இந்தியாவில் தொடரும் ஆன்லைன் சைபர் மோசடிகள்.. எச்சரிக்கும் காவல்துறை..!!

சைபர்கிரைம் மோசடிகள் மூலம் 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், ரூ. 7,061 கோடி இழந்துள்ள இந்தியர்கள்!

இந்தியா முழுவதும் இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் உலகமே உள்ளங்கையில் வந்தாலும் கூட, இணையவழி மோசடிகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்தவண்ணம் தான் உள்ளன. ஆரம்பத்தில் வயதானவர்களை குறிவைத்து அவர்களின் கிரெடிட் (CREDIT) கார்டு அல்லது எடிஎம் (ATM) கார்டுகளை புதிப்பிப்பதாகச் சொல்லி, கார்டு எண், ஒன் டைம் பாஸ்வார்டு (OTP) போன்ற விவரங்களைக் கேட்டும், பகுதிநேர வேலைவாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் கூறியே மோசடிகள் நடைபெற்றுவந்தன.

ஆனால் தற்போது மோசடி கும்பல்கள் தங்களை அரசாங்க அதிகாரிகளாகவும், காவல்துறை அதிகாரிகளாகவும், ஆன்லைன் வர்த்தகத்தில் லாபகரமான வேலைவாய்ப்புகள் வாங்கி தருவதாகவும், ஸ்கைப் (Skype) வீடியோ அழைப்புகள் மூலமாகவும் சைபர்கிரைம் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றன. அதன்படி இந்தியர்கள் சைபர்கிரைம் மோசடிகள் மூலம் 2024 ன் முதல் நான்கு மாதங்களில் மட்டும், ரூ. 7,061 கோடியை இழந்துள்ளதாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) கூறியுள்ளது.

குறிப்பாக 2019 ஆம் ஆண்டில், 26,049 சைபர்கிரைம் புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இது 2022 இல் 9,56,790 ஆகவும், 2023 இல் 15,56,215 ஆகவும் உயர்ந்து, தற்போது 2024 இன் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இது 7,40,957 புகார்களை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் பதிவுசெய்துள்ளது என்பது அதிர்ச்சிகரமான செய்தியாகும். 

மும்பை காவல்துறை அதிகாரி சீருடையில் அரங்கேறிய மோசடி:

தொடரும் இணைய மோசடிகள் வரிசையில், தற்போது சென்னையில் அதிர வைக்கும் புதிய மோசடி அரங்கேறியுள்ளது. அதன்படி, சென்னையைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு கடந்த மே 7 அன்று அவரது வீட்டின் லேண்ட்லைன் தொலைபேசி மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. தாங்கள் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் கட்கோபாரில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண்மணியின் பெயரில் ஒரு ஃஎப்ஐஆர் இடம் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஃஎப்ஐஆர் இல் அவரது பெயரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் தவறான விளம்பரங்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆபாச செய்திகளை பலருக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறிய அவர்கள், ‘ஸ்கைப்’ செயலி வழியாக எங்கள் உயர் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார் என்றும் கூறியுள்ளனர். அதன்படி அவருக்கு மே 8 அன்று, முதல் ஸ்கைப் அழைப்பு ‘மும்பை போலீஸ் இன்வெஸ்டிகேஷன்’ என்ற ஐடியில் (ID) இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த வயதான பெண்மணியை கைது செய்து விடுவதாக மிரட்டி, அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்க்க பணத்தை மாற்றுமாறும் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல கூடாது என்றும், வெளியே தெரியப்படுத்தினால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என்றும் அவரை அழைத்தவர்கள் மிரட்டியுள்ளனர். அடுத்த நாள், நேரு நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் என்று கூறி மற்றொரு நபரிடமிருந்து அவருக்கு ஸ்கைப் அழைப்பு வந்துள்ளது. காவல்துறை சீருடையில் இருந்த அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்கு என்பதால், சம்பவம் குறித்து யாரிடமும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு குறித்த மற்றொரு ஆவணத்தையும் காட்டியுள்ளனர்.

மேலும் மே 9 முதல் மே 14 க்கு இடையில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் தனது இருப்பிடத்தை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையிலான பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

கொரியர் (FedEx) மோசடியில் ஒரு கோடி ரூபாயை இழந்த பெங்களூரைச் சேர்ந்த பெண்:

பெங்களூரு கிழக்கில் வசிக்கும் அந்த பெண், “டிஜிட்டல் கைது” (Digital Arrest) மூலம் சிக்கியதாகக் கூறி மோசடி செய்துள்ளனர். செல்போனில் அழைக்கும் நபர், நான் ‘ஃபெடெக்ஸ் கொரியர்’ நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். உங்கள் பெயரில் மும்பை விமான நிலையத்திலிருந்து தைவான் நாட்டுக்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் MDMA போதைப்பொருட்கள், போலி பாஸ்போர்ட்டுகள், ஆடைகள் ஆகியவை உள்ளன. எனவே இதுதொடர்பாக மும்பை ‘சைபர் கிரைம்’ போலீசார் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

பின்னர் இவரையும் ஸ்கைப் அழைப்பில் பங்கேற்க சொல்லி, மேலே நடந்தது போலவே காவல்துறை அதிகாரிகள் போன்று நடித்து ஏமாற்றியுள்ளனர். இறுதியில் தான் ஒரு மோசடிக்கு பலியாகிவிட்டதை உணர்ந்த அவர், மறுநாள், இந்த சம்பவத்தை காவல்துறையிடம் கூறி புகாரளித்துள்ளார்.

இணைய வரத்தகம் மற்றும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் மோசடி:

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 41 வயதுமிக்க ஒருவர் பேஸ்புக் மூலம் ‘பங்கு வர்த்தக குழுவில்’ (Stock Trading Group) முதலில் சிக்கியுள்ளார். “நிறுவன கணக்கு” (Institutional Account) கொடுக்கப்பட்ட அவருக்கு, இந்த வரத்தகம் மூலம் ஓரளவு லாபமும் கிடைத்துள்ளது. பின்னர் வாட்சாப் குழு மூலம் இன்ட்ராடே மற்றும் பிளாக் வர்த்தகம் (Intraday and Block Trade) அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதியில் மொத்தம் ரூ.1.36 கோடியை அவரிடமிருந்து மோசடி செய்துள்ளனர்.

இதே போன்று சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், ஐடி துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடத்தல்காரரிடம் ரூ.2.27 லட்சத்தை இழந்துள்ளார். வேலைவாய்ப்பு இணையதளத்தில் தனது விண்ணப்பத்தை பதிவேற்றிய அவர், UPI பரிவர்த்தனை மூலம் பணத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டுள்ளார். இரண்டு வழக்குகளும் ஆவடி மற்றும் சென்னை காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகின்றன.

தொடரும் மோசடிகள்.. எச்சரிக்கும் காவல்துறை:

இதுதவிர டெலிகிராம் மூலம் பகுதிநேர வேலை, கிரிப்டோ கரன்சியில் முதலீடு என்று கூறியும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. எனவே ஆன்லைன் சைபர்கிரைம் தொடர்பான புகார்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள சென்னை மாநகர காவல்துறையினர், இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க, காவல் நிலையத்திற்கு நேரில் வராமலேயே www.cybercrime.gov.in என்ற வலைதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் உதவி எண் மூலமோ புகார் அளிக்கலாம்.

மேலும் சமீப காலமாகவே மின் கட்டணம் தொடர்பான போலி SMS மீண்டும் உலா வருவதால், இது குறித்தும் சென்னை மாநகர காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

இதே போன்று, கொரியர் (FedEx) மோசடி குறித்தும், “மோசடி செய்பவர்கள் FedEx ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்” என்று கூறி தங்களது எக்ஸ் பக்கத்தில் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். 

சைபர் குற்றங்களை தவிர்க்க அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C): நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் கையாள்வதற்கான முயற்சிகளை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது.
  • தேசிய சைபர் தடயவியல் ஆய்வகம் (National Cyber Forensic Laboratory (Investigation)) : இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் அனைத்து மாநில/யூனியன் பிரதேச காவல்துறையின் விசாரணை அதிகாரிகளுக்கு ஆரம்ப கட்ட சைபர் தடயவியல் உதவியை வழங்குகிறது.
  • சைட்ரைன் போர்டல் (CyTrain Portal): சைபர் கிரைம் விசாரணை, தடயவியல் மற்றும் வழக்கு விசாரணையின் முக்கியமான அம்சங்களில் ஆன்லைன் படிப்புகள் மூலம் போலீஸ் அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர்களின் திறனை வளர்ப்பதற்கான ஒரு பெரிய திறந்த ஆன்லைன் படிப்பக (MOOC) தளமாக இது உள்ளது.
  • நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டல் (https://cybercrime.gov.in): பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, சைபர் குற்றங்களின் சம்பவங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் தளமாக உள்ளது.
  • குடிமக்களின் நிதி சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting and Management System): இது நிதி மோசடிகளை உடனடியாகப் புகாரளிப்பதற்கும், கட்டணமில்லா ஹெல்ப்லைன் மூலம் (1930) ஆன்லைன் சைபர் புகார்களை வழங்குவதற்கும் உதவும் அமைப்பு.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் தடுப்பு (CCPWC) திட்டம்: சைபர் குற்றங்களை விசாரிப்பதில் சட்ட அமலாக்க முகமைகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
  • கூட்டு சைபர் ஒருங்கிணைப்பு குழுக்கள் (Joint Cyber Coordination Teams): மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் குறிப்பாக இணைய குற்றங்கள் தொடர்பான பல அதிகார வரம்புகள் உள்ள பகுதிகளில், சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.
  • காவல்துறையை நவீனமயமாக்குதல்: நவீன ஆயுதங்கள், மேம்பட்ட தகவல் தொடர்பு/ தடயவியல் கருவிகள் மற்றும் சைபர் காவல் கருவிகளைப் பெறுவதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றியஅரசு இதன் மூலம் நிதி உதவி வழங்குகிறது.

சைபர் மோசடிகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இது போன்ற சைபர்கிரைம் மோசடிகளை தடுக்க முடியும்..!!

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader