கங்கையில் மிதக்கவிடப்படும் இறந்தவர்களின் உடல்கள் | முழு விவரம் !

பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள கங்கை நதியில் கணக்கிட முடியாத அளவில் சடலங்கள் மிதக்கும் காணொளி மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி இந்தியாவையே பதை பதைக்க வைத்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கங்கை நதியை ஒட்டிய வெவ்வேறு இரண்டு பகுதிகளில் ஏராளமான சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

Advertisement

பீகாரில் உள்ள சவுசா எனும் ஊரில் ஓடும் கங்கையில் 30க்கும் மேற்ப்பட்ட சடலங்கள் மிதக்கும் செய்தி கடந்த மே 8 ஆம் தேதி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரையில் மிதந்து கொண்டிருந்த பல உடல்களைக் கண்ட பொது மக்கள் அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். எனினும் உடல்களின் எண்ணிக்கை குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

இது குறித்து புக்சார் மாவட்டத்தின் மூத்த அதிகாரி கே.கே. உபாதயாய், “உடல்கள் குறைந்தது ஐந்து முதல் எழு நாட்கள் வரை தண்ணீரிலேயே ஊரியுள்ளதாக தெரிகிறது. எனவே அவை அழுகியுள்ளன. இந்த உடல்கள் பக்கத்து மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் அலஹாபாதில் இருந்து கூட வந்திருக்கலாம்” என தெரிவித்திருந்தார்.

தொகுதி மேம்பாட்டு அதிகாரியான அசோக் குமார், “இறந்தவர்கள் யாரும் எங்கள் மாவட்டத்தில் வசிப்பவர்கள் அல்ல. எனினும் உடல்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் உத்தரப் பிரதேச அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதற்கு அடுத்த நாள் மே 11 ஆம் தேதி சவுசாவின் மகாதியோ கரையில் 71 உடல்கள் மீட்கப்பட்டது, உடல்கள் அழிகியுள்ளதால் கரையிலேயே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு டி.என்.ஏ உட்பட மாதிரிகள் எடுக்கப்பட்டது. பாட்னா உயர் நீதிமன்றம் வியாழக்கிழமைக்குள் இச்சம்பவம் குறித்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு பீகார் அரசிடம் கேட்டுக் கொண்டது. இதனை தொடர்ந்து புக்சார் மாநில அதிகாரிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து மிதந்து வரும் உடல்களை கைப்பற்ற பீகார் மற்றும் உபியின் எல்லையில் உள்ள ராணிகாட்டில் ஒரு பெரிய வலையை கடந்த புதன் அன்று விரித்துள்ளனர். இதில் உ.பியில் இருந்து மிதக்கும் சில உடல்கள் சிக்கிருப்பதாகவும் , இது குறித்து அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், இனி இந்த சம்பவம் குறித்தான நடவடிக்கைகளை அம்மாநில அரசு தான் எடுக்கும் என்று கூறப்பட்டது.

நதியில் மிதக்கப்பட்ட உடல்களின் மரணத்திற்கான காரணம் கொரோனா தானா என அறிக்கைகள் வரும் வரை கூற முடியாது, எனினும் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் நதியில் குளிக்கவோ வேறு எந்த பயன்பாட்டிற்கும் நதி நீரை உபயோகிக்க கூடாது என அறிவுறத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மத்திய நீர் வளம் மற்றும் ”தூய கங்கை” திட்டத்தின் அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் “நேஷனல் மிஷன் ஆப் கிளீன் கங்கா” வின் சார்பில் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Advertisement

” கங்கை நதியில் இறந்த உடல்களைக் கொட்டுவதைத் தடைசெய்தல் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த உடல்கள் / ஆற்றில் மிதக்கும் உரிமை கோரப்படாத சடலங்களை முறையாக அகற்றுவது” எனும் தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில், கங்கை நதியில் உள்ள சடலங்களால் மாசு ஏற்படுவதை தாண்டி நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, எனவே உடல்கள் அகற்றப்பட்டு உரிய மரியாதையுடன், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்கள் மேலும் தொடரும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிப்பூர், பல்லியா மற்றும் வாரணாசி மாவட்டங்களின் ஓடும் கங்கை நதியின் கரைகளில் சடலங்கள் மிதப்பது தெரியவந்துள்ளது. மேலும் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கரையில் ஏராளமான உடல்கள் மண்ணில் புதைபட்டுள்ள நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து அம்மாவட்டங்களில் வாழும் உள்ளூர் மக்கள் தெரிவிப்பதாவது, முறையாக உடல்களை தகனம் செய்ய 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாவதாகவும், மரக்கட்டைகளின் விலை அதிகமாக இருப்பதால், வாங்க வசதியில்லாத மக்கள் இப்படி கரைகளில் உடல்களை புதைத்துவிட்டோ அல்லது நதியில் தள்ளிவிட்டோ சென்று விடுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

பல இடங்களில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக பல செய்திகளின் வாயிலாக தகவல்கள் வருகின்றன. ஆனால், எந்த இடங்களில் எவ்வளவு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியிடவில்லை.

தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்கள் குறித்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பீகார் மற்றும் உத்தரப் பிரதேச அரசிற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Links :

bodies-found-buried-in-sand-by-ganga-river-in-uttar-pradeshs-unnao

other-states/bihar-spreads-net-in-ganga-to-catch-bodies-floating-in-from-up

71-bodies-of-suspected-covid-victims-retrieved-from-ganga-buried-in-bihar

bodies-of-suspected-covid-victims-spotted-in-ganga

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button