இந்தியாவில் அதிகரிக்கும் தினக்கூலிகளின் தற்கொலை – ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கையில் 25.06%

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு நிகழ்ந்த தற்கொலைகள் பற்றிய புள்ளி விவரத்தினை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தரவின்படி 2020-ம் ஆண்டு 11.3-ஆக இருந்த இந்தியாவின் தற்கொலை விகிதமானது, 2021-ம் ஆண்டில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 2020-ல் 1,53,052 ஆக இருந்த தற்கொலை எண்ணிக்கையானது, அதற்கடுத்த ஆண்டில் 1,64,033-ஆகப் பதிவாகியுள்ளது.

மாநிலங்கள் வாரியாக பார்க்கையில் மகாராஷ்டிரா 22,207, தமிழ்நாடு 18,925, மத்தியப் பிரதேசம் 14,965, மேற்கு வங்காளம் 13,500 மற்றும் கர்நாடகா 13,056 என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலை அதிகம் நிகழ்ந்துள்ள முதல் 5 மாநிலங்கள் இவையே.

பெண்கள் தற்கொலை:

இந்தியா முழுவதும் பெண்களின் தற்கொலை எண்ணிக்கையானது 45,026 ஆகப் பதிவாகியுள்ளது. நமது நாட்டினை பொறுத்த அளவில் பெண்களின் வாழ்க்கை போக்கினை தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாகத் திருமணங்கள் திகழ்கிறது. திருமணம் தொடர்பான நிகழ்வுகளினால் இந்தியா முழுவதிலும் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 4069 ஆகும். இதில் அதிகப்படியாக மத்தியப் பிரதேசத்தில் 871, இதற்கு அடுத்ததாக உத்திர பிரதேஷ் மற்றும் மேற்கு வங்காளம் முறையே 662 மற்றும் 603 ஆகப் பதிவாகியுள்ளது.

இத்தரவரிசையில் தமிழ்நாடு 7-ம் இடத்தில் உள்ளது. திருமணம் தொடர்பாகத் தமிழகத்தில் 148 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் 154-ஆக உள்ளது. ஒப்பீட்டளவில் தமிழகத்தின் நிலை சற்று மேலானதாக உள்ளதைப் பார்க்க முடிகிறது.

தங்களின் பணி மற்றும் வேலை தொடர்பான பிரச்சனைகளினால் 417 பெரும், எதனால் இறந்தார் என்றே தெரியவில்லை என்ற பிரிவில் 4243 பெண்கள் இறந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினக்கூலிகளின் தற்கொலை:

தினக்கூலிகளின் தற்கொலையானது மிக அதிக அளவு உயர்ந்திருப்பதை இப்புள்ளி விவரம் வெளிப்படுத்துகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட தினக்கூலிகளின் எண்ணிக்கை 42,004 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது ஒட்டுமொத்த நாட்டின் தற்கொலை எண்ணிக்கையான 1,64,033-ல் 25.06 சதவீதமாகும்.

2020-ம் ஆண்டில் 37,666-ஆக இருந்த தினக்கூலிகளின் தற்கொலை எண்ணிக்கையானது 2021-ம் ஆண்டில் 42,004-ஆக அதிகரித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகப்படியாக 7,673 தினக்கூலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டினை தொடர்ந்து மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்கள் முறையே 5,270 மற்றும் 4,657 ஆகும்.

விவசாயிகளின் தற்கொலை:

கடந்த ஆண்டில் மட்டும் 10,881 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 5,318 பேர் சொந்தமாகவோ, குத்தகையாகவோ நிலத்தினைக் கொண்டு விவசாயம் செய்தவர்கள். 5,563 பேர் விவசாய கூலிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டில் பதிவான மொத்த தற்கொலைகளில் விவசாய தற்கொலை என்பது 6.6 சதவீதமாக உள்ளது. இதில் 653 பெண் விவசாயிகளும் அடங்குவர்.

மாநிலங்கள் வாரியாக பார்க்கையில் அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4064 பெரும், அதனையடுத்து கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் முறையே 2169 மற்றும் 1065 என விவசாயிகளின் தற்கொலை பதிவாகியுள்ளது. இத்தரவில் தமிழ்நாட்டில் 599 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதுவும் மற்ற மாநிலத்தைக் காட்டிலும் குறைவே ஆகும்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில் நாட்டில் 2021-ம் ஆண்டு நிகழ்ந்துள்ள மொத்த தற்கொலை எண்ணிக்கையில் விவசாய தற்கொலை 6.6 சதவீதமாக உள்ளது. இதேபோல தினக்கூலிகளின் தற்கொலை விகிதமானது 25.06 சதவீதமாக உள்ளதை முக்கிய கருதுகோளாகக் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையைக் காட்டிலும் தினக்கூலிகளின் தற்கொலை எண்ணிக்கையானது 4 மடங்கு அதிகமாக உள்ளதைக் காண முடிகிறது. தினக்கூலிகளுக்கான வாழ்வாதார திட்டங்களில் அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்த புள்ளி விவரம் வெளிப்படுத்துகிறது.

Link:

ADSI_2021_FULL_REPORT

Please complete the required fields.




Back to top button
loader