காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமையா? தவறாக திரித்துப் பரப்பும் பாஜகவினர்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன? ஓர் பார்வை!

2024 மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 முதல் ஜுன் 01 வரை ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 04 அன்று அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் ஏப்ரல் 05 அன்று இந்தியாக் கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், 48 பக்க தனது தேர்தல் அறிக்கையை, காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் வெளியிட்டது.

மேலும் ‘நியாய பத்ரா’ அதாவது “நீதி பத்திரம்” என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்களுக்கு தான் முன்னுரிமை வழங்கியுள்ளது என்று கூறி பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் புகைப்படம் ஒன்றை பரப்பி வருவதையும் காண முடிகிறது.

பரவி வரும் அப்புகைப்படத்தில், காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றதும் பின்வரும் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடும், எனவே இந்தியா கூட்டணிக்கு யோசித்து வாக்களியுங்கள் என்று குறிப்பிட்டு பல வாக்குறுதிகளை அதில் வரிசைபடுத்தியுள்ளது. அவை,

  1. மும்முறை தலாக் (முஸ்லிம் தனிப்பட்ட சட்டம்) கொண்டு வரப்படும்
  2. அரசு மற்றும் தனியார் வேலைகளில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு (சச்சார் குழு அறிக்கையை அமல்படுத்துதல்)
  3. லவ் ஜிஹாதை ஆதரித்தல் (காதலிக்கும் உரிமை)
  4. பள்ளியில் புர்காவை ஆதரித்தல் (உடை அணியும் உரிமை)
  5. பெரும்பான்மைவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் (இந்து மதம்)
  6. புல்டோசர் நடவடிக்கைக்கு தடை
  7. காசா (ஹமாஸ்) ஆதரவு
  8. ஒரே பாலின திருமணம், டிரான்ஸ் இயக்கம் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக்குதல்
  9. நீதித்துறையில் முஸ்லிம் நீதிபதிகளை அதிகரிக்க வேண்டும்
  10. வகுப்புவாத வன்முறை மசோதா (கும்பல் படுகொலைகள் நிறுத்தம்)
  11. மாட்டிறைச்சியை சட்டப்பூர்வமாக்குங்கள் (எல்லாவற்றையும் உண்ணும் உரிமை)
  12. முஸ்லிம்களுக்கு தனி கடன் வட்டி
  13. தேசத்துரோகத்தை அனுமதித்தல் 

எனவே இவற்றை ஆய்வு செய்து பின்வருமாறு விளக்கியுள்ளோம்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை தவறாக திரித்துப் பரப்பும் பாஜகவினர்:

சிறுபான்மையினருக்கான சுதந்திரம்:

ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதைப் போலவே, சிறுபான்மையினருக்கும் உடை, உணவு, மொழி மற்றும் தனிப்பட்ட சட்டங்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும் என்று தனது வாக்குறுதியில் காங்கிரஸ் கூறியுள்ளது. ஆனால் இதில் பாஜகவினர் குறிப்பிட்டது போல முஸ்லீம்களுக்கு தனிச்சட்டமாக மும்முறை தலாக் முறை கொண்டு வருவது குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு:

சச்சார் குழு அறிக்கையை அமல்படுத்துதவதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைகளில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்று பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், காங்கிரஸ் அறிக்கையில் இது போன்ற எந்த வாக்குறுதியும் குறிப்பிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. மாறாக வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு, அனைத்து சாதிகள் மற்றும் சமூகத்தினருக்கும் பாகுபாடின்றி செயல்படுத்தப்படும் என்றே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருமணம் செய்து கொள்வதில், உடை அணிவதில் சுதந்திரம்:

உணவு, உடை, காதலித்து திருமணம் செய்துகொள்வது மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்றவற்றில் தலையிட மாட்டோம் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும், விதிகளும் ரத்து செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை பலரும் காங்கிரஸ் லவ் ஜிஹாதை ஆதரிக்கிறது என்றும், புர்கா அணிந்து கொள்ள காங்கிரஸ் ஆதரிக்கிறது என்றும் கூறி தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.

மதங்களில் பன்முகத்தன்மை:

இந்து பெரும்பான்மைவாதத்திற்கு காங்கிரஸ் முடிவு கட்டப் போகிறது என்று பரவிய செய்திகள் குறித்தும் தேடினோம். “இந்தியாவில் வாழும் அனைத்து மக்கள் மற்றும் இந்தியாவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுமே மனித உரிமைகளை சமமாக அனுபவிக்க உரிமை உண்டு, அதில் ஒருவரின் மதத்தை கடைப்பிடிக்கும் உரிமையும் அடங்கும். பன்முகத்தன்மையே இந்தியாவின் நெறிமுறைகளை உருவாக்குகின்றன மற்றும் அவை இந்திய அரசியலமைப்பின் முகவுரையிலும் பொறிக்கப்பட்டுள்ளன” என்று இந்திய மதங்களின் பன்முகத்தன்மை பற்றி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதை, இந்து பெரும்பான்மைவாதத்திற்கு முடிவு கட்டுவது குறித்து அறிக்கையில் கூறியுள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

தன்னிச்சையான கைதுகள் மற்றும் ஆயுதமயமாக்கலைத் தடுத்தல்:

நீதி என்ற பெயரில் வழங்கப்படும் புல்டோசர் நடவடிக்கைகளுக்கும் (Bulldozer Justice), தன்னிச்சையான மற்றும் கண்மூடித்தனமான கைதுகளுக்கும், ஆயுதமயமாக்கலையும் (Weaponisation), நீடித்த காவலையும் (Prolonged Custody), காவலில் நடக்கும் மரணங்களையும் தடை செய்வதாக காங்கிரஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

காசா மோதலில் உலக அமைதியை வலியுறுத்தும் இந்தியா:

சுதந்திரத்திற்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையில் ஒருமித்த கருத்து இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, பல பகுதிகளில், பிஜேபி/என்டிஏ அரசாங்கத்தின் கீழ் வெளியுறவுக் கொள்கையானது இந்த ஒருமித்த கருத்துக்களில் இருந்து குறிப்பிடத்தக்க விலகல்களைக் கண்டுள்ளது. குறிப்பாக தற்போது நடந்து வரும் காசா மோதலில், உலக விவகாரங்களில் அமைதி மற்றும் நிதானத்தின் குரலாக இந்தியா இருப்பதன் மூலம், உலகளாவிய நற்பெயரை இந்தியா மீட்டெடுக்க காங்கிரஸ் உறுதியளிக்கிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதில் எங்குமே காசா போருக்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்று குறிப்பிடப்படவில்லை.

LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவு:

பல ஆலோசனைக்குப் பிறகு, LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு இடையேயான சட்டங்களை அங்கீகரிக்கும் சிவில் யூனியன்களை காங்கிரஸ் கொண்டுவரும்.

இதே போன்று பாலினப் பாகுபாடு தொடர்பாக உள்ள அனைத்து சட்டங்களும் ஆராயப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் வருடத்தில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட விதிகள் நீக்கப்படும் அல்லது திருத்தப்படும் என்றும் காங்கிரஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

நீதித்துறையில் சமத்துவம்:

நீதித்துறையில் முஸ்லிம் நீதிபதிகளை அதிகரிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் நியமிக்கப்படுவார்கள் என்றே அதில் கூறப்பட்டுள்ளது.

வகுப்புவாத மோதல்கள் தடுக்கப்படும்:

வெறுப்பு பேச்சுகள், வெறுப்பு குற்றங்கள் மற்றும் வகுப்புவாத மோதல்களை காங்கிரஸ் உறுதியாக அடக்கும். என்சிஆர்பி தரவுகளின்படி, பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுக்கு துணை செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் படி அவர்களுக்கு தண்டனை வழங்குவோம் என்றும் காங்கிரஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உணவில் சுதந்திரம்:

ஒவ்வொரு குடிமகனைப் போலவே சிறுபான்மையினருக்கும் உடை, உணவு, மொழி மற்றும் தனிப்பட்ட சட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதை உறுதி செய்வோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளதை, வெறுப்புணர்வோடு, பீப் உணவுகளை (மாட்டிறைச்சி உணவுகளை) காங்கிரஸ் சட்டபூர்வமாக்கியுள்ளது என்று கூறி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மாணவர்களுக்கான சிறப்பு சலுகை:

பாஜக அரசால் செயல்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் புதுப்பிக்கும். குறிப்பாக SC, ST, OBC, EWS மற்றும் சிறுபான்மையினரைச் சேர்ந்த மாணவர்களுக்கு 7.5 லட்சம் வரை பிணையில்லாத (Collateral-Free) கல்விக் கடன்கள் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

இதை முஸ்லீம்களுக்கு மட்டும் தனி கடன் காங்கிரஸ் வழங்கவுள்ளது என்று கூறி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

தேசத்துரோக வழக்குகளை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?

தேசத் துரோகம் செய்வதை காங்கிரஸ் அனுமதிக்கிறது என்று கூறியும் சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இது குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இதன் மூலம் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை, வலதுசாரிகள் பலரும் முஸ்லீம்களுக்கு ஆதரவாகவே காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையைக் கொண்டுவந்துள்ளது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள மற்ற முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?

இளைஞர்களுக்கான நீதி (யுவ நியாய்), பெண்களுக்கான நீதி (நாரி நியாய்), விவசாயிகளுக்கான நீதி (கிசான் நியாய்), தொழிலாளர்களுக்கான நீதி (ஷ்ராமிக் நியாய்) மற்றும் சமூக நீதி (ஹிஸ்ஸேதாரி நியாய்) ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையிலேயே காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

  • ‘மகாலட்சுமி திட்டம்’ மூலம் ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குதல்
  • சமூக, பொருளாதார, சாதி ரீயிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல்
  • 2024 மார்ச் 15 வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி
  • 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செல்போன்கள் வழங்குதல்
  • மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ.1,000 ஆக உயர்த்துதல்
  • ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்படும்
  • ரூ.25 லட்சம் வரை, பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துதல்
  • முறைசாரா தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு
  • விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதற்காக குழு அமைத்தல்
  • எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரத்தொகை
  • 8-வது அட்டவணையில் புதிய மொழிகளை சேர்க்க நடவடிக்கை எடுத்தல்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு நாள் ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்துதல்
  • அந்தந்த மாநிலங்களின் விருப்பப்படியே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துதல்
  • பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான (EWS) 10% இடஒதுக்கீட்டை, அனைத்து சாதி, சமூகத்தினருக்கும் விரிவுபடுத்துதல்.

இதன் மூலம் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை செயல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்தும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே சமயம் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடாமல் உள்ளது அரசியல் வட்டாரங்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது..!!

ஆதாரங்கள்:

Congress_Manifesto_English_d86007236c

INC_2024 Manifesto_Tamil

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader