சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது அமெரிக்க சதியா ?

சீனாவின் வுஹான் பகுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (2019 nCoV) ஆல் 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளுக்கும் பரவி வரும் வேளையில், வைரஸானது எங்கிருந்து, எப்படி உருவானது என்பது உள்ளிட்ட கேள்விகள் அனைவரிடத்திலும் உள்ளது. இந்த கேள்விக்கு சரியான பதில் இல்லாத காரணத்தினாலேயே பல கதைகள் இணையத்தில் பரப்பப்படுகின்றன.
குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் அமெரிக்க சதி எனும் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க திட்டமிட்டு கொரோனா வைரஸை பிற நாடுகளில் பரப்பி விட்டு உள்ளதாவும், கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தினை வைத்து இருப்பதாகவும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் என பல்வேறு சுகாதார அறிவுரைகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் (2019 nCoV) எப்படி பரவியது, அதை சமாளிக்க தேவையான தடுப்பு மருந்து உள்ளிட்டவையை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் முயன்று வரும் வேளையில், வைரசை பரப்பியது அமெரிக்கா என பரப்பி இருக்கிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் கிர்க்காஃப் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், புதிய வைரஸ் என தற்போது குறிப்பிடப்பட்டு வரும் கொரோனா வைரஸ் 2015-ம் ஆண்டே ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது (2013-ம் ஆண்டில் இருந்தே உருவாக்கப்பட்டு உள்ளது). இதற்கான காப்புரிமை காலாவதியான முதல் நாளிலேயே அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வழக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தினை கண்டுபிடிக்க அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உதவியாக காப்புரிமை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆகையால், இத்தகைய கண்டுபிடிப்பில் அமெரிக்க அரசிற்கு உரிமைகள் உள்ளன. 2015-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட காப்புரிமை ஆவணத்தில் இந்த வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி இருப்பதை குறிப்பிட்டு இருக்கும் போதும்கூட, தற்பொழுது கொரோனவை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறதா ? என காப்புரிமை ஆணவத்தையும் இணைத்து பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு 5 ஆயிரம் ஷேர்களை பெற்று வைரலாகி உள்ளது.
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி காப்புரிமை என வழங்கப்பட்டு இருக்கும் காப்புரிமை ஆவணம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவை. இந்த காப்புரிமை ஆவணம் கொரோனா வைரஸிற்கு வழங்கப்பட்டது என்றாலும் தற்பொழுது சீனாவில் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் (2019 nCoV)-கானது அல்ல. கொரோனா வைரஸ் (SARS-CoV) பாதிப்பிற்காக தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை ஆவணம்.
கொரோனா என்பது ஒரு வகையான வைரஸ் குடும்பம். இந்த வைரஸ் குடும்பத்தில் ஆபத்தை விளைவிக்கும் 6 வைரஸ்கள் இருப்பதாக கூறி வந்த வேளையில் ஏழாவதாக நோவல் கொரோனா வைரஸ் (2019 nCoV) புதிதாக இணைந்துள்ளது. சார்ஸ்-CoV வைரஸ் 2002-2003 வரையிலான காலக்கட்டத்தில் சீனாவில் தாக்கி பலரின் உயிரைப் பறித்தது.
பொதுவாக கொரோனா வைரஸ் எனக் கூறுவதன் விளைவாக தவறாக புரிந்து கொண்டு அமெரிக்காவிடம் முன்பே கொரோனா வைரஸின் தடுப்பு மருந்திற்கு காப்புரிமை இருப்பதாக பரப்பி உள்ளனர். 2002-ல் இருந்து பல வகையான கொரோனா வைரஸ்கள் பரவி உள்ளன.
கொரோனா வைரஸ் ஆயுர்வேத மருந்து :
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தடுப்பதற்கு ஹோமியோபதி மருந்தினை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளதாக சில தகவல்கள் வைரலாகின. ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30-ஐ வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரை சர்ச்சையாகியது. இது எந்த அளவிற்கு விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் முதன்மையாக இருந்தன.
மேலும் படிக்க : கொரோனா வைரஸை தடுக்கும் ஹோமியோபதி மருந்தினை அரசு வெளியிட்டதா ?
உப்பு கலந்த நீர் :
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலே போதும் எனும் தகவல் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. ஆனால், உப்பு நீரால் வாய் கொப்பளித்தன் மூலம் புதிய கொரோனா வைரஸ் கொல்லப்படும் என சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஏதுமில்லை.
” இது தவறான தகவல், உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளிப்பது நோயில் இருந்து பாதுகாப்பை வழங்கும் என்பதற்கு உறுதியான எந்தவொரு ஆதாரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை ” என உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்து உள்ளதாக AFP முகமை செய்தி வெளியிட்டு இருந்தது.
சீன கப்பல் :
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் வேளையில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளதாக செய்தியானது முதன்மை ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் படிக்க : சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்ததா ?
ஆனால், சென்னை துறைமுகத்திற்கு அப்படியொரு கப்பல் வரவில்லை என சென்னை துறைமுக அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. புதிய கொரோனா வைரஸ் (2019 nCoV) தொடர்பாக பல்வேறு புரளிகள், தவறான தகவல்கள் பல நாடுகளில் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது. பார்க்கும் பதிவுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.