காங்கிரஸ், ஆம் ஆத்மி தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பியதால் கொரோனா வேகமாக பரவியது – பிரதமர் மோடி !

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது, பழமையான காங்கிரஸ் கட்சி கோவிட்-19 தொற்றுநோயை பாகுபாடான அரசியலுக்கு தவறாகப் பயன்படுத்துகிறது, கொரோனா முதல் அலையின் போது அனைத்து வரம்புகளை தாண்டியது என தொடர் வார்த்தை தாக்குதலை நடத்தி உள்ளார்.

மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ” கோவிட்-19 முதல் அலையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மும்பையை விட்டு வெளியேற நீங்கள்(காங்கிரஸ்) இலவச ரயில் டிக்கெட்களை வழங்கினீர்கள். அதே நேரத்தில், டெல்லி அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரத்தை விட்டு வெளியேறச் சொல்லி அவர்களுக்கு பேருந்துகளை வழங்கியது. இதன் விளைவு, பஞ்சாப், உ.பி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கோவிட் வேகமாக பரவியது ” எனப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Twitter link 

பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ” பிரதமரின் இந்த கருத்து முற்றிலும் தவறானது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் பிரதமர் உணர்வுப்பூர்வமாக இருப்பார் என்று நாடு நம்புகிறது. மக்கள் படும் துன்பங்களை வைத்து அரசியல் செய்வது பிரதமருக்கு ஏற்புடையதல்ல ” என ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ” இவர்கள் அவரால்(மோடி) கைவிடப்பட்டவர்கள். அவர்களுக்கு வீடு திரும்ப வழியில்லை. அவர்கள் நடந்தே திரும்பிக் கொண்டிருந்தனர். யாரும் உதவி செய்ய வேண்டாமா ?

2021 ஏப்ரலில் மேற்கு வங்கத்தின் அசன்சோலில் சட்டமன்ற தேர்தல் பேரணியில், ” பெரும் கூட்டத்தைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பார்வைக்கு எட்டிய தூரம் வரை என்னால் மக்களைப் பார்க்க முடிகிறது ” என பிரதமர் மோடி கூறினார். அப்போது இந்தியாவில் தினசரி 2 லட்சத்திற்கும் அதிகமான கோவிட் வழக்குகள் பதிவாகி இருந்தது ” என கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

Twitter link 

சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, ” மாநிலங்கள் கேட்கும் ரயில்களை அவர்களுக்கு வழங்காமல், அன்றைய இரயில்வே அமைச்சரால் கட்டுப்பாடற்ற ஆணவத்தில் அரசியல் செய்த போது, இந்த தேசத்தின் குடிமக்கள் சும்மா இருக்க வேண்டுமா ?  நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணம் நிறுத்தப்பட்டது. தினசரி கூலித் தொழிலாளர்கள் சிக்கித் தவித்தனர் ” என கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கொரோனா முதல் அலையின் போது அமல்படுத்தப்பட முழு ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி, உணவு இன்றி சமாளிக்க முடியாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கினர். இதற்கு எதிர்க்கட்சிகள் காரணம் என்றுக்கூட பாஜகவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், மும்பை, டெல்லி நகரங்களில் இருந்து மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் இருந்தும் கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்ற அவலம் நிகழ்ந்தது. இது சர்வதேச அளவில் பேசு பொருளானது.

கொரோனாவால் ஏற்பட்ட மோசமான சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு எப்படியாவது தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டும் என நினைத்த போது அரசு, கட்சிகள், தன்னார்வலர்கள் மூலம் கிடைத்த உதவிகள், சொந்த முயற்சியிலும் கூட சென்றுள்ளனர். 2020 மே முதல் ஜூன் வரையில் 4,450 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 60 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ளதாக இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல காங்கிரஸ் இலவச ரயில் டிக்கெட்களை வழங்கியதாக கூறும் பிரதமர் மோடிக்கு, ரயில்கள் இயக்கப்பட்டதால் தான் டிக்கெட் செலவை காங்கிரஸ் ஏற்க முன்வந்திருக்கும் தானே. அப்படி இருக்கையில், தொழிலாளர்களுக்கு உதவியதை எப்படி குற்றம்சுமத்துகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது.

பிரதமர் மோடி கொரோனா முதல் அலையின் போது வேகமாக பரவியதற்கு எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சுமத்தி பேசியது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

Please complete the required fields.
Back to top button