கொரோனாவிற்கு கோமியம், அப்பளம் என பாஜக தலைவர்கள் சொன்ன பலே யோசனைகளின் தொகுப்பு !

இந்திய அரசின் கொரோனா பெருந்தொற்று மேலாண்மை குறித்தும், அதனால் ஏற்பட்ட அவலங்களையும் உலக செய்தி நிறுவனங்கள் காட்சிப்படுத்திய போது தான் இந்தியாவில் இருக்கும் நிலைமை அறியாத பல இந்தியர்கள் தட்டி எழுப்பப்பட்டனர். 

பல்வேறு பிராந்திய செய்தி நிறுவனங்களும், சமூக வலைத்தளங்களில் இயங்கும் செய்தி ஊடகங்களும் இங்கொன்றும் அங்கொன்றுமாக கொரோனாவின் கோர தாண்டவத்தையும், மத்திய அரசின் அக்கறையற்ற போக்கையும் தொடர்ந்து கேள்வி கேட்டு செய்தி அறிக்கைகளை வெளியிட்டு கொண்டுதான் இருக்கின்றன. 

இந்தியாவில் கொரோனா தொற்றை மத்திய அரசு கையாண்டது குறித்து எழும் கேள்விக்கு முழுமையான பதில்களை கொடுப்பது இந்த கட்டுரையின் நோக்கமில்லை என்றாலும் இந்திய அரசியலில் பெரும் முக்கியமான பொறுப்பில் வகிக்கும் பாஜக ஆட்சியாளர்களின் குரல்கள் கொரோனா இரண்டாம் அலை குறித்து இந்திய குடிமக்களுக்கு தெரியப்படுத்தியதை தொகுத்து அளிப்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். 

உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் :

” ஹரித்துவாரில் கும்பமேளா கங்கை கரையில் திறந்த வெளியில் நடைபெறுவதால் கொரோனா பரவாது.. மிக முக்கியமாக, கும்பமேளா கங்கை நதிக்கரையில் நடக்க உள்ளது. மா கங்காவின் ஆசீர்வாதங்கள் உள்ளது. எனவே, கொரோனா தொற்று பரவாது பக்தர்களின் நம்பிக்கை கோவிட்-19 குறித்தான பயத்தை வெல்லும் ” எனக் இக்கருத்தை சொன்ன ஒருசில நாட்கள் கழித்து தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் :

“ஒரு தத்துவ கோணத்தில் இருந்து பார்த்தால், கொரோனா வைரஸ் ஒரு உயிரினமாகும்.  மற்றவர்களைப் போல வாழ அதற்கும் உரிமை உண்டு. ஆனால் நாம் (மனிதர்கள்) நம்மை மிகவும் புத்திசாலிகள் என்று நினைத்து அதை அழிக்க தயாராக இருக்கிறோம். எனவே அது தொடர்ந்து தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது ” என முன்னாள்உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்து இருந்தார்.

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா :

அசாமில் கோவிட் தொற்று இல்லை, இப்போது அசாமில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை.. தேவைப்பட்டால் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு அறிவிப்பேன்.” என ஏப்ரல் 3 ஆம் தேதி தெரிவித்து இருந்தார். அன்றைய தேதியில் அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,268. 

Twitter link 

குஜராத்தின் பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் :

உழைப்பவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கின்றனர். பாஜகவின் ஆட்கள் உழைக்கிறார்கள், எனவே அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவதில்லை ”எனக் கூறினார். இவர் சில மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநில சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா :

வெயிலிலும், மண்ணிலும் பணிபுரியும் இந்தியர்கள் (பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகள் மற்றும் களப்பணியாளர்கள்), கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட முடியாது. வைரஸ் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருப்பவர்களையே பாதிக்கிறது.”

Twitter link 

மத்திய பிரதேசத்தின்  பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் :

” இந்திய மாடுகளின் சிறுநீரை நாம் குடித்தால், அது நம் நுரையீரலில் தொற்றுநோயைக் குறைக்கிறது, நான் அதை ஒவ்வொரு நாளும் குடிக்கிறேன். அதனால்தான் இப்போது எனக்கு கொரோனா வைரஸ் இல்லை” என பாஜக எம்பி பிரக்யா சிங் சமீபத்தில் பேசியது இந்திய அளவில் வைரலாகியது.

Twitter link 

மத்திய பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேல் :

மத்தியப் பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேல் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் குறித்து பேசுகையில், ” இந்த மரணங்களை யாராலும் தடுக்க முடியாது. எல்லோரும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான ஒத்துழைப்பைப் பற்றி பேசுகிறார்கள்.. ஒவ்வொரு நாளும் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். மக்கள் வயதாகிறார்கள், எனவே அவர்கள் இறக்கத்தான் செய்வார்கள்” என ஏப்ரல் மாதத்தில் பேசியதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் வீடியோ வெளியாகி இருக்கிறது.

Twitter link 

கொரோனா அப்பளம், மத்திய அமைச்சர் :

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சரான அர்ஜுன் ரேம் மேக்வால், அப்பளம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு அணுக்களை உடலில் உண்டாக்கும் தன்மை உள்ளதாக ” பாபிஜி பப்பட் ” எனும் அப்பளத்தை அறிமுகம் செய்து இருந்தார்.  ஆனால், அடுத்த மாதமே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

உபி எம்எல்ஏ சுரேந்திர சிங் :

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைரியா தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், பசுவின் சிறுநீரை(கோமியம்) குடிப்பதன் மூலம் கொரோனாவை தடுக்கலாம் என பசுவின் சிறுநீரைக் குடிக்கும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதே எம்எல்ஏ சில மாதங்களுக்கு முன்பு, தாஜ்மகாலின் பெயர் ” ராம் மஹால் ” அல்லது ” சிவ மஹால் ” என மாற்றப்படும் எனப் பேசியது சர்ச்சையாகியது.

அசாம் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிப்பிரியா :

2020 மார்சில் அசாம் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிப்பிரியா, மாட்டு கோமியம் மற்றும் சாணம் கொரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் ” எனப் பேசி இருந்தார்.

குறிப்பாக, வட மாநிலங்களில் பசுவின் சிறுநீர், சாணம் புனிதமாக பார்ப்பது மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் மருத்துவமாகவும் பார்க்கிறார்கள். அவற்றின் விளைவால் கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் அறிவியல்ரீதியாக நிரூபணம் ஆகாத கருத்துக்களை தெரிவிப்பதால் பலரும் அதை முயற்சியும் செய்து விடுகின்றனர்.

சமீபத்தில் கொரோனா வரக்கூடாது என உடல் முழுவதும் சாணத்தை பூசிய சிலரின் வீடியோ இந்திய அளவில் வைரலாகியது. ஆனால், மாட்டுச் சாணத்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை செய்வது வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள தேசிய கட்சியை சேர்ந்த தலைவர்கள் பொறுப்பில்லாமல் பல கருத்துக்களை தெரிவித்து மக்களை தவறாக வழிநடத்திச் செல்கிறார்கள் என்கிற கண்டனங்களும், கிண்டல்களும் நெட்டிசன்களால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

Links

devotees-faith-will-overcome-fear-of-covid-19-in-mahakumbh-cm-rawat

coronavirus-a-living-organism-has-right-to-exist-trivendrarawats-shocker-on-pandemic

covid-19-bjp-workers-not-infected-as-they-work-hard-says-mla

minister-arjun-ram-meghwal-tests-positive-for-coronavirus

bjp-mla-bairia-surendra-singh-cow-urine-gaumutra-to-stop-covid19-on-camera

gaumutra-gobar-may-cure-coronavirus-says-assam-bjp-mla-suman-haripriya-in-assembly

Please complete the required fields.
Back to top button