NEET அடுத்து CUET.. மத்தியப் பல்கலைக்கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு கட்டாயம் !

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வான நீட் நடத்தப்பட்டு வருவது போல், இந்தியாவில் அனைத்து மத்தியப் பல்கலைக்கழங்களிலும் இளநிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நாட்டில் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கு கட்டாயமாக ” Common university entrance test (CUET)” என அழைக்கப்படும் பொது நுழைவுத் தேர்வானது வரும் ஜூலை முதல் நடைபெறும் என யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் அறிவித்து உள்ளார்.
2022-2023 கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்கை நடைபெறும். இந்த பொது நுழைவுத் தேர்வானது ஹிந்தி,மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 13 மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்களின் அடிப்டையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். பொது நுழைவுத் தேர்வு என்பதால் 12 வகுப்பு மதிப்பெண்ணிற்கு எந்த பங்கும் தரப்படாது. மேலும், இந்த தேர்வானது சிபிஎஸ்இ பின்பற்றும் பாடத்திட்டமான என்சிஇஆர்டி பாடநூலை மையப்படுத்தியே இருக்கும்.
இதற்கு முன்பாக, 14 மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு இருந்து வந்தன. ஆனால், தற்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்டையில் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், CUET நுழைவுத் தேர்வு முறையை மாநிலங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் கூட ஏற்றுக் கொள்ளலாம் என யுஜிசி தெரிவித்து இருக்கிறது.