This article is from May 21, 2021

இப்போ கொரோனா தேவி, அப்போ பிளேக் மாரியம்மன்.. கோவையில் மட்டுமே கோவில் இருக்கிறதா ?

கோவிட்-19 பெருந்தொற்றல் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கையில் கோவை அருகே  இருகூரில் ” கொரோனா தேவி ” சிலை அமைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிலைக்கு 48 நாட்கள் மகா யாகம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், பக்தர்களுக்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து இருகூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், ” முன்பு அம்மை நோய், காலரா ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர். அப்போது தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். வேப்பிலை கும்பங்களும் நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம் பிற்காலத்தில் கோவிலாக மாறியது ” எனத் தெரிவித்ததாக செய்தியில் வெளியாகியது.
கோவை வட்டாரத்தில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டது சமூக வலைதளங்களில் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் இருப்பதாக கல்வெட்டு ஒன்றின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நோய்களை குணப்படுத்தும் கடவுள் என மக்கள் வழிபாடு  செய்வதும், கோவில் எழுப்புவதும் இங்கு புதிதான ஒன்று அல்ல. உலகம் முழுவதும் பிளேக் நோய் பாதிப்பு பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், காலரா, அம்மை போன்ற நோய்களுக்காவும் மக்கள் பலியாகிக் கொண்டிருந்த போது கடவுள் வழிபாடுகளை மக்கள் நம்பி இருந்தனர். வழிபட்ட இடங்கள் கோவிலாக மாறியுள்ளன.
 
கோவையில் பாப்பநாய்க்கன் பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்து இருப்பதாக 2019-ல் வெளியான செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது. கோவை உள்பட கொங்கு மண்டலத்தின் சில இடங்களில் பிளேக் மாரியம்மன் கோவில் இருக்கின்றன. எனினும் பிளேக் மாரியம்மன் கோவில் கொங்கு மண்டல பகுதியில் மட்டுமே அமைந்திருக்கவில்லை.
.
நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களிலும் பிளேக் நோய்க்காக வழிபாடு செய்யப்பட்ட நிகழ்வுகளும், கோவில்களும் உள்ளன.
பிளேக் போன்ற தொற்று நோய்கள் குறித்த புரிதல் இல்லாத காலத்தில் மக்கள் கடவுளை நம்பி இருந்தனர். அதற்கான வழிபாடுகள் நடத்தி, கோவிலையும் கட்டி இருக்கிறார்கள். ஆனால், நோய்கள் குறித்தும், மருத்துவ கட்டமைப்பும் வளர்ந்த காலத்தில் கூட தோன்றிய தொற்றுக்கு கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டு யாகம், வழிபாடு நடத்தி வருகின்றனர்.
.
கொரோனா தேவி :
.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தேவி வழிபாடு செய்வது தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே பல மாநிலங்களில் நிகழ்ந்து இருக்கிறது.
கடந்த ஆண்டு கேரளாவில் ஒருவர் கொரோனா தேவி வழிபாடு செய்த நிகழ்வு செய்திகளில் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் கொரோனா தேவி வழிபாடு செய்த செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்தியா முழுவதும் நிலை இப்படி இருக்க, சில நூற்றாண்டுகளுக்கு பிறகு கொரோனா தேவிக்கும் கோவில் அமைக்கப்பட்டு, புராணங்கள் பாடப்படும் என நெட்டிசன்கள் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
.
Link :
Please complete the required fields.




Back to top button
loader