சாமியை தொடாதே, கடைக்கு வராதே என குழந்தைகளிடமும் சாதி பார்க்கும் நாடு, நம் இந்தியா !

ந்தியாவில் தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரிக்கிறது என்கிறது NCRB data  எனும் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை.

இத்தகைய வன்கொடுமைகள் பெரியவர்களின் மீது நிகழ்த்தப்படுவது ஒருபுறம் எனில்  சிறார்களையும் விட்டு வைக்கவில்லை இந்த சாதிய வன்கொடுமை! குழந்தைகள் என்றும் பாராமல் நடக்கும் கொடுமைகளும் தொடர்கிறது. குழந்தைகள் சாதியவாதிகளின் எளிய இலக்கா?!

சமீபத்தில் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் தலித் குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாட்டின் காரணமாக தின்பண்டங்கள் தர முடியாது என ஒரு கடைக்காரர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

அந்த கடைக்காரர் பள்ளி சிறுவர்களிடம், “தின்பண்டம் உள்ளூர் கடைகளில் யாரும் வாங்க கூடாது. தின்பண்டம் கொடுக்க மாட்றாங்கனு உங்க வீட்ல போய் சொல்லுங்க. உங்க தெருல இருக்கவங்களுக்கு எதுவும் கொடுக்க கூடாதுன்னு, ஊர் கட்டுப்பாடு போட்டு இருக்கு” என அவர் வீடியோவில் பேசுகிறார். அந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் “கட்டுப்பாடா… எதுக்கு கட்டுப்பாடு?” என அதிர்ச்சியாக கேட்கிறான். 

கடைக்காரர் அவ்வாறாக பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து அந்த சம்பவத்தில் தொடர்புடைய கடையின் உரிமையாளர் மற்றும் ஊர்க்காரர்கள் மகேஷ்வரன், ராமச்சந்திர மூர்த்தி, முருகன், குமார், சுதா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

அந்த 5 பேரும் 6 மாத காலத்திற்கு பாஞ்சாகுளம் கிராமத்திற்குள் வர தடை விதித்து ஐ.ஜி  அஸ்ரா கார்க் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த வழக்கு கடந்த 21ம் தேதி தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு நீதிபதி  பத்மநாபன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. அவரது தீர்ப்பிலும் குற்றவாளிகள் 6 மாதத்திற்கு பாஞ்சகுளம் கிராமத்திற்குள் வர தடை விதித்து உத்தரவிட்டார். தலித் சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. தீண்டாமை கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஊருக்குள் வர தடை விதிப்பது தமிழ்நாட்டில் இதுவே முதல்முறையாகும். 

இந்து கடவுள் சிலையைத் தொட்ட தலித் சிறுவனுக்கு ரூ.60,000 அபராதம் :

கர்நாடகா மாநிலம், ஹுல்லேரஹள்ளி கிராமத்தில் ஊர்வலத்திற்குக் கொண்டு செல்ல இந்து கடவுள் சிலை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையைத் தலித் சிறுவன் தொட்ட காரணத்திற்காக அக்குடும்பத்திற்கு ரூ.60,000 அபராதமாக ஆதிக்க சாதியினரால் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்திய பிறகே ஊருக்குள் வர வேண்டுமெனக் கிராம தலைவர் அந்த குடும்பத்தினரிடம் தெரிவிக்கவும் செய்கிறார்.

கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் எனில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு மட்டும் ஏன் இந்த தண்டனை?

தலித் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை :

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 2022, செப்டம்பர் 7ம் தேதி 16 வயது தலித் சிறுமியை அவரது வீட்டில் புகுந்து ராஜ்வீர் மற்றும் தாராசந்த் என்ற நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதுமட்டும் இன்றி அச்சிறுமியை எரித்தும் உள்ளனர். இக்கொடுமைகளுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி இறந்து விட்டார்.

இதேபோன்று, கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் 13 வயது தலித் சிறுமியை பாபு கான் என்பவன் 3 நாட்கள்  பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அச்சிறுமி ஆகஸ்ட் 30ம் தேதி அங்கிருந்து தப்பித்து சத்தர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். காவல் நிலையத்திலுள்ள அதிகாரிகளோ அந்தசிறுமியை எட்டி உதைத்து, பெல்ட்டினால் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். 

அந்த தலித் சிறுமி காணாமல் போன அன்றே அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் பெற்றோரிடம் கிடைக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகள் நல ஆணையத்தின் உதவியுடன் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தலித் குழந்தைகளுக்கு பள்ளிகளின் நடைபெறும் வன்கொடுமைகள்:

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சுரனா கிராமத்தில் கடந்த ஆகஸ்ட், 20ம் தேதி 9 வயது தலித் சிறுவன், வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த குடத்திலிருந்து தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்துள்ளான். இதனைக் கண்ட அவ்வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங் அம்மாணவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். ஆசிரியரின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் செப்டம்பர் 13ம் தேதி பள்ளியில் நடந்த சமூக அறிவியல் தேர்வில் ஓ.எம்.ஆர் தாளில் செய்த தவறுக்காகவும், எழுத்து பிழைக்காகவும் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஆசிரியரால் தாக்கப்படுகிறான். மயங்கிய அச்சிறுவனை மருத்துவமனையில்  அனுமதிக்கின்றனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவ பலனின்றி அந்த தலித் சிறுவன் உயிரிழந்தார்.

இம்மாதிரியான கொடுமைகளுக்கு தமிழ்நாடு ஒன்றும் விதிவிலக்கு அல்ல. 2021, டிசம்பர் மாதத்தில் திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக கீதா என்பவர் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் மூலம் கழிவறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார். 

திறந்த வெளியில் மலம் கழித்ததால் அடித்துக் கொலை

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2019 செப்டம்பர் மாதம், திறந்த வெளியில் மலம் கழித்ததற்காக ரோஷினி (12 வயது) மற்றும் அவினாஷ் (10 வயது) ஆகிய  இரண்டு தலித் சமூக குழந்தைகள் அடித்து கொல்லப்பட்டார்கள். 

விரிவாகப் படிக்க : பொது இடத்தில் மலம் கழித்ததாக இரு குழந்தைகள் அடித்து கொலை !

தினக்கூலியான என்னால் வீட்டில் கழிவறை கட்டும் அளவிற்கு வசதி இல்லை. ஏழைகள் கழிவறை கட்டிக் கொள்வதற்காக அரசு கொடுக்கும் மானியத்தையும் என்னால் பெற இயலவில்லை என இறந்த குழந்தை அவினாஷின் தந்தை குறிப்பிடுகிறார்.

திறந்த வெளியில் மலம் கழித்ததற்காக இரண்டு குழந்தைகளை அடித்து கொலை செய்யும் சம்பவம் வேறு எங்காவது நிகழ்ந்ததாக கேள்விப்பட முடியுமா?

தலித் சிறார்கள் மீதான குற்ற சம்பவங்களின் புள்ளி விவரம் :

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021ம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்கள் பற்றிய புள்ளி விவரத்தினை வெளியிட்டு உள்ளது. 

இந்த புள்ளி விவரத்தின்படி கடந்த ஆண்டில் மட்டும் தலித் குழந்தைகள் மீது பாலியல் வன்புணர்வு குற்ற சம்பவங்களுக்காக 1287 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாக மத்திய பிரதேசத்தில் 189 குற்றச் சம்பவங்களும், அதனையடுத்து மகாராஷ்டிராவில் 163 குற்றச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் 89 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதேபோல், பழங்குடியின குழந்தைகள் மீதான வன்புணர்வு தொடர்பாக 516 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதிலும் அதிகப்படியாக மத்தியப் பிரதேசத்தில் 154 குற்றங்கள் நடைபெற்றுள்ளது.

இது மட்டுமின்றி தலித் மற்றும் பழங்குடியின குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது போன்ற தாக்குதல்கள் குறித்த விவரமும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தலித் குழந்தைகளின் மீதான தாக்குதல் குறித்து 553 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதிலும் மத்தியப் பிரதேசம் (121) மற்றும் உத்தரப் பிரதேச (111) மாநிலங்களிலேயே அதிகப்படியான குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை காண முடிகிறது.

பழங்குடியின குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து 150 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில் அதிகப்படியாக மத்தியப் பிரதேசத்தில் 46 தாக்குதல் சம்பவங்களும், மகாராஷ்டிராவில் 38 தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

குழந்தைகளிடம் சாமியை தொடாதே, கடைக்கு வராதே எனச் சொல்லும் பிற்போக்கு சமூகமாக இந்தியா தொடரும் எனில் அது எத்தனை பெரிய தலைகுனிவு ?

குழந்தைகளிடம் கூட சாதி பார்க்கும் கீழ் குணம் கொண்ட கூட்டம் இது எனில் இதில் பேசப்படும் கலாசார, பாரம்பரிய பெருமை வெறும் குப்பை அல்லவா?

இப்போ எல்லாம் யார் சார் சாதி பார்க்குறா? என கேட்கும் கேள்வி எத்தனை பெரிய மூடத்தனம் தெரிகிறதா?

Links : 

Madhya Pradesh: 13-year-old Dalit girl confined at police station in Chhatarpur, ‘beaten with belts’ for filing rape complaint

Please complete the required fields.
Back to top button
loader