This article is from Oct 02, 2020

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்ணின் சாதியை சேர்த்து ‘தலித்’ எனக் குறிப்பிடுவது ஏன் ?

ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அல்லது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால் அப்பெண்ணின் பெயரையோ, புகைப்படத்தையோ பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. அதைப் பத்திரிகைகள் செய்யக்கூடாது என்கிற விதியுண்டு. ஆனால், சமூக வலைதளங்களில் அப்படியில்லை, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு விடுகிறார்கள்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் ரீதியான கொடுமைக்கு உள்ளாகினால் அல்லது வேறு ஏதாவது வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்டால் சம்பவம் குறித்து வெளியிடும் பத்திரிகைகள் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளானார், தலித் சமூகத்தை சார்ந்தவர் தாக்கப்பட்டார் எனக் குறிப்பிடுவதை கவனித்து இருக்கலாம்.

அப்போதெல்லாம், பொது சமூகத்தில் ஒரு கேள்வி எழுவதுண்டு. பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை ஏன் சாதியரீதியாக இணைக்கிறீர்கள் எனக் கேள்வி வைக்கப்படும். அதற்கு ஒரு நீண்ட நெடிய காரணம் உண்டு என்பது பலருக்கும் தெரிவதில்லை. பொது புத்தியில் இருந்து, ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிற பாலியல் கொடுமை அல்லது வன்முறையின் போது, பெண் மீது இருக்கும் மோகத்தால் அப்பெண்ணின் அனுமதி இல்லாமல் ஏற்படுகின்ற அநீதி தானே இதில் எங்கிருந்து வருகிறது சாதி என்கிற கேள்வியே ஏற்படும். அதை அப்படிப்பட்டதாக புரிந்து கொள்ளக்கூடியது அல்ல.

ஏனெனில், ஒரு பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர் மீது ஏற்படுகிற வன்முறை, அவர் மீது ஏற்படுத்தப்படுகின்ற பாலியல் வன்கொடுமை போன்றவை அங்கு உயர்ந்தவர்கள் என எண்ணிக் கொள்ளும் ஆதிக்க சாதியினரால் ஏற்படுமாயின், அது பெண் மீதான மோகத்தின் அடிப்படையில் அல்ல, அவர்கள் தங்களின் அதிகாரத்தை செலுத்த விரும்புகிறார்கள் என்பதையும் சேர்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

தலித் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போன்ற உணர்வையும் அல்லது தங்களின் மேலாதிக்கத்தை அவர்கள் மீது காட்டுவதற்கான இடமாகவும் அதை பார்க்கிறார்கள். நீ எங்களுடன் ஏதாவது சிக்கல் செய்தால் உன் வீட்டு பெண்களை இப்படி செய்து விடுவோம் எனும் சமிக்கை அதில் அடங்கி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், உன்னால் என்ன செய்துவிட முடியும், உன் பிரிவினர்கள் என்னை எதிர்த்து கேள்வி கேட்டு விடுவார்களா, உங்களால் எங்களுடன் மோத முடியுமா, உங்கள் பெண்களை தொட்டால் எதிர்த்து கேள்வி கேட்கும் திராணி உள்ளவர்களா நீங்கள் போன்ற பல்வேறு சமிக்கைகளையும் அனுப்ப முயற்சிக்கும் ஆதிக்க உணர்வும்தான் இது. சாதியரீதியான அந்த பிளவு இங்கு வெளிப்படையாக தெரிகிறது. அப்பட்டமாக தனது அதிகாரத்தை நிறுவுவதற்காக அதைச் செய்கிறார்கள்.

பெண்கள் மீது தங்கள் அதிகாரம் என்பதை விட சாதியரீதியாக அவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி தாங்கள் பெரியவர்கள் என்பதை நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவேதான் இதை பார்க்க முடியும். அதனால்தான் பத்திரிகைகள் தொடர்ந்து தலித் மக்களுக்கு நிகழும் வன்முறைகள், பாலியல் கொடுமைகளின் போது தலித் என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதில், அதிகாரம், சாதிய ஆணவம், சாதிய ஆணவத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முன் முயற்சி இருப்பதை புரிவதால் மட்டுமே இதைச் செய்கிறார்கள். மேலும், தொடர்ந்து தலித் மக்கள் தொட்டால் தீட்டு, இல்லத்திற்குள், கோவிலுக்குள் நுழைந்து விட்டார்கள் என தீண்டாமை பேசுபவர்கள் தலித் பெண்களை வன்புணர்வு செய்யும் போது தீட்டு பார்ப்பதிலையே ஏன் என்றும் சேர்த்து யோசிக்க வேண்டும்.

இங்கு பாலியல் இச்சை காரணம் என்பதைத் தாண்டி அதிகார நிலைநிறுத்தலும், பயமுறுத்தலும் முதன்மையாகி இருக்கிறது. அடிமைப்படுத்துவதற்காக, காலுக்கு கீழே வைத்து நசுக்குவதற்காக செய்யும் வேலை என்பதாலேயே இதைத் தொடர்ந்து தலித்துகளுக்கு எதிராக நிகழும் கொடுமைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

2019-ல் தி நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், 2016 தேசியக் குற்றப் பதிவு பணியக தரவுகளின்படி பட்டியல் சாதியினருக்கு எதிரான அனைத்தும் குற்றங்களிலும், மிக அதிகமாக இருப்பது தலித் பெண்களுக்கு எதிரானவை எனக் கூறப்பட்டுள்ளது. தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறையில் பாலியல் பலாத்காரம், அதற்கான முயற்சிகள் மற்றும் அவர்களை அவமானப்படுத்தும் வன்முறைகள் உள்ளட்டவை அடங்கியுள்ளது.

ஒவ்வொரு நாளும் 4 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு தொண்டு நிறுவனம் தலித் மனித உரிமைகள் தொடர்பான தேசிய பிரச்சாரத்தில், 23%க்கும் அதிகமான தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர். அவர்களில் பலரும் பலமுறை தங்களுக்கு பலாத்காரம் நிகழ்ந்ததாக தெரிவித்து இருக்கிறார்கள் ” என வெளியாகி இருக்கிறது.

இந்தியா முழுவதிலும் தலித் மக்களுக்கு நடக்கும் தாக்குதல்கள், தலித் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளே சாதி ஒளிந்து இருப்பதை உணர்ந்து நாம் பார்க்கும் போதே அதைப் புரிந்து கொள்ள முடியும். பல நேரங்களில், அது வெளிப்பட்டு இருக்கிறது, பல வழக்குகளில் அதை உணரவும் முடியும். ஆக, இதனால் தலித் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளின் போது தலித் எனப் பயன்படுத்த வேண்டிய தேவையும், கட்டாயமும் இருக்கிறது.

Please complete the required fields.




Back to top button
loader