This article is from Jan 06, 2021

கோவிட்-19 தடுப்பூசியை ஆண்குறியில் செலுத்துவதா ?|வைரலாகும் போலியான CNN நியூஸ்!

” ஆண்களின் பிறப்புறுப்பில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை மருத்துவர்கள் ஊக்குவிப்பதாக ” தலைப்பில் சிஎன்என் செய்தி லோகோ இடம்பெற்று இருக்கும் கட்டுரையின் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.

தலைப்புக்கு அடுத்து, ” ஆண் நோயாளிகளுக்கு பிறப்புறுப்பு ஆனது தடுப்பூசியை உடல் முழுவதும் விரைவாக கொண்டு சேர்ப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 1,500 ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட  கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ” மருத்துவர், ஆணுறுப்பில் ஊசி செலுத்தும் டிஜிட்டல் வரைபடத்துடன் கட்டுரையில் இடம்பெற்று உள்ளது.

ஆனால், சிஎன்என் செய்தி நிறுவனம் இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை. சிஎன்என் இணையதளத்தில் வெளியான செய்திகளை ஆராய்கையில், வைரல் செய்யப்படும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் உள்ளது போன்ற எந்தவொரு செய்தியும் கிடைக்கவில்லை மற்றும் சிஎன்என் இணையதளத்தில் வெளியான மற்ற செய்திகளின் வடிவமும் வைரலாகும் ஸ்க்ரீன்ஷார்ட்டின் வடிவமும் வெவ்வேறாக உள்ளது.

வைரலாகும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் உள்ள மருத்துவரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், Biotemedical என்ற மருத்துவ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. மருத்துவர் மோஹித்குமார் கலிஃபோர்னியாவின் கிளாரிமாண்டில் உள்ள கிளேர்மான்ட் மருத்துவ மையத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவராக பணியாற்றி வருவதாக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

” இக்கட்டுரை முற்றிலும் போலியானது. இதுபோன்ற எந்தவொரு ஆய்வு பற்றி நான் எதுவும் கூறவில்லை. இது யாரோ செய்த தவறான காரியம் ” என வைரலாகும் சிஎன்என் கட்டுரை ஸ்க்ரீன்ஷார்ட் குறித்து மருத்துவர் மோஹித்குமார் பூம் லைவ் இணையதளத்திற்கு பதில் அளித்து உள்ளார்.

நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, தடுப்பூசி ஆனது கையின் மேற்புறத்தில் செலுத்தப்படுகிறது. தடுப்பூசியானது ஆணுறுப்பில் செலுத்தப்படுவதாக எந்த தகவலும் இல்லை, ஆய்வும் நிகழவில்லை.

இப்படி இருக்கையில், கோவிட்-19 தடுப்பூசியை ஆணுறுப்பில் செலுத்துவதை மருத்துவர்கள் ஊக்குவிப்பதாக நிகழாத ஆய்வை சிஎன்என் இணையதளத்தின் லோகோ உடன் எடிட் செய்து தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader