லாக்அப் மரணங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடம்.. தமிழ்நாட்டில் 73% அதிகரிப்பு !

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் மொத்தம் 4,484 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளதாகவும், 233 பேர் போலீஸ் என்கவுண்டரில் இறந்துள்ளதாகவும் இந்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

Advertisement

போலீஸ் காவலில் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் என்கவுண்டர் மரணங்கள் குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி அப்துஸ்சமாத் சமதானி எழுப்பிய கேள்விக்கு ஜூலை 26-ம் தேதி உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் குறித்து மாநில வாரியாக அளித்த தகவலில், ” ஏப்ரல் 2020 முதல் 2022 மார்ச் வரையில் கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்சமாக 952 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக ” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில், 2020-21ல் போலீஸ் காவலில் இறந்தவர்கள் தொடர்பாக 451 வழக்குகளும், 2021-22ல் 501 வழக்குகளும் என மொத்தம் 952 வழக்குகள் பதிவாகி உள்ளது. அடுத்தப்படியாக, மேற்கு வங்கத்தில் மொத்தமாக 442 வழக்குகள் பதிவாகி உள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள பீகார் மாநிலத்தில் 396 வழக்குகள் பதிவாகி உள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, மத்தியப் பிரதேசத்தில் 364 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 340 வழக்குகளும், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 225 வழக்குகளும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக, 2020-ம் ஆண்டில் 1,940 வழக்குகளும், 2021-ம் ஆண்டில் 2,544 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் 2020-21ல் போலீஸ் காவலில் இறந்தவர்கள் தொடர்பாக 63 வழக்குகளும், 2021-22ல் 109 வழக்குகளும் என மொத்தம் 172  வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு 7-ம் இடத்தில் உள்ளது.

Advertisement

போலீஸ் என்கவுண்டர்களால் ஏற்படும் மரணங்கள் குறித்த தகவலில், கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 233 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 54 வழக்குகளுடன் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்திலும், 50 வழக்குகளுடன் ஜம்மு காஷ்மீர் இரண்டாவது இடத்திலும் 27 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 2 ஆண்டுகளில் 7 என்கவுண்டர் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் போலீஸ் காவலில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 100-ஐத் தாண்டி உள்ளது. அதேநேரத்தில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 501 போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

link : 

loksabha answer AU1459

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button