வாசலில் பிரிந்த உயிர், அருகில் வர பயந்த மக்கள் : மதுரையில் சோகம் !

மதுரை கூடல் நகரை சேர்ந்த நமது வாசகர் ஒருவர் சந்தித்த நிகழ்வு ஒன்றை நம்முடன் பகிர்ந்து இருந்தார். கடந்த புதன் அன்று காலை அவர் வசிக்கும் பகுதியான கூடல் நகரில் ஒரு வயதான பெண்மணி தன் வீட்டின் வாசலில் மயங்கிய நிலையில் இருப்பதை மக்கள் கண்டுள்ளனர். வீட்டைச் சுற்றி மக்கள் கூடிய நிலையில் பின்னர் தான் அவர் இறந்து கிடப்பதை அறிந்தனர். கொரோனா அச்சம் காரணமாக யாரும் அந்த பெண்மணியிடம் நெருங்கவில்லை.
ஞானஒளிபுர பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அந்த பெண்ணின் மகன் ஜார்கண்டிலும், மகள் அமெரிக்காவிலும் பணிபுரிகின்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இறுதியில் அங்கிருந்தவர்கள் மாநகராட்சிக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.
பின்னர் மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து இறந்த பெண்ணிற்கான இறுதிச்சடங்கு வேலையைச் செய்துள்ளனர். உடலின் அருகே கூட யாரும் செல்லவில்லை, கொரோனா அச்சம் காரணமாக மக்களிடையே அச்சம் அதிகரித்து, மனிதம் சுருங்கிக்கொன்டே போகிறது என்று அந்த வாசகர் நம்முடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.
சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த வயதான பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என அங்கிருந்தவர் தகவல் தெரிந்து இருந்தார். ஆனால், அது உறுதியாக தெரியவில்லை.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை பெரிதும் பாதித்து வரும் நிலையில், மருத்துவமனையில் படுக்க இடமில்லாமல், சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாமல், எரியூட்டக்கூட இடமில்லாமல் பல மணி நேரங்கள் வரிசையில் காத்திருந்து உடல்களை எரிக்கும் அவல நிலையில் மக்கள் இருப்பதை நாம் கண்டு வருகிறோம். கொரோனாவால் இந்தியாவின் நிலை கண்டு உலக நாடுகளும் கவலை கொண்டுள்ளன.
இதற்கிடையில், கையில் இருக்கும் பணத்தையோ, பொருளையோ விற்று ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்குவது, கொரோனாவால் இறந்தவர்களின் உடலை சாதி, மத வேறுபாடு இன்றி அடக்கம் செய்ய உதவுபவர்களால் மனிதம் நீர்த்துபோகாமல் இருக்கிறது. ஆனால், அது அனைத்து இடங்களிலும் சாத்தியம் என சொல்லிவிட முடியாது. அதற்கு காரணமாக அமைந்து இருப்பது கொரோனா அச்சமே !
கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள், குறிப்பாக வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் மருத்துவமனையை நாடுங்கள், உதவுவதற்காக யாரேனும் தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள், முன்னெச்சரிக்கையாக இருங்கள், அதிகம் கவனத்துடன் இருக்க வேண்டியது நமக்கான தேவை என்பது அறிந்து கொள்ளுங்கள் !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.