This article is from Sep 16, 2021

கொரோனா தொடர்பான வதந்திகள் பரவிய நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வு அறிக்கை !

இந்தியாவில் ஸ்மார்ட்போன், இன்டர்நெட், சமூக வலைதள பயன்பாடு அதிகரித்து வருவதற்கு இணையாக இணையத்தில் பரவும் தவறான தகவல், வதந்திகளின் எண்ணிக்கையும் போட்டி போடுகிறது. உதாரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்து எண்ணற்ற போலிச் செய்திகள், தவறான தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.

” எலுமிச்சை, கிராம்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட கொரோனா மருந்து, கோவிட்-19 தடுப்பூசியால் உடலில் காந்தப் பண்புகள் உருவாகிறது. எலுமிச்சை சாற்றை மூக்கில் வைத்தால் கொரோனா அழியும் ” என எண்ணற்ற தவறான தகவல்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடையே பரப்பப்பட்டது. இப்படி பரப்பப்பட்ட தவறான தகவல்களை நம்பி முயற்சித்து பார்த்து உயிரிழந்த சம்பவம் கூட நிகழ்ந்து இருக்கிறது.

இந்நிலையில், சேஜிங் சர்வதேச நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பில் ” 138 நாடுகளில் கோவிட்-19 தவறான தகவல்களின் பரவல் மற்றும் ஆதாரப் பகுப்பாய்வு ” எனும் ஆய்வு தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வின்படி, சமூக ஊடகங்களில் கோவிட்-19 தொடர்பாக மிகப்பெரிய அளவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வில், 138 நாடுகளில் உருவாக்கப்பட்ட 9,657 தவறான தகவல்கள் மற்றும் 94 உண்மை கண்டறிதல் அமைப்புகளால் சரிபார்க்கப்பட்டவை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளில், இந்தியா(15.94%) அதிக அளவில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை உருவாக்கி இருக்கிறது. நாட்டின் அதிக இணைய ஊடுருவல் விகிதம், சமூக வலைதள பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பயனர்களுக்கு இணையம் பற்றிய கல்வியறிவு இல்லாதது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அடுத்தப்படியாக, அமெரிக்கா (9.74%), பிரேசில்(8.57%) மற்றும் ஸ்பெயின்(8.03%) ஆகியவை கோவிட்-19 தொடர்பான அதிக தவறான தகவல்கள் பரவிய நாடுகள் என முடிவுகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய அளவில் தவறான தகவல்களை உருவாக்குவதில் சமூக ஊடகங்கள்(84.94%) பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, பெரும்பாலான கோவிட்-19 தொடர்பான தவறான தகவல்களுக்கு இணையமே(90.5%) பொறுப்பு. சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் தளம் மட்டுமே 66.87 சதவீதம் தவறான தகவல்களை உருவாக்குகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

” தற்போதைய போக்குகளைப் பொறுத்தவரை, தவறான தகவல்களின் பரவல் மார்ச் 2020-ல் உச்சத்தில் இருந்தாலும், அது 2021-ல் சற்று அதிகரிக்கக்கூடும் ” எனக் கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் இணைய பயன்பாடு : 

” IAMAI Kantar ICUBE-ன் அறிக்கைப்படி, கடந்த ஆண்டில் இந்தியாவின் கிராமப்புறத்தில் 299 மில்லியன் இணையப் பயனர்கள் அல்லது இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் 31% இருப்பதைக் காட்டுகிறது. கிராமப்புறங்களில் இணைய ஊடுருவல் வேகமாக வளர்ந்து வருகிறது. IAMAI அறிக்கை 2025-க்குள், நகர்ப்புற இந்தியாவை விட கிராமப்புற இந்தியாவில் அதிக இணைய பயனர்கள் இருப்பார்கள் ” எனக் கூறுவதாக ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதில் இந்தியா முதலிடம் வகிக்க இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தது காரணமாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் அனைத்து உண்மையா எனும் சிந்தனை மற்றும் இணையம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாததே முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது !

Links : 

Prevalence and source analysis of COVID-19 misinformation of 138 countries

How heavy internet usage and poor digital literacy made India world’s top source of misinformation on COVID-19

Internet Adoption in India ICUBE 2020

Please complete the required fields.




Back to top button
loader