தலித்துகளுக்கு 1% நிலம் மட்டுமே உள்ளதா.. நியூஸ் 7 விவாதத்தில் கலை கூறியது உண்மையா ?

தமிழ்நாட்டில் தலித் மக்கள் 22 சதவீதம் இருக்கின்றனர். ஆனால், அவர்களிடம் 1 சதவீதம் நிலம் மட்டுமே சொந்தமாக உள்ளது என அரசியல் விமர்சகர் கலை குறிப்பிடுகிறார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா சில தரவுகளைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இருவர் பேசுவதில் எந்த தரவு உண்மை என்பதினை கண்டறிய முயன்றோம். 

நியூஸ் 7 தொலைக்காட்சியில், திராவிட மாடல் யார் ஆட்சியில் உருவாக்கப்பட்டது ? என்ற தலைப்பில் 2022 செப்டம்பர் 29ம் தேதி கேள்விநேரம் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் கலை, திமுக சார்பாகத் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கலை, தமிழ்நாட்டில் தலித் மக்களிடம் உள்ள விவசாய நிலங்கள் பற்றி சில தகவல்களைக் குறிப்பிடுகிறார். 

அதில், ” ஒன்றிய மாநில அரசு ஆவணங்களின்படி தமிழ்நாட்டில் 22 சதவீதம் தலித் மக்கள் இருக்கின்றனர். அவர்களிடம் 1 சதவீதம் மட்டுமே நிலம் சொந்தமாக உள்ளது. நிலமற்ற கூலி விவசாயிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் தலித் மக்களாக உள்ளனர் ” எனக் கலை குறிப்பிடுகிறார்.

கலை பேசிய பிறகு அதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழன் பிரசன்னா ஒன்றிய அரசு வெளியிட்ட தரவு என சில தகவல்களைத் தனது செல்போனினை பார்த்துப் படிக்கிறார். 

” தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் தலித் மக்கள் இருக்கின்றனர். அதில் 10 சதவீதத்தினர் விவசாய நில உரிமையாளர்களாக உள்ளனர். முக்கியமாகத் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் 70,000 ஹெக்டேர் நிலத்திற்குத் தலித் மக்கள் உரிமையாளர்களாக உள்ளனர். இதற்குக் காரணம் கலைஞர் கொண்டுவந்த நில உச்சவரம்பு சட்டம் ” என திமுகவின் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா குறிப்பிட்டுப் பேசியுள்ளார். 

எது உண்மை ?

தமிழன் பிரசன்னா குறிப்பிடும் தரவுகளைப் பற்றி இணையத்தில் தேடினோம்.  தி இந்து இணையதளத்தில் “Scheduled Castes possess just 7.8% of farmland in the State” என்ற தலைப்பில் 2019, டிசம்பர் 5ம் தேதி கட்டுரையினை வெளியிட்டுள்ளது. மாநில விவசாயத்துறை ‘Salient Statistics on Agriculture, 2019’ என்ற புள்ளி விவரத்தின் அடிப்படியில் அந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் தலித் மக்கள் உள்ளனர். அவர்களில் 10 சதவீதத்தினர் சொந்தமாக விவசாய நிலங்களை வைத்துள்ளனர். 

ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் 79.4 லட்ச (100 சதவீதம்) நில உரிமையாளர்கள் இருக்கின்றனர். அதில் 7,98,674 (10.05 சதவீதம்) பேர் தலித் நில உரிமையாளர்கள்.  

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 59.7 லட்ச ஹெக்டர் (100 சதவீதம்) விவசாய நிலத்தில், 4,66,365 ஹெக்டர் (7.8 சதவீதம்) விவசாய நிலம் தலித் மக்களிடம் உள்ளது.

அத்தரவின் படி, தமிழ்நாட்டில் அதிகப்படியாக விழுப்புர மாவட்டத்தில் 1,01,212 தலித் நில உரிமையாளர்கள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் 54,343 பேரும், கடலூரில் 49,326 பேரும் நில உரிமையாளர்களாக உள்ளனர். 

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட 3 முக்கிய மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் சேர்த்து 70,640 ஹெக்டர் நிலத்திற்குத் தலித் மக்கள் உரிமையாளர்களாக உள்ளனர். இம்மூன்று மாவட்டங்களில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் இந்த அளவானது 15 சதவீதமாகும்.

அதே நிகழ்ச்சியில் கலை என்பவர் பேசிய தகவல்கள் இணையத்தில் கிடைக்கப்படவில்லை. அதனையடுத்து அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினோம். எந்த தரவினை அடிப்படையாகக் கொண்டு விவாத நிகழ்ச்சியில் தலித் நில உரிமையாளர்கள் குறித்துப் பேசியுள்ளீர்கள் எனக் கேட்டோம்.

அதற்கு, ” அது நீண்ட காலத்திற்கு முன்னதாக எங்கோ படித்தேன். எங்குப் படித்தேன் என்பது நினைவில்லை. தேடி பின்னர் அனுப்புவதாகத் ” தெரிவித்தார். ஆனால் இக்கட்டுரை வெளியிடப்படும் வரை எந்த ஆதாரங்களையும் அனுப்பவில்லை.

நம் தேடலில், நியூஸ் 7 தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் தமிழன் பிரசன்னா பேசிய தகவல்கள் உண்மையே. 2019ம் ஆண்டு மாநில விவசாயத்துறை வெளியிட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Back to top button
loader