இந்தியாவில் வேகம் எடுக்கும் டெல்டா+ வகை கொரோனா.. தமிழ்நாட்டில் இதுவரை 9 பேர் பாதிப்பு!

டெல்டா வகை கொரோனா தொற்று பிற வகைகளைக் காட்டிலும் மிக வேகமாக பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது டெல்டா + எனப்படும் அதன் துணை வகை வைரஸால் இந்தியாவில் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையாக டெல்டா வகை கொரோனா இந்தியாவை மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதுவரை 3.94 லட்சம் மக்கள் கொரோனாவால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்துக்கும் மேலானோர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையை கடந்து தற்போது ஜூன் 26 இல் இதுவரை 48,698 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனும் நிலையை இந்தியா எட்டியுள்ளது. படிப்படியாக தொற்றின் தாக்கம் குறைந்து , மூன்றாம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனும் கட்டாயத்தில் உள்ளபோது தான் புதிதாக டெல்டா+ எனும் கொரோனா வகை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது .
பரவும் தன்மை அதிகமாக உள்ளதால் “கவலையளிக்கக் கூடிய வகையாக” டெல்டா+’ஐ அறிவித்துள்ளது உலக சுகாதார மையம் . இந்தியாவில் முதன் முதலில் கர்நாடகாவில் அறியப்பட்ட இந்த தொற்று தற்போது 10 மாவட்டங்களில் பரவியுள்ளது. இதுவரை 48 நபர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 20 கேஸ்களும், தமிழ்நாட்டில் 9 கேஸ்களும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மதுரையை சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரை மூவர் இந்த நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய் பிரிவின் விஞ்ஞானி மற்றும் திட்ட அலுவலர் டாக்டர் சுமித் அகர்வால் , “ஒவ்வொரு எம்ஆர்என்ஏ வைரஸின் பிறழ்வு (mutation) என்பது இயல்பானதே. முன்பு ஆல்பா கொரோனா வைரஸ் இருந்தது. இப்போது டெல்டா , டெல்டா + என வந்துள்ளது. எதிர்காலத்திலும் புது பிறழ்வுகள் ஏற்படலாம். கொரோனாவின் மூன்றாவது அலைகளை பற்றி தற்போது கணிக்க முடியாது , அதற்கு காலம் உள்ளது. இந்த புதிய வகை கொரோனா அதிகமாக பரவுவதாகவும், நுரையீரல் செல்களை அதிகம் தாக்குவதாக உள்ளது மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் சிகிச்சைக்கு எதிராக குறைவான பலனைக் காட்டுவதாக” தெரிவித்துள்ளார்.
ஜூன் 25 ஆம் தேதி டெல்டா+ வகை குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியம் பேசுகையில் , “டெல்டா பிளஸ் வகைக்கான பரிசோதனை மையங்கள் இந்தியா முழுவதும் 14 உள்ளன. அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பெங்களூரில் உள்ள DBT -inStem எனும் ஸ்டெம் செல் சயின்ஸ் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவ ஆய்வகத்திற்கு 1000 சாம்பில்களை அனுப்பி உள்ளோம். அவர்கள் ஆய்வு மேற்கொண்டு காஞ்சிபுரம், சென்னை , மதுரை ஆகிய ஊர்களில் உள்ள மூவர் (இன்றுடன் சேர்த்து 9 நபர்கள்) பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்ட செவிலியர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று தற்போது குணமாகி உள்ளார். கொரோனாவிற்கு கொடுக்கப்படும் அதே சிகிச்சை முறை தான் பின்பற்றப்படுகிறது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.
#IndiaFightsCorona #DeltaPlusVariant 48 cases found in 10 states from 45,000 samples, including retrospective samples (Till 25 June, 2021)#Unite2FightCorona #StaySafe pic.twitter.com/XXXrUKlHlA
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) June 25, 2021
https://www.youtube.com/watch?v=qOoTORNVpvc/