This article is from May 03, 2021

“கோவிப்ரி” பெயரில் போலி ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிப்பு.. எச்சரிக்கை !

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தி வரும் ரெம்டெசிவிர் மருந்திற்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், தேவை அதிகரிப்பதை பயன்படுத்திக் கொண்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை கேட்டு வருகிறோம். இதற்கிடையில், போலியான ரெம்டெசிவிர் மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது.

ரெம்டெசிவிர் மருந்தானது கோவிட்-19க்கு மாய மருந்து ஒன்றும் இல்லை. எனினும், நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைக்க மருத்துவர்கள் அதைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால், இந்த மருந்திற்கு அதிக தேவையும், பற்றாக்குறையும் உள்ளது. இதற்கிடையில், “கோவிப்ரி” எனும் பிராண்டு பெயரில் ரெம்டெசிவிர் மருந்தின் படங்கள் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் செய்யப்படும் போலி ரெம்டெசிவிர் மருந்தின் தயாரிப்பு அட்டையில் பிழைகளும், மேட்டுப்பாளையம் சிக்கிம் மாநிலத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருப்பதை காணலாம்.

டெல்லி காவல்துறை சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் கோத்வாரில் ரூ.25,000க்கு மேல் விற்கப்பட்ட போலி ரெம்டெசிவிர் மருந்து பெரிய அளவில் தயாரிக்கும் பிரிவை கண்டுபிடித்தது, 5 பேரை கைதும் செய்தது.

Twitter link 

டெல்லி காவல்துறையின் டி.சி.பி மோனிகா பரத்வாஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், ” இது போலியானது, கோவிப்ரி என்ற பெயரில் ரெம்டெசிவிர் மருந்து இல்லை. இந்த முழுமையான மோசடி முறியடிக்கப்பட்டு உள்ளது. எனினும், சில மருந்துகள் இன்னும் புழக்கத்தில் இருக்கலாம். ஆகையால், சரிபார்க்காத வகையில் இருந்து மருந்துகளை வாங்க வேண்டாம் ” எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், குஜராத்தில் போலி ரெம்டெசிவிர் மோசடி வேலையை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக ஹிந்துபிசினஸ்லைன் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Twitter link 

இதற்கு முன்பாக, ஹெடெரோ நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போலியான ரெம்டெசிவிர் மருந்து குறித்தும் மோனிகா பரத்வாஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்து பதிவிட்டு இருந்தார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்தின் அதிக தேவையையும், பற்றாக்குறையும் பயன்படுத்தி குறைந்த விலையில் கிடைக்கும் மருந்தை அதிக விலைக்கு விற்பது ஒருபுறம் இருந்தாலும், போலியான மருந்தையே தயாரித்து அதிக விலைக்கு விற்கும் கும்பல்கள் மறுபுறம் இருக்கின்றன. போலியான ரெம்டெசிவிர் மருந்து குறித்து எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். மருந்தை வாங்குபவர்கள் அதை சரிபார்த்து வாங்குங்கள்.

Please complete the required fields.




Back to top button
loader