்கிறது. நகர்புறம் போன்று இல்லாமல் ஒரு தெருவிற்கு ஒரு சாதி என பிரிந்து இருக்கின்றனர். மற்ற நேரங்களில் பேசுவதை விட இயற்கை பேரிடர் நேரங்களில் அனைவரும் கஷ்டப்படும் போது உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாருமில்லை என்பதால் அவ்வாறு கூற வேண்டிய சூழல் இருந்தது.

கேள்வி : எந்த பகுதியில் நடந்தது ?

பதில் : இது வேதாரண்யம் அருகில் நடைபெற்றது. இணையத்தில் வைரலாகும் என்று தெரியவில்லை. ஊர் பெயர் குறிப்பிட வேண்டாம். பொதுவாக கிராமப்புறங்களில் இது மாதிரியான எண்ணங்கள் இயற்கையாகவே இருந்து வருகிறது.

கேள்வி : உங்களிடம் அப்படி கூறியது எந்த சமூகம் ?

பதில் : அது பற்றி சரியாக தெரியவில்லை.

கேள்வி : அவர்களுடன் நாங்கள் இருக்க மாட்டோம் எனக் கூறினார்களா ?

பதில் : இல்லை, இவர்களை அங்கே இருக்க விட மாட்டார்கள் எனக் கூறினர். அதனால், தனியாக உள்ளனர்.

கேள்வி : நீங்கள் பேசிய பிறகு கொஞ்சமாவது மாறினார்களா ?

பதில் : அவர்கள் மாறுகிறார்கள். ஆனால், அவர்களுக்காக இதைப் பற்றி பேசுவதற்கு யாரும் அங்கு இல்லை. தீண்டாமைக் கொடுமை அப்படி எல்லாம் இல்லை. இந்த சூழலில் சேர்ந்து வாழ்வதற்கு பிரச்சனை இருக்கு. இவர்களுடன் சேர்ந்து இருக்க மாட்டேன் என நினைப்பவர்களுக்கு, உங்களின் விவசாய நிலத்தில் கூலித் தொழிலாளியின் கால் வைத்து தானே அனைத்தும் நடக்கிறது. அது ஒடுக்கப்பட்டவர்களாக கூட இருக்கட்டும். இதில் எப்படி பாகுபாடு பார்க்க முடியும். இதனைப் பற்றி எடுத்துக் கூறும் பொழுது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஏற்றுக் கொள்கிறார்கள். தங்களின் அறியாமையை உணர்கிறார்கள்.

நான் கோபத்தில் பேசியுள்ளேன். ஆனால், நம் ஆட்கள் கமென்ட்டில் கடுமையாக பேசி வருகின்றனர். அது தர்ம சங்கடமாக உள்ளது. அது வேண்டாம்.

உதாரணமாக, நீங்கள் சென்று முகாம்களில் கேட்டால் எங்க ஆளுங்க 140 பேர் இருக்கிறோம் என்றே பதில் அளிக்கின்றனர். இந்த வார்த்தையைத் தான் அதிகமாகக் கேட்டோம். இரவு நேரங்களில் சில இடங்களில் சேர்ந்து இருக்கின்றனர். பகலில் அப்படி அல்ல. இது முழுமையான ஒற்றுமை அல்ல.

கடுமையான புயல் பாதிப்புகளை சரி செய்ய இளைஞர்கள் ஒன்றுக் கூட வேண்டும் என்றக் கோரிக்கையை முன் வைக்கிறோம்.

இதே போன்று நிவாரணம் அளிக்க சென்ற மற்றொரு சமூக ஆர்வலர் ஹரிஹரன் என்ற  இளைஞரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது சில தகவலை அளித்துள்ளார்.

அவர் கூறியது,

நாங்கள் சென்ற கிராமப்புற பகுதிகளில் சாதி பிரச்சனைகள் அதிகம் உள்ளது. எங்க சாதிக்கு இவ்வளவு கொடுத்து விட்டு செல்லுங்கள். அப்படி இல்லை என்றால் வழங்கவே முடியாது என கூறுகிறார்கள். அனைத்து சாதியிலும் இவ்வாறு செய்கின்றனர். அனைவரும் ஒரே மாதிரி தான் உள்ளனர்.

ஒரு பகுதியை விட்டு வேறு பகுதிக்கு செல்ல விட மாட்டார்கள் என கூறும் பொழுது பேசி பார்க்கையில் எங்க ஆளுங்க, உங்க ஆளுங்க என்றே கூறுகிறார்கள். அவர்கள் சொல்கிற ஒரே கருத்து என்னோட 15 வருட உழைப்பு அழிந்து போய்விட்டது, எனக்கு என இருப்பது என்னுடைய சாதி மட்டும் தான் என வெளிப்படையாகவே கூறுகின்றனர். அதை விட்டுக் கொடுத்து யாருக்கும் நல்லது பார்க்க முடியாது. என் மக்கள் தான் முக்கியம் என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு சாதிய ரீதியாக அதிகம் பிரிந்து உள்ளனர். நிவாரணம் வழங்குவதிலும் பிரச்சனைகள் அதிகம் உள்ளது என்கிறார்.

புயல் பாதிப்பில் கூட மக்களோடு மக்களாக இருக்க நினைக்காமல் சாதிய ரீதியாக பிரிந்து அறியாமையில் உள்ளனர் நம் மக்கள். இதை அறியாமை என்பதா அல்லது சாதிய வெறி என்பதா என்று தெரியவில்லை.

Please complete the required fields.
Back to top button
loader