கொரோனா தடுப்பூசி செலுத்தும் முன் CRP சோதனை அவசியமா ?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ” கார்டியோலஜிஸ்ட் டி.ஆர்.சுரேந்திரனின் பரிந்துரை: கோவிட் தடுப்பூசி (கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின்) எடுப்பதற்கு முன் எந்த ஆய்வகத்திலும் சிஆர்பி(CRP) டெஸ்ட் (சி-ரியாக்டிவ் புரோட்டீன் டெஸ்ட்) எடுக்கவும். இதற்கு சுமார் ரூ.300/- செலவாகும். இது உயிர்களைக் காப்பாற்றும்!. இது இரத்தத்தில் ஏதேனும் தொற்றுநோய் இருப்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், உங்கள் இரத்தத்தில் தொற்று இருப்பதுடன் தடுப்பூசி போட்டால், பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, நீங்கள் தவறாமல் 45 வயதுக்கு மேல் இருந்தால் சிஆர்பி டெஸ்ட் எடுக்கவும் ” எனும் தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து வெளியான செய்திக் கட்டுரையில் முதல் வாக்கியமாக, ” தடுப்பூசி எடுப்பதற்கு முன்பாக, மருந்துகளால் ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஒரு நபர் தடுப்பூசி எடுப்பதற்கு முன்பு சி-ரியாக்டிவ் புரோட்டீன்(சிஆர்பி), சிபிசி அல்லது இம்யூனோகுளோபுலின்-இ(ஐஜிஇ) அளவுகள் குறித்து அறிய மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும் ” என வெளியாகி இருக்கிறது.
CRP சோதனை பற்றி அறிய மருத்துவர் பிரவீன் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” அலர்ஜி, கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள், நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஆகிய நிலைமைகளில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பூசி செலுத்தும் போதே மருத்துவர்கள் இக்கேள்விகளை கண்டிப்பாக கேட்பார்கள்.
அலர்ஜி, நோய்த்தொற்று போன்றவை இருக்கும்பட்சத்தில் சி-ரியாக்டிவ் புரோட்டீன் எனும் சிஆர்பி சோதனை அறிவுறுத்தப்படுகிறது. சிஆர்பி சோதனையில் அளவுகள் அதிகமாக இருந்தால், உங்கள் உடலில் அலர்ஜி அல்லது நோய்த்தொற்று இருப்பதாக அர்த்தம். அதுபோன்ற நிலைகளில் காத்திருந்து சாதாரண நிலைக்கு திரும்பிய பிறகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நோய்த்தொற்றுக்கு எதிராக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் செயல்படும் போது மேற்கொண்டு தடுப்பூசி செலுத்துவது இம்யூனிட்டிக்கு சுமையாகவே இருக்கும்.
சிஆர்பி மூலம் நோய்த்தொற்று இருக்கிறதா இல்லையா என நமக்கு தெரியவரும் என்பது உண்மையே. ஆனால், 45 வயதிற்கு மேலே உள்ள அனைவருக்கும் பரிசோதிக்க வேண்டுமா என்றால், அலர்ஜி மற்றும் நோய்த்தொற்று போன்ற மருத்துவ வரலாற்றைக் கொண்டவர்கள் பரிசோதித்து கொள்ளலாம். அனைவருக்கும் சோதனை செய்து பார்ப்பது என்பது கடினமே. இதற்கான கட்டணம் ரூ.300 முதல் ரூ700 என ஆய்வகத்திற்கு ஏற்ப மாறுபடும். சிஆர்பி சோதனை அளவுகள் அதிகமாக இருக்கும் போது தடுப்பூசி செலுத்த வேண்டாம். மருத்துவரின் அறிவுரை பெற்று காத்திருந்து செலுத்திக் கொள்ளலாம் ” எனத் தெரிவித்து இருந்தார்.