This article is from Dec 25, 2021

“டெல்மைக்ரான்” கொரோனா வைரசின் புதிய திரிபு அல்ல : மருத்துவர்கள் தகவல் !

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வருகை அதிகம் இருப்பதும், அவைகளுக்கு பெயர் சூடுவதும் வாடிக்கையாகி விட்டது. தற்போது உலக அளவில் ஓமைக்ரான் வைரஸ் குறித்த அச்சமே பெரிதாய் இருந்து வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு துவங்கி விட்டது.

இதற்கிடையில், டெல்மைக்ரான் வைரஸ் எனும் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது என்றும், கொரோனா வைரஸின் உருமாற்றமான டெல்டா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் வைரஸ் ஆகிய இரு குணங்களையும் கொண்டுள்ளதாக இந்திய அளவில் முன்னணி செய்தி தளங்கள்  வெளியிட்ட செய்தியால் பரபரப்பு உண்டாகியது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசின் புதிய மாறுபாடு வடிவம் குறித்து உலக சுகாதார மையம் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்தியாவில் கோவிட்-19க்கான தேசிய பணிக்குழு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐடிஎம்ஆர்) ஆகியவை டெல்மைக்ரான்/டெல்மிக்ரான் என்றச் சொல்லைப் பயன்டுத்தவும் இல்லை.

அமெரிக்காவின் மத்திய மருந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரப்பிலும் டெல்மைக்ரான் குறித்து தகவல் வெளியாகவில்லை. டெல்டா மற்றும் ஓமைக்ரான் குறித்த தகவல்களையே வெளியிட்டு இருக்கிறது.

இதுகுறித்து மருத்துவர் பிரவீன் கூறுகையில், ” புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசாக டெல்மைக்ரான் என்ற சொல்லை உலக சுகாதார மையமோ அல்லது சிடிசியோ இன்னும் வெளியிடவில்லை.

இங்கிலாந்தில் டெல்டா திரிபு தொடர்பான பரவலும் இருக்கிறது மற்றும் ஓமைக்ரான் திரிபு பரவலும் இருக்கிறது. எனவே, ஒரு சில நோயாளிகளுக்கு இரு வகையும் அடையாளம் கண்டுள்ளனர். எனவே, அதை டெல்மைக்ரான் என அழைத்து இருக்கிறார்கள். அதற்காக அது புதிய திரிபாக ஆகிவிடாது ” எனத் தெரிவித்தார்.

டெல்மைக்ரான் என்பது ஒரு தவறான சொல். இந்தப் பெயரில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு இல்லை. ஒரு நபருக்கு கோவிட்-19 உடைய இரு வகைகளையும் கொண்டிருப்பது அரிதான ஒன்று. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெல்டா மற்றும் ஓமைக்ரான் ஆகிய இரண்டுமே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு நபருக்கு அரிதாக டெல்டா மற்றும் ஓமைக்ரான் ஆகிய வகையும் ஏற்படும் போது டெல்மைக்ரான் எனப் பெயர் வைப்பது சரியல்ல. அது புதிய வைரஸ் மாறுபாடு என்று அர்த்தமும் அல்ல.

இந்திய அளவில் அனைத்து ஊடகங்களும் டெல்மைக்ரான் குறித்து பரபரப்பு உண்டாகும் வகையில் செய்தி வெளியிட்டது அவசரப்பட்ட செயலாகப் பார்க்கப்படுகிறது.

Please complete the required fields.




Back to top button
loader