பெரம்பலூரில் கண்டுபிடிக்கப்பட்டது டைனோசர் முட்டைகளா ?

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் வெங்கட்டான் குளத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றபோது டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியது. மேலும், குன்னம் கிராமத்தில் ஆனைவாரி ஓடையின் நடுப்பகுதியில் பாறைகளுக்கிடையே புதைந்த நிலையில் கல்மரம் இருப்பதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகின.

Advertisement

பெரம்பலூர் குன்னம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முட்டை வடிவிலான 25 உருண்டைகள் டைனோசரின் முட்டைகளாக இருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டைகள் கிடைத்ததாக சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், அவை டைனோசர் முட்டைகளே இல்லை என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அப்பகுதியைப் பார்வையிட்ட புவியியல் மற்றும் அகழாய்வு ஆய்வாளர்கள் குழு, அவற்றை அம்மோனைட் படிமங்கள் எனக் கூறுகின்றனர். ” கடல் இனங்கள் பல நூற்றாண்டுகளாக ஒத்திசைவு செயல்பாட்டில் சிக்கியிருக்க வேண்டும். இது டைனோசர் முட்டை என தவறாக கருதப்பட்டுள்ளது. இன்றைய மத்திய தமிழ்நாட்டில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகியவை ஒரு காலத்தில் கடற்பரப்பாக இருந்தன ” என்று அக்குழுவை வழிநடத்திய ரமேஷ் கருப்பையா கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது .

வைரலாகும் படிமங்களின் புகைப்படங்களை பார்வையிட்ட புவியியல் ஆய்வாளர் நிர்மல் ராஜா ” இது டைனோசர் முட்டை இல்லை ” என தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

Facebook link | Archive link

Advertisement

தன்னுடைய பதிவில், ” குன்னம் பகுதியில் உள்ள படிமப்பாறைகள் சுமார் ஒன்பது – பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்னர் Turonian – Cenomanian – Cretaceous காலகட்டத்தில் கடலின் ஆழ்ம சுமார் நூறு மீட்டர்கள் இருக்கும் பொழுது உருவானவை. அம்மோனைட்கள், சிப்பிகளின் தொல்லுயிர் எச்சங்கள் பல அங்கு கிடைத்துள்ளது, பல வருட ஆராய்ச்சில் அங்கு டைனோசர் முட்டைகள் எங்கும் கிடைத்ததில்லை. நானும் பல முறை அங்கு சென்றுள்ளேன் ஒரு முறை கூட கண்டதில்லை. அவை அனைத்தும் concretions, படிமப்பாறைகள் உருவாகுன் பொழுது ஒரு இடத்தில் ஒரு சிறிய தொல்லுயிர் எச்சமே, அல்லது ஒரு சிறு பொருள் இருந்தால் அதை சுற்றி தாதுக்கள் சேரும், mineral precipitate ஆகும், சிறு சிறு லேயர்களாக சேர்ந்து முட்டை வடிவில் இருக்கும். இவை முட்டைகளில்லை. அரியலூரில் டைனோசர் முட்டைகள் இருக்கிறது, அற்புதமான இடம் ஆனால் இச்செய்தி தவறானது ” எனப் பதிவிட்டு இருந்தார்.

யூடர்ன் தரப்பில் நிர்மல் ராஜாவை தொடர்பு கொண்டு பேசிய போது, ” கடலில் உருவான படிமப்பாறைகளில் முட்டைகள் கிடைக்காது. டைனோசர்கள் நிலத்தில் வாழ்ந்த உயிரினங்கள், நிலத்தில் முட்டையிடுபவை. அரியலூர் டாண்செம் சிமெண்ட் ஆலை குவாரியில் கிடைத்த ஒரே ஒரு முட்டை அப்படி கடலில் சிப்பி தொல்லுயிர் எச்சங்களுக்கிடையே கிடைத்தது. அந்த முட்டை ஒரு ஆற்று வெள்ளத்தில் அடித்து கடலுக்கு போய் சேர்ந்து இருக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. கடலில் எந்தவொரு டைனோசரும் வாழ்ந்ததில்லை. ஒரே ஒரு ஸ்பைனோசரும் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய Semi Aquatic தான். பெரம்பலூரில் கிடைத்தவை அம்மோனைட் படிமங்களாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட அம்மோனைட் படிமங்கள் அங்கு கிடைத்துள்ளன. குன்னம் பகுதியில் கன்னெடுக்கப்பட்ட படிமங்களை டைனோசர் முட்டை படிமங்கள் என தவறாக செய்தியைப் பரப்பி வருகிறார்கள் ” என விளக்கி இருந்தார்.

அம்மோனைட் (அம்மோனாய்டுகள்) என்பது டெவொனிய காலத்தில் (சுமார் 416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்ந்த பெரிய மற்றும் மாறுபட்ட கடல் இனங்களாகும். நேஷனல்ஜியோகிராஃபிக்.காமில் கிடைத்த தகவல்களின்படி, அம்மோனைட்டுகள் கடலில் வேட்டையாடுவார்களாக இருந்தன. அவை ஒரு காலத்தில் பூமியில் மிகவும் வெற்றிகரமான மற்றும் மாறுபட்ட விலங்குகளில் ஒன்றாக இருந்தன. அவற்றின் தனித்துவமான மல்டிகாம்பர்டு ஷெல்களில் இருந்து கூடாரங்கள் போன்ற ஸ்க்விட் இருந்தன.

அப்பகுதிக்கு நேரில் சென்ற விலங்கியல் ஆய்வாளர் பிரசாத் சுந்தரேசன் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” இதற்கு முன்பாக டாண்செம் சிமெண்ட் ஆலை பகுதியில் உருளை வடிவில் ஒரே ஒரு டைனோசர் முட்டை படிமம் மட்டுமே கிடைத்தது. அதைப் பார்த்ததில் இருந்து உருளை வடிவில் எதைப் பார்த்தாலும் டைனோசர் முட்டை எனும் எண்ணம் அங்குள்ளவர்களுக்கு உருவாகி உள்ளது. பெரம்பலூர் பகுதியில் அம்மோனைட் படிமங்கள் இருந்தது உண்மை, ஆனால் டைனோசர் முட்டை எனக் கூறுவது உண்மையில்லை. குன்னம் உள்ளிட்ட பகுதிகளின் ஓடைகளில் உருளை வடிவில் nodules அதிக அளவில் இருக்கும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

” படிமங்களின் கண்டுபிடிப்பு குறித்து இந்திய புவியியல் ஆய்வு அதிகாரிகளிடம் இருந்து நிபுணர் கருத்தை பெற உள்ளதாகவும், தேவைப்பட்டால் அவற்றை பாதுகாப்பிற்காக பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதாகவும் ” மாவட்ட ஆட்சியர் வி.சாந்தா தி ஹிந்து செய்திக்கு தெரிவித்து உள்ளார்.

குன்னம் பகுதியில் கிடைத்த படிமங்கள் உருளை வடிவில் பெரிதாய் இருந்த காரணத்தினால் டைனோசர் முட்டை என தவறாக நினைத்து பரப்பி உள்ளனர். ஊடகங்களும் டைனோசர் முட்டை கிடைத்து உள்ளதாக செய்தி வெளியிட இணையத்தில் தீயாய் பரவி உள்ளது.

Links : 

‘Dinosaur eggs’ found in TN’s Perambalur are ammonite sediments, geology enthusiasts say

Claims on dinosaur eggs to be verified

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button