மதிவதனி குறித்து அவதூறு, பொய்கள்.. அவர் பேசிய தவறான தகவல்கள் : விரிவான தொகுப்பு !

வழக்கறிஞரும், திராவிடர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளருமான மதிவதனி குறித்து பல செய்திகள் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினாரல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. பரவிவரும் செய்திகள் குறித்த தொகுப்பை இங்கே ஆதாரங்களுடன் காண்போம்.

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 500 சொச்சம் தான்:

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 500 சொச்சம் தான் என்று மதிவதனி கூறுவதைப் போன்ற 38 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினாரல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

Archive Link:

இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்ததில், கடந்த ஏப்ரல் 28 அன்று புதிய தலைமுறையின் வட்டமேசை விவாதத்தில் மதிவதனி பேசிய போது, வீடியோவின் 51:20 நிமிடங்களில் பேசிய அவர், உத்திரபிரதேசத்தில் உள்ள பொது நூலகங்களின் எண்ணிக்கை வெறும் 278, மதுக்கடைகளின் எண்ணிக்கை 27522. மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய பொது நூலகங்களின் எண்ணிக்கை வெறும் 48, மதுக்கடைகளின் எண்ணிக்கை 25000. தமிழ்நாட்டில் இருக்ககூடிய பொது நூலகங்களின் எண்ணிக்கை 4622. மதுக்கடைகளின் எண்ணிக்கையையும் சொல்றேன். அது வெறும் 500 சொச்சம்” என்று பேசியிருந்தார். ஆனால் அதே நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் பேசிய அவர், “முதல் சுற்றில் வரிசையாக பேசியபோது 5000 சொச்சத்தை, 500 சொச்சம் என்று கூறிவிட்டேன்” என்று பேசியிருப்பார். 

ஆனால் அவருடைய முதல் சுற்று வீடியோவை மட்டும் தவறாகப் பரப்பி வருகின்றனர். மேலும் இவர் கூறியுள்ள பொது நூலகங்களின் எண்ணிகையை ஆய்வு செய்ததில், அதில், NGO/அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் நூலகங்களை தவிர்த்து, அரசு நடத்தும் பொது நூலகங்களை மட்டும் அவர்  கூறியிருப்பதை அறிய முடிந்தது. அந்த எண்ணிக்கைகள் அனைத்தும் சரியானதே.

இதே போன்று தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததில், இந்த எண்ணிக்கை 5329-ஆக உள்ளது என்பதை 2023 ஏப்ரலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. மேலும் அப்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி சட்டசபையில் “இந்த ஆண்டு 500 மதுக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது” என்றும் தெரிவித்திருந்தார்.

1997 ஹிரோஷிமா மாநாட்டில் ஸ்டாலின் நிகழ்த்திய உரை:

“ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு சம்பவம் நடந்தது எப்போது? ஸ்டாலின் எப்போது மேயர் ஆனார்?” என்று கூறி மதிவதனி பேசிய மற்றொரு வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Archive Link:

கடந்த மார்ச் ௦3 அன்று முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், “ஹிரோஷிமா நாகசாகி அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். முதல் அணுகுண்டு வெடிப்பு. அந்த அணுகுண்டு வெடிப்பில் இனிமேல் இங்கே புல் பூண்டு கூட முளைக்காது என்று சொல்லிவிட்டார்கள். அப்போது அந்த தாக்குதலில் 15 வயதுதக்க அம்மையார் ஒருவர், அவருக்கு இப்போது வயது 75-க்கு மேலே இருக்கும். அந்த அம்மையாரின் குழந்தை பெயர் டொபாக்கோ. அவருக்கும் திருமணம் ஆகிறது. அவர் பயப்படுகிறார். நமக்கு அடுத்த தலைமுறை வராதோ என்று. அவருக்கும் குழந்தை பிறக்கிறது.

அவர்கள் இருவரிடமும் பேட்டி எடுக்கிறார்கள். எப்படி இவ்வாறு வளர்ந்தீர்கள் என்று. அப்போது அவர்கள் சொன்னார்கள் ஜப்பான் இதோடு அழிந்து விட்டது என்று ஏராளமானோர் சொன்னார்கள். இதைத் தாண்டி ஜப்பான் வளர்ந்ததற்கு காரணம் அங்கு வாழ்ந்த மனிதர்கள்” என்று சொன்னார்கள்.

இதற்கும் முதல்வருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். அப்படியாக இந்த ஹிரோஷிமா நாகசாகியில் மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பு, எதுவுமே இங்கு புல் பூண்டு கூட முளைக்காது என்று இருந்த இடம், 1997-இல் நம்முடைய இன்றைய முதல்வர், அன்றைய சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் அவர்கள், அந்த மாநாட்டிற்கு (ஹிரோஷிமா மாநாடு) செல்கிறார். அங்கு அறிவியலைப் பயன்படுத்தி, மொழி, நாடு, தேசம், இனம், மதம், சாதி ஆகியவற்றைக் கடந்து அறிவியலை துணைக்கொண்டு முன்னேறுவோம்” என்று பேசியுள்ளார்.” என்று அந்த மேடையில் மதிவதனி பேசியுள்ளார்.

இது குறித்து ஆய்வு செய்ததில், “நகரங்களுக்கு இடையே நடைபெறும் ஒற்றுமை மூலம் அமைதியை வலியுறுத்தும் மேயர்களுக்கான 4-வது உலக மாநாடு” என்ற பெயரில் கடந்த 1997-ல் நடைபெற்ற ஹிரோஷிமா அமைதி மாநாட்டில் அப்போதைய மேயராக இருந்த ஸ்டாலின் பேசியிருந்ததை, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் புகைப்படங்களில் இருந்து உறுதி செய்ய முடிந்தது.

இதன் மூலம் மு.க.ஸ்டாலின் ஹிரோஷிமா மாநாட்டில் கலந்து கொண்டதாக மதிவதனி பேசிய செய்திகள் உண்மை என்பது தெளிவாகிறது.

தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வந்தது கலைஞர் ?

தாலிக்கு தங்கம் திட்டத்தை கலைஞர் அறிவித்தார் என்று மதிவதனி கூறியதாக இன்னொரு வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

X post link

இது குறித்து ஆய்வு செய்ததில், கடந்த மார்ச் ௦3 அன்று முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், “பூணூல் போட்டால் தான் கல்வி என்று சொன்னது ஆரியம், நான் நூல் தருகிறேன் படிக்க வா என்று அழைத்தது திராவிடம். இவர்கள் சாதாரணமாக எல்லாம் படிக்க வா என்று கூப்பிடவில்லை. பெரியபாடு பட்டு நிறைய செய்து கூப்பிட்டிருக்கிறார்கள். அது எங்கு வந்து நிற்கிறது என்றால், தாலிக்கு தங்கம் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தார். அதே போன்று தமிழ்வழி கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது” என்று அந்த நிகழ்வில் பேசியுள்ளார்.

ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து ஆய்வு செய்ததில், 1989ல் கலைஞர் கருணாநிதியால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமான “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டத்தின் கீழ்“, பெண்கள் எட்டாம் வகுப்பு படித்து முடித்தால், அவர்கள் திருமணத்தின்போது ரூ. 5000 திருமண நிதியுதவி தொகை வழங்கப்படும் என்பதை அறிவித்தார். பின்னர் 2011-ல் ஆட்சிக்கு வந்த அப்போதைய முதலவர் ஜெயலலிதா, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டத்தின் கீழ் “தாலிக்கு தங்கம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார் என்பதை அறிய முடிந்தது. 

இந்தியாவிலேயே பெண் காவலர்களை 1973 இல் நியமித்தவர் கலைஞர் ?

இதேபோன்று, “இந்தியாவிலேயே காவல் துறையில் 1973-ல் பெண்களை காவலர்களா அமர்த்தியவர் கலைஞர் அவர்கள்” என்று கூறி மதிவதனி பேசிய மற்றொரு வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Archive Link:

இது குறித்து தேடியதில், சுதந்திரத்திற்கு முன்பு 1937-ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதன்முதலில் காவல்துறையில் பெண்களையும் சேர்த்து கொண்டுள்ளனர் என்பதையும், சுதந்திரத்திற்கு பின்பு முதன்முதலில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் 1948-இன் போது ஒரு பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் பெண்கள் காவலர் பிரிவு ஏற்படுத்தப்பட்டது என்பதையும் அறிய முடிந்தது.

மாநிலவாரியாக ஆய்வு செய்ததில், 1973 அக்டோபரில் முதன் முதலில் பெண்கள் காவல்நிலையம் கேரளாவின் கோழிக்கோட்டிலும், 1973 டிசம்பரில் ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக்காவலர், இருபது பெண்காவலர்கள் தலைமையில் தமிழ்நாட்டிலும் பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

மதிவதனியின் இயற்பெயர் S.M.காந்தலட்சுமி ?

மதிவதனியின் இயற்பெயர் S.M.காந்தலட்சுமி, திராவிடம் அரசியலுக்கு வைத்த பெயர்: S.M.மதிவதனி, தந்தை பெயர்: சந்திரமோகன் ஜகர்லமுடி, தாய்பெயர்:மானஸா பிந்து” என்று கூறி சரவண பிரசாத் உட்பட பாஜகவினர், நாம் தமிழர் கட்சியினர் என பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

Archive Link

இது குறித்து யூடர்ன் தரப்பிலிருந்து மதிவதனியை தொடர்பு கொண்டு பேசினோம். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தன்னுடைய இயற்பெயரே மதிவதனி தான் என்று கூறியதோடு, தன்னுடைய தந்தை பெயர், தாயின் பெயரையும் தெரிவித்து இருந்தார். மேலும், அதற்கான ஆவணங்களையும் யூடர்னிடம் அளித்தார். அதில், அவரது பெயர் மற்றும் அவரின் தந்தை, தாய் ஆகியோர் பெயர் வைரல் செய்யப்படுவது போன்று இல்லை. அவரின் தனிநபர் பாதுகாப்பு கருதி அந்த ஆவணங்களை கட்டுரையில் இணைக்கவில்லை.

மேலும், மற்ற செய்திகள் குறித்தும் அவரிடம் பேசியதில், “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்” என்ற பெயரில் திருமணத்திற்கான நிதியுதவியை முதன் முதலில் தொடங்கியது கலைஞர் தான். ஆனால், அதை பின் நாட்களில் ஜெயலலிதா அவர்கள் மேம்படுத்தி தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை அறிவித்தார். அப்படி மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் முன்னோடியாக கலைஞர் இருந்தார் என்பதை சொல்வதற்கு பதிலாக “தாலிக்கு தங்கம்” என்றே சொல்லிவிட்டேன். அது ஒரு கவனக்குறைவு. 

பெண் காவலர்களை நியமித்த முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஜெயலலிதா அவர்கள் மகளிர் காவல் நிலையத்தை அறிவிக்கும் முன்னரே கலைஞர் அவர்கள் பெண் காவலர்களை நியமித்தார் என்பது வரலாறு. ஆனால், அது ‘இந்தியாவிலேயே முதல்முறையாக’ எனச் சொல்லி இருந்தேன். பின்னர் அதில் மாற்றம் இருக்கிறது எனத் தெரியவந்தது, அதை நான் ஏற்கிறேன். என்னுடைய நோக்கம் உண்மையான செய்திகளை கொண்டு  போய் சேர்க்க வேண்டும் என்பதெல்லாமல் நாம் சொல்வது தான் உண்மை என்று நிரூபிப்பது அல்ல. தவறுகளின்றி வரும்காலங்களில் சரியாக பேசுவேன். தவறை ஏற்பது இகழ்ச்சி அல்ல ” எனத் தெரிவித்து இருந்தார். 

 

ஆதாரங்கள்:

https://economictimes.indiatimes.com/nation-world/the-many-things-amma-was-list-of-schemes-implemented-by-jayalalithaa/thalikku-thangam-thittam/slideshow/55831914.cms

https://ps.keralapolice.gov.in/vanithakkdc-ps/about

https://www.iegindia.org/upload/publication/Workpap/wp347.pdf

tamil-nadu-tasmac-earned-record-rs-33811-crore-last-fiscal-year

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader