This article is from May 11, 2021

ரெம்டெசிவிர் அனைவருக்கும் அவசியமில்லை – ICMR Scientist பல்வேறு கேள்விகளுக்கு பதில் !

கொரோனா சமயத்தில் இரத்த தானம் செய்யலாமா என்ற கேள்வி சமூக வலைதளங்களின் ஊடாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்நிலையில், இரத்த தானம் வழங்குவது, ரெம்டெசிவிர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசெர்ச்சின் (ICMR) நோய்கள் பரவல் மற்றும் தடுப்பு (epidemiology) விஞ்ஞானி திரு. கணேஷ் குமாருடன் நடந்த நேர்காணலில் அளிக்கப்பட்ட பதில்கள் பின்வருமாறு,

கே : கொரோனா சமயத்தில் இரத்த தானம் செய்யலாமா ?

ப : நீங்கள் வழக்கமாக இரத்த தானம் செய்யும் நபராக இருந்தால் முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்பே இரத்த தானம் செய்து விடுங்கள். தடுப்பூசி போட்ட பிறகு கொரோனாவை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஒரு கால அவகாசம் தேவைப்படும், அதன் பிறகு உடம்பு முழுவதும் அந்த எதிர்ப்பு சக்தியை உள்வாங்கிக் கொள்ள ஒரு கால அவகாசம் தேவைப்படும். இரண்டாம் தடுப்பூசி போட்ட பிறகு தோராயமாக 28 நாட்கள் இதற்கு தேவைப்படும். எனவே இரண்டாம் தடுப்பூசி செலுத்திவிட்டு தோராயமாக 28 நாட்களுக்கு பிறகு இரத்த தானம் செய்ய முற்படலாம். மற்றபடி பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கியவர்கள், பிரசவத்தை எதிர்கொள்ளும் கர்ப்பிணி பெண்களள் உட்பட அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் இரத்தத்தின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே இரத்த தானத்தை கண்டு அஞ்சி அதை செய்யாமலே இருப்பது அவசியமற்றது.

கே : முதல் முறை தடுப்பூசி போட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட முடியாமல் போனால் என்ன செய்வது ?

ப : ஒருவேளை கால தாமதம் ஆகிவிட்டால் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. covaxin னை பொருத்தவரை முதல் தடுப்பூசிக்கு பிறகு இரண்டாம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள 8 வாரம் வரை அவகாசம் இருக்கிறது. Covishield-க்கு 12 வாரங்கள் வரை அவகாசம் இருக்கிறது. முதல் தடுப்பூசி போட்ட பிறகு ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானால் அவர்கள் அதில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு 29 நாட்கள் கழித்தே இரண்டாம் தடுப்பூசி போடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே அவகாசம் குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கே : முதல் தடுப்பூசிக்கும் இரண்டாம் தடுப்பூசிக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா ?

ப : இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஆனால் ஒருவர் முதல் தடுப்பூசியாக covaxin போட்டுக்கொண்டால் இரண்டாம் முறையும் அதையே போட்டுக்கொள்ள வேண்டும். Covishield-க்கும் இது பொருந்தும்.

கே : ரெம்டெசிவிர் மருந்து தேவையா (அ)) தேவையில்லையா ?

ப : கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஒருவரை இறப்பில் இருந்து தடுக்கவும், செயற்கை முறையான ஆக்சிஜன் கொடுப்பதற்கான தேவையை தவிர்க்கவும், வென்டிலேட்டரில் உள்ள ஒருவரை சீக்கிரம் அதில் இருந்து மீட்பதற்கும் ஸ்டெராய்டுகள் பெரிதும் உதவுகின்றன. இதற்கு வலுவான அறிவியல் சான்றுகள் உள்ளது.

ரெம்டெசிவிர் மருந்துக்கு அவ்வளவு சக்திகள் இல்லை. அறிவியல் சான்றுகளும் குறைவுதான். ஸ்டெராய்டு என்பது எளிதில் கிடைத்துவிடக்கூடிய மலிவு விலை கொண்ட ஒரு மருந்து. ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவ்வளவாக இல்லை, ஆகவே விலையும் அதிகம். கேள்விப்படாத புதிய வகை மருந்து எனும் காரணத்தினாலும் கொரோனா காரணமாக பதட்டமான சூழல் ஏற்பட்டதாலும் இந்த மருந்தைச் சுற்றி பதட்டமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இது இயல்பானதே. அரசில் பணிபுரிகின்ற அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் யாருக்கு பரிந்துரைக்கப்பட்டதோ அவர்களுக்கு தான் வழங்குகிறார்கள். அரசு தெளிவாகவே உள்ளது. ஆனால் பொதுமக்கள் அச்சத்தினால் தாமே மருந்தை வாங்கிக்கொண்டு செவிலியர்களின் உதவியோடு மருந்தை செலுத்திக்கொள்வதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கூறினால் ரெம்டெசிவிர் மருந்து பின்னாடி போவதில் எனக்கு ஒப்புதல் கிடையாது.

கே : கொரோனா வைரஸ் உருமாறிக்கொண்டு இருப்பதால் அதற்கான சரியான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறுகிறார்களே. மேலும் தற்போது போட்டுக்கொள்ளும் தடுப்பூசி எதிர்காலத்தில் உருமாறிய கொரோனவை தடுக்கும் ஆற்றல் உடையதா ?

ப : ஒரு வைரஸ் அதிகமாக பரவும்போது இயல்பாகவே அந்த வைரஸ் பல வகையாக உருமாறும் அதற்கு mutant வைரஸ் என்று பெயர். Covaxin மற்றும் Covishield இரண்டுமே mutant வைரஸில் இருந்தும் நம்மை காக்கும் என அறிவியல் ரீதியாக வலுவான ஆதாரங்கள் உள்ளன. எதிர்காலத்தில் வரும் mutant வைரஸ்களை எதிர்கொள்வதற்கு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

கே : தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறதே பிறகு ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் ?

ப : முதலில் தடுப்பூசியின் பலனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி கொரோனாவினால் ஏற்படும் மரணத்தை பெருவாரியாகக் குறைக்கும், கொரோனாவின் தீவிர தாக்கத்தை மட்டுப்படுத்தும், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை முழுமையாக இல்லை என்றாலும் தடுப்பூசி பெருவாரியாக தடுக்கும். அதனால் தான் தடுப்பூசி போட்ட பிறகும் மாஸ்க் அணிவது போன்ற நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் முக்கியமாக தடுப்பூசி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம்.

கே : மூன்றாம் அலை வருமா? அதன் தீவிரம் எப்படி இருக்கும் ?

ப : மூன்றாம் அலையை கண்டிப்பாக தடுக்க முடியாது. அது இரண்டாம் அலையை விட தீவிரமாக இருக்குமா எனும் கேள்விக்கான பதில் நம்ம கையில்தான் உள்ளது. vaccine coverage எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் சதவீததை அதிகப்படுத்தினால் தற்போது இருக்கும் அபாயகரமான சூழல் மறுபடியும் வராமல் தடுக்கலாம்.

Please complete the required fields.




Back to top button
loader