முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்துப் பரப்பப்பட்ட பொய்களின் தொகுப்பு !

இந்தியாவின் முதல் மற்றும் நீண்டகால பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் (நவம்பர் 14) குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேருவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவர் ஆட்சி செய்தபோது மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பற்றியும் வலதுசாரிகள் மற்றும் பாஜகவினரால் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அத்தகைய பொய் செய்திகள் பற்றிய உண்மைகளை இக்கட்டுரை தொகுப்பில் காண்போம்.

செப்டம்பர் 2023 : 

சவூதி அரசர் வருகைக்காகக் காசி கோயில் திரையிட்டு மறைக்கப்பட்டது : 

சவூதி அரசர் இந்தியா வந்த போது காசி கோயிலை நேரு குடும்பத்தார் திரையிட்டு மறைத்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பரப்பப்பட்டது.

Twitter link | Archive link 

சவூதி மன்னர் சவுத் பின் அப்துல் அஜிஸ் அல்-சௌத் முதல் முதலாக 17 நாள் பயணமாக 1955, நவம்பர் 27ம் தேதி இந்தியா சென்றபோது புது தில்லி, மும்பை, ஹைதராபாத், மைசூர், சிம்லா, ஆக்ரா, அலிகார் மற்றும் வாரணாசி போன்ற பல்வேறு நகரங்களுக்குச் சென்றார் என அந்நாட்டின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Archive link

அவர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ராம்நகர் கோட்டைக்கும் சென்றுள்ளார். அக்கோட்டையில் துர்கா, சின்னமாஸ்திகா மற்றும் தக்ஷின் முகி ஹனுமான் கோயில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் வருகையின்போது கோயில்கள் மூடப்பட்டதாக எந்த செய்திகளும், வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை. 

மேலும் படிக்க : சவுதி அரசர் வருகையின் போது பிரதமர் நேரு குடும்பம் காசி கோயிலைத் திரையிட்டு மூடியதாகப் பரவும் வதந்திகள் !

ஜூலை 2023 : 

நேருவிற்கும் ISRO-விற்கும் தொடர்பில்லை : 

இஸ்ரோவை ஆரம்பித்தவர் நேரு என்று காங்கிரஸ்காரர்கள் கூறுகின்றனர். உண்மை என்னவென்றால் நேரு 1964, மே மாதம் இறந்துவிட்டார். இஸ்ரோ 1969 ஆகஸ்ட் மாதம் தான் நிறுவப்பட்டது எனப் பரப்பப்பட்டது. 

Twitter Link | Archive Link

தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, 1962-ல் டாக்டர்.விக்ரம் சாராபாயின் திட்டப்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்தியத் தேசியக் குழுவாக (Indian National Committee for Space Research) INCOSPAR என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. பின்னர் 1969, ஆகஸ்ட் 15ம் தேதியன்று இஸ்ரோ உருவாக்கப்பட்டது என இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் 1962-ல் இந்திய விண்வெளி திட்டம் தொடங்கப்படுவதற்கு நேரு காரணமாக இருந்ததால், அவரின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று (2008) சந்திரயான்-1 மூலம் நிலவில் இந்தியாவின் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டதாக ISRO-வின் காலாண்டு இதழானSpace India-வில்’ குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ISRO-க்கும் நேருவிற்கும் தொடர்பில்லை எனப் பரப்பும் வலதுசாரிகள்.. உண்மை என்ன ?

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிவினை நானே (நேரு) எடுத்தேன் : 

ஜவஹர்லால் நேரு 1964, மே மாதம் அளித்த தனது கடைசி நேர்காணலில், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை முடிவைத் தானே எடுத்ததாக ஒப்புக்கொண்டார் என வீடியோ ஒன்று பரப்பப்பட்டது.

அமெரிக்கத் தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்னால்ட் மைக்கேலிஸ் (Arnold Michaelis) என்பவர் 1964, மே 18ம் தேதியன்று நேருவை நேர்காணல் எடுத்த வீடியோ  Prasar Bharati Archives என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நெறியாளர் ஜின்னா மற்றும் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து கேள்வி எழுப்புகிறார் (14:34).

அதற்குப் பதில் அளிக்கையில் (15:23), ’காந்தி இறுதி வரை பிரிவினைக்கு ஆதரவாக இல்லை. அந்த முடிவு வந்தபோதும் கூட அவர் அதற்கு ஆதரவாக இல்லை. நானும் அதற்கு ஆதரவாக இல்லை. ஆனால், இறுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் பிரச்சனைகளை விடப் பிரிவினை செய்வது நல்லது என நினைத்தேன்’ எனக் கூறியுள்ளார். அன்றைய தினத்தில் இந்துக்கள் இஸ்லாமியர்களைத் தாக்குவதும், பதிலுக்கு இஸ்லாமியர்கள் இந்துக்களை தாக்குவதும் என நாடே போர்க்களமாக இருந்தது. அச்சூழலில் நேரு பிரிவினை குறித்து முடிவு எடுத்ததாகவும் ஆனால், அதற்கு ஆதரவாக இல்லை என்றும் கூறியதைத் திரித்துப் பரப்புகின்றனர். 

மேலும் படிக்க : முஸ்லீம்களையும், இந்துக்களையும் பிரிக்கும் முடிவை நானே எடுத்தேன் என நேரு ஒப்புக்கொண்டதாகப் பரவும் தவறான தகவல் !

ஜூன் 2023 : 

நேரு கையில் வாளியுடன் சென்றார் : 

இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினாவுடன் நேரு செல்லும் போது கையில் வாளி எடுத்துச் சென்றதாகப் புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது. 

Archive link 

கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், ‘Himachal Archives’ எனும் பேஸ்புக் பக்கத்திலும் ‘wiki media’ எனும் தளத்திலும் பரவக் கூடிய இதே படம் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் நேருவின் கையில் வாளி இல்லை. அப்படம் 1948ம் ஆண்டு மே மாதம் விடுமுறையின் போது சிம்லாவில் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் மவுண்ட்பேட்டன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலியாக எடிட் செய்து பரப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : நேரு கையில் வாளியுடன் இருப்பதாகப் பரப்பப்படும் போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

மார்ச் 2023 : 

நேருவின் சிறை VS சாவர்கரின் சிறை : 

சுதந்திரப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நேருவின் சிறை வசதிகள் நிறைந்ததாகவும் சாவர்க்கரின் சிறை மோசமாக இருந்ததாகவும் மீடியான் இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் சரவண பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

நாசிக் மாவட்ட ஆட்சியர் கொலை வழக்கில் 1910ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாவர்க்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மீண்டும் 1911ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் ஒரு ஆயுள் தண்டனை என மொத்தம் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனை காலத்தில் அந்தமான் செல்லுலார் மற்றும்  ரத்னகிரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்தியக் கலாச்சார அமைச்சரக இணையதள தகவலின்படி நேரு 1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டு அகமது நகர் கோட்டை சிறையில் 963 நாட்களும், பரேலி மத்தியச் சிறையில் 72 நாட்களும், அல்மோரா சிறையில் 6 நாட்கள் என மொத்தம் 1041 நாட்கள் சிறையிலிருந்துள்ளார். அதன்படி அகமது நகர் கோட்டையின் ஒரு பகுதி சிறை அறையின் படம்தான் இது. அவர் தனது வாழ்நாளில் 3259  நாட்கள் லக்னோ மாவட்ட சிறை, அலகாபாத் மாவட்ட சிறை, நைனி மத்தியச் சிறை, டேரா டூன் சிறை எனப் பல சிறைகளில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சாவர்க்கரின் சிறை அறை, நேருவின் சிறை வசதி எனப் பரப்பப்படும் தவறான ஒப்பீடு !

பிப்ரவரி 2023 : 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 30 A : 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 30 Aன் படி, இந்து மதத்தை ஒரு இந்து மற்றொரு இந்துவிற்குக் கற்பிக்க அனுமதி இல்லை என்ற பகுதிக்கு எதிராகச் சர்தார் வல்லபாய் படேல் இருந்ததாகவும், அவர் இறந்த பிறகு நேரு அப்பிரிவை அரசியலமைப்பில் சேர்த்ததாகவும் இதனால் நமது நாட்டில் பகவத்கீதையைக் கற்பிக்க முடியாத சூழல் இருப்பதாகவும் பரப்பப்படுகிறது. 

Facebook link 

அரசியலமைப்பு பிரிவு 30 உட்பிரிவு 1ல்  “சமயம் அல்லது மொழி எதன் அடிப்படையிலும் சிறுபான்மையினராக உள்ள அனைவரும் தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் உரிமை உடையவர் ஆவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சமய சிறுபான்மையினர் என்பது இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் மத சிறுபான்மையினர் என்பது  இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோர் உள்ளடக்கியது.

 

அதேபோல், பிரிவு 30 உட்பிரிவு 1Aல், சிறுபான்மையினரால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனத்தின் சொத்துக்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்தச் சட்டம் ஒன்றை இயற்றுவது தொடர்பான பகுதிகள் உள்ளன. அப்பிரிவுகளில் இந்துக்களுக்கு எதிரான எந்த ஒரு பகுதியும் இடம்பெறவில்லை. 

மேலும், இந்தியாவில் பகவத்கீதை பற்றி பேச எந்த ஒரு தடையும் இல்லை. ‘இந்தியக் கலாச்சாரம்’ என்ற அரசு இணையதளத்திலேயே பகவத்கீதை புத்தகம் உள்ளது.

மேலும் படிக்க : நேரு இந்துக்களுக்கு எதிராக அரசியலமைப்பு சட்டப் பிரிவு 30A-வை சேர்த்ததாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !

செப்டம்பர் 2022 : 

ஆர்.எஸ்.எஸ். உடையில் நேரு : 

நேரு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வினரால் பரப்பப்பட்டது. 

Twitter link

அப்புகைப்படத்தில் நேரு வெள்ளை நிற தொப்பி அணிந்திருப்பதைக் காணலாம். 1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடையில் வெள்ளை தொப்பி கிடையாது. கருப்பு நிற தொப்பியே ஆர்.எஸ்.எஸ் சீருடையில் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

நேரு அணிந்திருப்பது இந்தியத் தேசிய காங்கிரசின் சேவா தளம் என்ற அமைப்பின் சீருடையாகும். அவ்வமைப்பின் கூட்டம் 1939ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலுள்ள நைனி என்ற பகுதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. அதனை ஆர்.எஸ்.எஸ். எனத் தவறாகப் பரப்பினர்.

மேலும் படிக்க : அரை டவுசருடன் நேரு : இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அல்ல !

ஏப்ரல் 2022 : 

சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் நிகழ்ச்சி : 

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் ஒருங்கிணைத்த சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்தில் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் மற்றும் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்ட நிகழ்வு என இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.

பரவக் கூடிய படம் ’Alamy’, ‘zoroastrians.net’ போன்ற தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘1948 ஜூன் மாதம் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ராஜகோபாலச்சாரியார் பதவி ஏற்றதற்கு சர்தார் வல்லபாய் படேல் அளித்த விருந்தில் நேரு, அம்பேத்கர், மௌலானா ஆசாத் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : நேரு, அம்பேத்கர் பங்கேற்ற சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்தின் புகைப்படமா ?

ஏப்ரல் 2020 : 

மோடி பி.எம். கேர் உருவாக்கக் காரணம் : 

நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி நிவாரண நிதியத்திற்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரந்தர ட்ரஸ்டியாக இருப்பதினால்தான் கோவிட்-19க்கு பி.எம். கேர் உருவாக்கப்பட்டதாக ஒரு தகவல் பரப்பப்பட்டது. 

1948-ல் நேரு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி அறக்கட்டளையை உருவாக்கும் பொழுது காங்கிரஸ் தலைவர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், டாடா அறக்கட்டளையின் பிரதிநிதி உள்ளிட்ட பலரும் இடம்பெற்று இருந்தனர். இந்திய அரசியலமைப்பு சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நிவாரண நிதிக்கான அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆனால், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது 1985-ல் தேசிய நிவாரண நிதி அறக்கட்டளையில் இருந்த பொறுப்பாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டு நிர்வகிக்கும் அதிகாரத்தை முழுமையாகப் பிரதமரின் கைவசம் மாறியது. அதன்பிறகு தற்போது வரை பிரதம மந்திரி நிவாரண நிதியை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதமரிடம் தான் உள்ளது.

மேலும் படிக்க : பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியத்திற்குக் காங்கிரஸ் தலைவர் ட்ரஸ்டியா ?

நவம்பர் 2019 : 

நேரு பெண்களுடன் இருக்கும் படங்கள் : 

நேரு தனது தங்கை, மருமகள் மற்றும் குடும்ப நண்பர்கள் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் பிற புகைப்படங்களை இணைத்து நேரு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்கள் என அரசியல் சார்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பியுள்ளனர். அப்படங்கள் குறித்த உண்மை இதற்கு முன்னரே யூடர்னில் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : “நேரு” பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள்| படங்களில் இருப்பவர்கள் யார் ?

மார்ச் 2019 : 

பிறப்பால் மட்டுமே நான் ஒரு ஹிந்து – நேரு :

”கல்வியால் நான் ஒரு ஆங்கிலேயன், பார்வையில் நான் ஒரு சர்வதேசியன், கலாச்சாரத்தால் நான் ஒரு முஸ்லீம், தற்செயலாக பிறப்பால் மட்டுமே நான் ஒரு ஹிந்து” என நேரு கூறியதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தித் தாளில் ஒரு தகவல் பரவியது. 

வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான பி.ஆர்.நந்தா எழுதிய ’The Nehrus: motilal and jawaharlal’ மற்றும் சசி தரூர் எழுதிய  ‘Nehru : The Invention of India’ ஆகிய புத்தகங்களில் ”இந்து மகாசபையின் தலைவரான N.B.Khare ஒருமுறை ஜவஹர்லால் நேரு படிப்பால் ஒரு ஆங்கிலேயன், கலச்சாரத்தால் ஒரு முஸ்லீம், தற்செயலாகப் பிறப்பால் ஒரு ஹிந்து என விவரித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

N.B.Khare வின் அரசியல் தொடக்கம் காங்கிரஸில் துவங்கி, பிறகு 1949ல் ஹிந்து மகாசபையில் இணைந்தார். 1951ம் ஆண்டு வரையில் ஹிந்து மகாசபையின் தலைவராக இருந்தார். 1950-களில் N.B.Khare அதிக முறை இக்கருத்தைக் கூறியதன் விளைவாகப் புத்தகங்களில் அவ்வரிகள் இடம்பெற்றுள்ளது. பின் நேருவே தன்னைப் பற்றி அப்படி கூறியதாகத் திரித்துப் பரப்பப்படுகிறது. 

மேலும் படிக்க : தற்செயலாக, பிறப்பால் மட்டுமே நான் ஒரு ஹிந்து- நேருவின் கருத்தா ?

ஜனவரி 2018 : 

நேதாஜி போர் குற்றவாளி – நேரு : 

பிரிட்டன் அரசுக்கு நேரு எழுதிய கடிதத்தில் நேதாஜியைப் போர்க் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளது எனக் கடிதம் ஒன்று பரப்பப்பட்டது. 

Facebook link 

நேருவின் கடிதம் என்று சர்ச்சையை ஏற்படுத்திய கடிதத்தில் இருக்கும் பல்வேறு தவறுகள்:

    • கிளெமென்ட் அட்லீ 1945-ல் பிரிட்டன் அரசின் பிரதமர், இங்கிலாந்து இல்லை.
    • பிரிட்டிஷ் பிரதமர் அதிகாரப்பூர்வ அலுவலகம் 10, Down street  இல்லை, 10, Downing street.
    • ஜோசப் ஸ்டாலின் ஒன்றிணைந்த சோவியத் யூனியனின் (USSR) தலைவர், ரஷ்யா அல்ல.
    • 1945-ல் சோவியத் யூனியனிடம், பிரிட்டிஷ் அல்லது அமெரிக்காவுக்கு நட்புறவு இல்லை.

மேலும், அக்கடிதத்தில் நேருவின் கையொப்பம் இல்லாமல், பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அக்கடிதத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

மேலும் படிக்க : நேதாஜியைப் போர் குற்றவாளி எனக் கூறும் நேருவின் கடிதம், உண்மை என்ன?

இப்படி நேருவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவரது ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டதாகவும் பல வதந்திகளும், தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன. 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader