எடிட் செய்து மாணவிகளின் நெற்றியில் “பொட்டு”.. விமர்சனத்துக்குள்ளாகும் தினமலர் செய்தி படம் !

மே 23-ம் தேதி ” உயர்கல்வி ஆலோசனை தரும் ‘தினமலர்’ வழிகாட்டி இன்று துவக்கம்; ‘டாப் லெவல்’ நிபுணர்கள் பங்கேற்பு  ” எனும் தலைப்பில் தினமலர் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.

உயர்கல்வி தொடர்பாக தினமலர் இணையதளத்தில் வெளியான செய்தியில் மாணவிகள் சிலர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அந்த படத்தில் உள்ள மாணவிகள் அனைவரின் நெற்றியிலும் ஒரே மாதிரியாக ” பொட்டு ” இடம்பெற்று இருக்கிறது.

Archive link 

தினமலர் பயன்படுத்திய படமானது, ” 2018-ல் டெல்லியில் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான போது மாணவிகள் செல்பி எடுத்துக் கொள்வதாக டெக்கான் ஹெரால்டு செய்தியில் வெளியாகி இருக்கிறது. ஆனால், இப்படத்தில் மாணவிகளின் நெற்றியில் பொட்டு இல்லை.

செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளில் இடம்பெறும் மாதிரி படங்களை இணையதளத்தில் இருந்து எடுத்து பயன்படுத்துவதுண்டு. ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் வெளியான புகைப்படத்தை பயன்படுத்திய தினமலர், அப்படத்தில் உள்ள மாணவிகளின் நெற்றியில் பொட்டு இருப்பது போன்று எடிட் செய்து பயன்படுத்தி உள்ளது.

தினமலர் செய்தியில், மாணவிகளின் நெற்றியில் பொட்டு வைத்து எடிட் செய்த படம் பயன்படுத்தி இருப்பது ட்விட்டர் தளத்தில் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

Twitter link 

ட்விட்டரில் தினமலருக்கு எழுந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி, ” இங்கு நிறைய சதிக் கோட்பாடுகள் உள்ளன. அது சிக்கலானது அல்ல. ஸ்டாக் போட்டோவில் இருக்கும் வடநாட்டுப் பெண்களை தமிழராக மாற்றும் முயற்சிதான் பொட்டு. எங்கள் திரைப்படங்களில் அதை எப்போதும் செய்கிறோம். எமி ஜாக்சனுக்கு கூட சேலையும், பொட்டும் கொடுத்து தமிழ்ப்பொண்ணு என சொல்லி அனுப்புகிறோம் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ஆனால், நடிகை கஸ்தூரியின் இந்த ட்வீட் பதிவும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader