This article is from Jun 15, 2020

“ஓ” வகை இரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தாக்காதா ?- மருத்துவரின் பதில்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா நோயாளிகளின் இரத்த பிரிவு அடிப்படையில் கொரோனா தாக்கப்பட்ட விவரங்கள் வெளியான. இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு ” ஓ ” பாசிட்டிவ் இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தாக்காது, அவர்களுக்கு அபாயம் குறைவு என செய்தித்தாள்களில் வெளியான தகவல் தீயாய் பரவியது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் ” ஓ ” பிரிவு இரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா  வைரஸ் (கோவிட்-19) வரவே வராது என்கிற எண்ணம் பரவி ட்ரோல் வீடியோக்கள், மீம்ஸ் குவிந்தன.

” ஓ ” பிரிவு இரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காதா, இரத்த வகையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு குறித்த கேள்விகளுக்கு மருத்துவர் பிரவீன் யூடர்னுக்கு அளித்த விரிவான பதிலை காண்போம்.

கேள்வி: ” ஓ ” பிரிவு இரத்தம் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியான ஆய்வு குறித்து உங்களின் கருத்து ?

பதில் : 23andMe எனும் மரபணு ஆய்வு நிறுவனமொன்று கொரோனா வைரஸ்(கோவிட்-19) பாதித்தவர்கள், குணமாகியவர்களிடம் இருந்து பொதுவான தகவல்களை பெற்றுள்ளனர். அதனுடைய முடிவே தற்போது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 7,50,000 பேரிடம் தகலில், ” ஓ ” பாசிட்டிவ் இரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு 9 முதல் 18 சதவீதம் குறைவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ” ஏ ” பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக உள்ளதாக அவர்களின் ஆய்வில் கண்டறிந்து உள்ளனர்.

கேள்வி : இதுபோல் வேறு ஆய்வுகள் வந்துள்ளதா ?

பதில் : இதுதான் முதல் முறையாக எடுக்கப்பட்ட ஆய்வு எனக் கூற முடியாது. முதன் முதலில் சீனாவிலேயே 1,500 பேரிடம் இவ்வாறான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போதே ” ஓ” பிரிவு இரத்தம் உள்ளவர்களுக்கு பாதிப்பு குறைவு, “ஏ” பிரிவு கொண்டவர்களுக்கு அதிகம் என வெளியாகியது. இதையடுத்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் இதே மாதிரியான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறாக எடுக்கப்பட்ட ஆய்வுகளில், ” ஓ” பிரிவு குறைவானதாகவும், ” ஏ ” பொதுவாக பாதிக்கப்பட்ட பிரிவாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.

இதை மட்டுமே வைத்துக் கொண்டு ” ஓ ” பிரிவுக்கு தொற்று ஏற்படாது, பாதுகாப்பான இரத்த வகை என்றுக் கூறி விட முடியாது. அவர்களின் ஆய்வு, ” ஏ ” பிரிவில் உள்ளவர்களை விட ” ஓ ” பிரிவில் உள்ளவர்களுக்கு 18 சதவீதம் குறைவாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதே தவிர ” ஓ ” பிரிவு கொண்டவர்களுக்கு கோவிட்-19 தொற்று வரவே வராது எனக் கூறவில்லை.

மேலும், இது மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வே. கொரோனாவிற்கும், இரத்த வகைக்கும் நேரடி தொடர்பு என எதுவும் கிடையாது. உதாரணமாக, புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் என அனைவருக்கும் தெரியும். அதேபோல், புகைப்பிடிப்பவர்களுக்கு பல் சொத்தைக் கூட வரலாம். அதற்காக பல் சொத்தை உள்ளவர்களுக்கு எல்லாம் புற்றுநோய் வரும் எனச் சொன்னால் எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதோ, அது போலத்தான் இதுவும். கண்டிப்பாக, ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுபோல், தலையில் வழுக்கை உள்ளவர்களுக்கு கூட கொரோனா வரும் என வெளியாகி வைரலாகியது. பெரும்பாலும், வயதானவர்கள் கோவிட்-19 தொற்று பாதித்து இறந்துள்ளனர். வயதானவர்களுக்கு தலையில் வழுக்கை இருப்பது பொதுவானது. அதற்காக தலையில் வழுக்கை உள்ளவர்களுக்கு எல்லாம் தீவிரமாக கொரோனா வரும் என கூறமுடியாது அல்லவா.

இந்தியாவில் மிகவும் பொதுவான இரத்த வகையாக ” ஓ ” (37.12%), ” பி ” (32.16%) முதலில் உள்ளன. இதையடுத்தே, ” ஏ ” (22.88%) பிரிவு உள்ளது.

கேள்வி : மக்கள் என்ன செய்ய வேண்டும் ?

பதில் : இதுபோல், நூற்றுக்கணக்கான ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆய்வுகளை மட்டும் எடுத்துக் கொண்டு நாம் எச்சரிக்கை இன்றி இருக்கக் கூடாது. இதுபோன்ற ஆய்வுகளால் ” ஓ ” பிரிவு எல்லாம் பாதுகாப்பானது என கூறி விட முடியாது. தற்போதைக்கு மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது, மாஸ்க் அணிந்து செல்வது மற்றும் சரியான முறையில் கைகளை கழுவதல் போன்ற தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் பரவுவது போன்று நமக்கு ” ஓ ” பிரிவு இருப்பதால் கொரோனா வராது என்ற தவறான எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள கூடாது.

Proof links : 

23andMe finds evidence that blood type plays a role in COVID-19

Could your blood type help protect you from coronavirus? People with Type O are nearly 20% LESS likely to test positive for COVID-19, 23andMe study of 750,000 people finds

ABO and Rh (D) group distribution and gene frequency; the first multicentric study in India

Please complete the required fields.
Back to top button
loader