மக்களிடையே வைரஸ் பீதியை கிளப்பிய 11.17 நிமிட வாட்ஸ் அப் ஆடியோ.

உலகளாவிய பெரும் தொற்றாக அறிவிக்கப்பட்டு உள்ள கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. கோவிட்-19(கொரோனா வைரஸ்) பரவத் தொடங்கிய சீனாவில் புதிதாக பாதிக்கப்பட்ட வழக்குகள் இல்லை என்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களில் 74 ஆயிரம் பேர் மீண்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டு இருந்தது.

Advertisement

ஆனால், சீனாவில் இருந்து பரவி பிற நாடுகளான இத்தாலி, அமெரிக்க போன்றவற்றில் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உலக அளவில் கோவிட்-19 வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 85 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

இந்நிலையில்தான், வாட்ஸ் அப்பில் பரவி வரும் 11.17 நிமிட ஆடியோ பதிவு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இருவர் பேசிக் கொள்ளும் ஆடியோவில், முதலில் பேசும் நபர் வைரஸ் பாதிப்பிலும், சுகாதார வசதிகள், தொழில்நுட்பம் போன்றவற்றில் அமெரிக்காவையும், இந்தியாவையும் ஒப்பிட்டதோடு, 3 மாதத்தில் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கப் போவதாக எச்சரித்து இருப்பார். அமெரிக்காவில் தெரிந்தவரின் நண்பர் இறந்த சம்பவத்துடன், இதுவரை அமெரிக்காவில் 53,000 இறந்துள்ளனர், அங்கே 50,000 என்றால் இந்தியாவில் 5 லட்சம் எனத் தெரிவித்து இருப்பார். மே மாதம் வரையில் குறைந்தபட்சம் 6 லட்சம் பேர் இறந்து விடுவார்கள் என அரசுக்கே தெரியும் எனக் கூறியுள்ளார்.

அச்சத்தில் இருக்கும் மக்களிடம் தவறான தகவல்களை கூறி மேன்மேலும் பதற்றத்தை உருவாக்குவது சரியல்ல. அமெரிக்காவில் வைரசால் 53,000 பேர் இறந்துள்ளதாக கூறி இருக்கிறார். ஆனால், உலக அளவில் கோவிட்-19 வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,117 (மார்ச்27) இருக்கையில் அமெரிக்காவில் மட்டும் 53,000 எனத் தவறாக தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் 85,612 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,307 மற்றும் மீண்டவர்களின் எண்ணிக்கை 1,868 பேர்.

Advertisement

ஆடியோவில் கோவிட்-19 தொற்று வெளியாகி ஒரு வருடம் ஆகியும் மருந்து கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள் என்பதை கூறும் போதே தெரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் ஆடியோவில் பேசியவர்களுக்கு வைரஸ் பரவியது குறித்த விவரங்கள் தெரியவில்லை என்பதை அறிய முடிகிறது.

கோவிட்-19 என்றால் 2019-ல் வரத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று என்பதாகும். இந்த வைரஸ் வுஹானில் கண்டறியப்பட்டது 2019 டிசம்பர் மாதத்தில் தான். 2020 ஜனவரி மாதத்தில் சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மார்ச் மாதத்தில் உலக நாடுகளில் வைரசின் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

இந்திய அறிவியலாளர்கள் குழுவில் இருக்கும் பெண் அறிவியலாளரே இந்த தகவல்களை எல்லாம் தெரிவித்து உள்ளதாக கூறி இருக்கிறார். ஆனால், அவரின் விவரங்கள் குறிப்பிடவில்லை. அதேபோல், தன் சீனியரின் நண்பர் ஒருவர் இறந்து விட்டதாக கூறி இருப்பார். அது யார் என உறுதிப்படுத்த முடியாத வகையில் இருக்கிறது.

அடுத்ததாக, கோவிட்-19 காற்றின் மூலம் பரவுவதாக கூறுகிறார். நோவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் போன்றவற்றில் இருந்து வரும் நீர்துளிகள் மூலமே பரவி வருவதாக அறியப்படுகிறது. அதேநேரத்தில், கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவும் வாய்ப்பை உலக சுகாதார மையம் நிராகரிக்கவில்லை. எனினும், இந்த ஆபத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

Twitter link | archived link 

நோவல் கொரோனா வைரஸ் காற்றில் எத்தனை மணி நேரம் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் உறுதியான தகவல் அளிக்கவில்லை. தற்போதுவரை, காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் ஒருவர் கூட பாதிப்புக்கு ஆளானதாக எந்த பதிவும் இல்லை.

சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்றே அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டிலேயே இருக்க வைத்துள்ளது. கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களாக சுகாதார பணியாளர்களே இருக்கின்றனர். அரசு எடுத்து வரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து மக்கள் கூடுவதை தவிர்க்கும் பட்சத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புகள் உள்ளது.

ஏற்கனவே அச்சத்தில் இருக்கும் மக்கள் மத்தியில் உங்களின் கற்பனை திறனை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே பீதியை உருவாக்க முயற்சிப்பவர்கள் காவல்துறையால் கைது செய்யப்படுவார்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button