எவ்வளவு.. தினமலர் பரப்பிய பொய் செய்திகள் மற்றும் வதந்திகளின் தொகுப்பு !

உலகளாவிய மக்களை தங்களது உண்மை செய்திகளின் மூலம் இணைப்பதிலும், மக்களிடம் அறிவார்ந்த செய்திகளை கொண்டு சேர்ப்பதிலும் ஊடகங்கள் மிக முக்கியமான பங்கை வகுக்க வேண்டும். ஆனால் தினமலர் நாளிதழின் இன்றைய (ஆகஸ்ட் 31) சேலம் மற்றும் ஈரோடு பதிப்பின் முதல் பக்கத்தில் “காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட, பல்வேறு அரசியல் தலைவர்களும் பலத்த கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாகவும், தினமலர் பரப்பிய பல்வேறு தவறான செய்திகளை ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் தனித்தனியாக செய்தி வெளியிட்டுள்ளது. அத்தொகுப்பினை இக்கட்டுரையில் காண்போம்.
1.தமிழ்நாடு இரண்டாக பிரியப்போவதாக தினமலர் வெளியிட்ட தவறான செய்தி:
கடந்த 2021 ஜூலை 09 அன்று தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் “கொங்கு நாடு” எனும் தனி யூனியன் பிரதேசமாக ஆகிறது எனும் செய்தியை தினமலர் வெளியிட்டது. அந்த செய்தியில், ”மத்திய அரசை”, “ஒன்றிய அரசு” என பல்வேறு தரப்பினரும் கூறி வருவதால் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை ”கொங்கு நாடு” என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
செய்தியை முழுமையாக படித்து பார்த்த பிறகு, இது அனைத்தும் அரசியல் வட்டாரச் செய்தி என அறிய முடிந்தது. ஒரு அரசியல் வட்டார செய்திக்காக தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க போகிறார்கள் போன்ற தலைப்பை வைத்து பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் வண்ணம் தினமலர் பொய் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: கொங்கு நாடு உருவாகுது, தமிழ்நாடு இரண்டாக பிரிகிறது என தினமலர் வெளியிட்ட தவறான செய்தி !
2. தமிழகப் பாடத்திட்டத்தில் மும்மொழி கொள்கை எனத் தவறான செய்தியை வெளியிட்ட தினமலர்:
கடந்த 2022 ஏப்ரல் 24 அன்று தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அரசு யாருக்கும் தெரியாமல் அமல்படுத்தி இருப்பதாக தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது என்பதை மறக்க முடியாது. அப்போது வெளியிட்ட செய்தியில், “புதியக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழிக் கொள்கை திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் மறைமுகமாக அமலாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடப்பு ஆண்டில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், முதல் தேர்வாக மொழிப் பாடத்திற்கும், இரண்டாவதாக ஆங்கிலப் பாடத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது. மூன்றாவது மொழி என்றால், இந்தி , உருது, சமஸ்கிருதம் என எந்த மொழியாகவும் இருக்கலாம்.” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தரப்பில் மறுப்பு தெரிவித்து செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் “தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்” என அதில் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிந்தது.
மேலும் படிக்க: தமிழகப் பாடத்திட்டத்தில் மும்மொழி கொள்கை எனத் தவறான செய்தியை வெளியிட்ட தினமலர் !
3. எம்.பி திருமாவளவனுக்கு இருக்கை அளிக்காமல் ஓரமாக நிற்க வைத்ததாக வதந்தி பரப்பிய தினமலர்:
கடந்த 2022 ஜூன் 27 அன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்த போது உடன் சென்ற எம்.பி தொல்.திருமாவளவன் அவர்களுக்கு அமர இருக்கை அளிக்காமல் ஓரமாய் நிற்க வைக்கப்பட்டதாக தினமலர் செய்தி வெளியிட்டது.
இது குறித்து சன்சாத் டிவி வெளியிட்ட வீடியோவில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, ராசா உள்ளிட்டப் பல கட்சிப் பிரதிநிதிகள் பலரும் உள்ளே வந்து அமர்ந்து இருக்க 16-வது நிமிடத்தில் உள்ளே வரும் திருமாவளவன் பின் வரிசைக்கு சென்று சிறிது நேரம் நின்று விட்டு பிறகு இருக்கையில் அமர்ந்து இருப்பதை தெளிவாகக் காண முடிந்தது என ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க: எம்.பி திருமாவளவனுக்கு இருக்கை அளிக்காமல் ஓரமாக நிற்க வைத்ததாக வதந்தி பரப்பும் தினமலர் !
4. பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை வெளியிட்ட தினமலர்:
ஜனவரி 09, 2023 அன்று “கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி” என்ற தலைப்பில் தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் 2021-ஆம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த ஒரு பழையப் புகைப்படத்தை, 2023ல் பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாகக் கூறி தவறாகப் பரப்பியதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை செய்தியாக வெளியிட்ட தினமலர் !
5. ‘மோடி நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்’ என அமெரிக்கா கூறியதாக பொய் செய்தி பரப்பிய தினமலர்:
2023 பிப்ரவரி 13 அன்று ‘மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போரினை முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டது.
இது குறித்து ஆய்வு செய்ததில், “போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருப்பதாக நினைக்கிறேன். போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருப்பதாக நினைக்கிறேன்” என இரண்டு முறை ஜான் கிர்பி கூறுகிறார். அப்போது செய்தியாளர் குறுக்கிட்டு, ‘மோடியால் புதினை சமாதானப்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?’ என மீண்டும் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்து பேசிய அவர் எந்த ஒரு இடத்திலும் மோடியால் தான் போரை நிறுத்த முடியும் எனக் கூறவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் ‘மோடியால் புதினை சமாதானப்படுத்த முடியுமா?’ எனச் செய்தியாளர் குறுக்கிட்டு கேள்வி கேட்ட போது மட்டுமே, மோடி என்ன முயற்சி வேண்டுமானாலும் எடுக்கட்டும், போரை நிறுத்தும் எந்த முயற்சியாக இருந்தாலும் அதனை கண்டிப்பாக நாங்கள் வரவேற்போம் என்றே கூறியுள்ளார். ஆனால், இதை தினமலர் தவறான செய்தியாக வெளியிட்டு இருந்தது.
மேலும் படிக்க: ‘மோடி நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்’ என அமெரிக்கா கூறியதாக பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் !
6. நடிகர் விஜய் வாரிசு பட வெற்றியை பட்டாக் கத்தியுடன் கொண்டாடியதாக தினமலர் வெளியிட்ட பொய் செய்தி:
2023 பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடிய போது, நடிகர் விஜய் பட்டாக்கத்தியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருவதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஆனால் செய்தியில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட படம் என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: நடிகர் விஜய் வாரிசு பட வெற்றியை பட்டாக் கத்தியுடன் கொண்டாடியதாக தினமலர் வெளியிட்ட பொய் செய்தி !
7. வாட்ஸ் அப் வதந்தி தகவலுக்கு பரிசு கொடுத்த தினமலர்:
“நீங்கள் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது, திடீரென ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்து தருமாறு மிரட்டினால், உங்கள் பின் நம்பரை தலைகீழாக டைப் செய்யவும். அதாவது 123 என்றால் 321 என்று டைப் செய்யும்போது உங்கள் பணம் வெளியே வரும்; ஆனால், பாதியிலேயே சிக்கிக் கொள்ளும். உடனே, காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். எல்லா ஏ.டி.எம்.மிலும் இவ்வசதி உண்டு.” என்று வாசகர் ஒருவர் வாரமலரில் தெரிவித்துள்ளார். இது ஒரு தவறான செய்தி.
ஆனால், இந்த தகவலை தினமலர் நாளிதழ் தன்னுடைய வாரமலரில் பதிவிட்டது மட்டுமின்றி மூன்றாம் பரிசாக ரூ.1500 அளித்ததாக வெளியிட்டது.
மேலும் படிக்க: வாட்ஸ் அப் வதந்தி தகவலுக்கு பரிசு கொடுத்த தினமலர் !
8. ஃபேஸ்புக் வதந்தியை செய்தியாக வெளியிட்ட தினமலர்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்த போது, பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை கண்டறிந்தனர் நாசா’ விஞ்ஞானிகள் என்று கூறி தினமலர் செய்தித்தளத்தில் கடந்த 2019-இல் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை முதலில் நகைச்சுவை நடிகரான வெங்கடேஷ் ஆறுமுகம் தன் முகநூலில் பதிவிட்டு இருந்தார். ஃபேஸ்புக் பக்கத்தில் பரவிய பொய்யான செய்தியை உண்மை நினைத்து தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது.
மேலும் படிக்க: ஃபேஸ்புக் வதந்தியை செய்தியாக வெளியிட்ட தினமலர் !
9. ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், ரவீந்திரநாத் படங்கள் இடம்பெற ஆர்.பி.ஐ பரிசீலனை என வதந்தி பரப்பிய தினமலர்:
ரூபாய் நோட்டுகளில் ரவீந்தரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் படத்தை அச்சிடுவது குறித்து மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக கடந்த 2022 ஜூன் 05 அன்று தினமலர் செய்தி வெளியிட்டது.
ஆனால், இவ்வாறு போலி செய்திகள் பரவுவது குறித்து மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
மேலும் படிக்க: ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், ரவீந்திரநாத் படங்கள் இடம்பெற ஆர்.பி.ஐ பரிசீலனை என வதந்தி !
10. மும்பை டூ நாக்பூர் விரைவுச் சாலை என தாய்லாந்து சாலைப் படத்தை பதிவிட்ட தினமலர்:
மும்பை டு நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே ₹55,000 கோடியில் பிரமாண்ட சாலை என்ற தலைப்பில், கடந்த 2022 டிசம்பர் 07 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டது.
ஆனால் நம் ஆய்வின் முடிவில், இது தாய்லாந்து நாட்டிலுள்ள ஒரு பாலம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும் படிக்க: மும்பை டூ நாக்பூர் விரைவுச் சாலை என தாய்லாந்து சாலைப் படத்தை பதிவிட்ட தினமலர் !
11.குஜராத் மாநிலத்துக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று கனடா அரசு அறிவித்ததாக செய்தி வெளியிட்ட தினமலர்:
கடந்த 2022 செப்டம்பர் 30 அன்று ‘குஜராத் செல்ல வேண்டாம் : கனடா விஷமத்தனம்’ என்ற தலைப்பில் தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து தேடியதில், “குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பகுதிகளுக்கு எங்கும் பயணம் செய்ய வேண்டாம்” என கனடா அரசு கூறியதை குஜராத்திற்கு செல்ல வேண்டாம் என தவறான புரிதல்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு குடிமக்கள் செல்ல வேண்டாம் என்றதா கனடா அரசு ?