பட்டாசு புகை கொசுக்களை கொல்லுமா?

தீபாவளி என்றால் எப்போதும் மாத தொடக்கத்தில் இருந்தே வெடி சத்தத்துடன் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். உச்ச நீதிமன்றம் தீபாவளி அன்று பட்டாசுகளை இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறியது ஒரு தரப்பினரிடையே வரவேற்பையும் பெரும்பாலானவர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதற்கிடையே வெகு காலமாக பட்டாசு புகை கொசுக்களை விரட்டும் என்றும் அது நன்மை தரும் என்று பலர் கூற கேட்டிருக்கலாம். அது எவ்வளவு உண்மை ? பார்க்கலாம்
அலுமினியம் , ஆன்டிமோனி , பேரியம், கால்சியம், கார்பன், கிளோரின், காப்பர் , இரும்பு, லித்தியம், மெக்னீசியம், ஆக்சிஜன் , பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், சல்பர், டைட்டானியம் மற்றும் ஜின்க் ஆகியவை பொதுவாக பட்டாசுகளில் பயன்படுத்தும் பொருட்கள். இவை வெடிப்பதற்கும் விதவிதமான நிறங்களை தருவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
புகையினால் கொசுக்கள் பாதிப்படையும் என்பது உண்மை. 2003 – ஆம் ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை அரசு மேற்கொண்டு வந்தது. அப்போது தான் டெங்கு காய்ச்சல் தலைநகரில் தீவிரமாக பரவி இருந்தது. அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளே “நீங்கள் வெடிக்கும் பட்டாசுகள், புகை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை அதிகளவில் உண்டாக்கும் . இது ஒரே இரவில் கொசுக்களைக் கொல்வதோடு, தலைநகரில் டெங்கு அதிகரிக்கும் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும். ஒரு பெரிய தீமையை சமாளிக்க சிறிய தீமையை கையாள்வதில் தவறில்லை. பட்டாசிற்கு எதிரான பிரச்சாரத்தை கொஞ்ச காலம் ஒதுக்கி வைக்கலாம் ” என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். இது சுற்றுச்சூழல் துறையினருக்கும் சுகாதாரத்துறையினருக்கும் பெரும் வாதத்தையே உண்டாகியது .
ஆனால் கொசு சாகுதே என்று மகிழ்ந்து போற்ற முடியாது, ஏனெனில் பூச்சிகள் பலவும் சேர்ந்தே மரணிக்கும்! பூச்சிகள் ஒவ்வொன்றும் முக்கியமானது! அதுவே மகரந்தத்தை கடத்தி இயற்கையை பாதுகாக்கும் கருவி் . பூக்களில் அமர்ந்து தேன் பருகி, உடல் முழுவதும் மகரந்தம் தாங்கி . தனது ஒவ்வொரு முறை உணவிலும் நமக்காக மகரந்தம் சுமக்கும் தாய் பூச்சிகள். அதன் இழப்பு பற்றி உலகம் பேசத் தொடங்கி நாளாச்சு . கொசுப் பிரச்சினையில் இதை மறப்பது கொடுமை, மேலும் பச்சிளம் குழந்தை, நோயாளிகள், மிருகங்கள், வயதானோர் ஒலி மாசாலும், காற்று மாசாலும் கடும் அவதி அடைவது கண்கூடு. வெடிக்கும் பொழுதுபோக்கு உயிர்குடிக்கிறது மாற்றமில்லாமல்..
பாம்பு மாத்திரையானது மிக அபாயகரமானது. 9 நொடி பாம்பு மாத்திரை எரியும் போது வெளிப்படும் புகை 464 சிகரெட்டுகளுக்கு நிகரானது. இரண்டாவதாக சரவெடி 1000 வெளியிடும் புகை அளவானது 277 சிகரெட்டுகளுக்கு நிகரானது. பாம்பு மாத்திரை, சரவெடி 1000, கம்பி மத்தாப்பு , சாட்டை, புஷ்வானம், சங்கு சக்கரம் ஆகியவை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த பாதுகாப்பு அளவை விட 200 முதல் 2000 வரை அதிகளவில் கேட்டை வெளியிடுவதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைத்தது சரி என்றாலும் அதை அறிவித்த நேரம் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. பட்டாசு வெடித்து கொண்டாடும் சிறுவர்களுக்கு ஏமாற்றம் அளித்ததை பெரிய விஷயமாக கருத்தாவிடினும் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பெரும் அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியதும் தொழிலாளர்களின் உழைப்பு வீணானதும் வருந்தத்தக்க விஷயமே. தொழிற்சாலைகள் அடுத்த வருடத்தில் முன் கூட்டியே NEERI அமைப்பு பரிந்துரைத்த குறைந்த அளவு மாசை உண்டாக்கும் பசுமை பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்யும் என நம்பலாம்.