திமுக ஆட்சியில் 150 கோவில்கள் இடிக்கப்பட்டனவா ? குஜராத்தில் 80 கோவில்கள் ஏன் இடிக்கப்பட்டது தெரியுமா ?

திமுக ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் இந்து கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. பாஜக, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்டவை தொடர்ந்து இக்குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். தமிழக அரசு நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை மட்டும் இடிப்பதாக பிரச்சாரம் ஒன்றை இந்திய அளவில் வலதுசாரி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதற்கான தமிழகத்தில் கோவில்கள் இடிக்கப்பட்டன, அதற்கான பின்னணி மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் பற்றி விரிவாக காண்போம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு :

தமிழகத்தில் அரசு நிலங்களில் அல்லது நீர்நிலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், மத வழிபாடு தளங்கள் என ஆக்கிரமித்து கட்டப்பட்ட அனைத்தையும் அகற்றும் பணிகள் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு விசயத்தில் நீதிமன்றம் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது மட்டுமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

2021 செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம், ” தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளன, அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும் ” என உத்தரவிட்டு இருந்தது.

” தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 57,688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் 8,797 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கும் எந்தவொரு அதிகாரியும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர்நிலைகள் உள்ளன. அதன் சர்வே எண்கள் என்ன, அதன் பரப்பளவு என்ன என்பது குறித்தான விரிவான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு விசயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரையும் மன்னிக்க முடியாது.

அதிகாரிகள் செய்யும் தவறுக்காக தமிழக அரசை குறைகூற முடியாது. தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கு மற்றும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்பிற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு. ஏனென்றால், அவர்கள் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை ” என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு தெரிவித்தாக 2021 டிசம்பர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

கோவில்கள் இடிப்பும், பின்னணியும் : 

தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கண்டனத்தைப் பெற்றது. ஆனால், ஆஞ்சநேயர் கோவில் அடையாறு ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளதாகவும், வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் கோவிலை இடிக்க முடிவு செய்து நோட்டீஸ் வழங்கினர். டிசம்பர் 19-ம் தேதி கோவிலை இடிக்க சென்ற போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் மீது ஏறிக் கொண்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். பின்னர் ஜனவரி 11-ம் தேதி அதிகாரிகள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வரதராஜபுரம் அருகே அடையாறு ஆற்றையொட்டி 30 சென்ட் பரப்பளவில் கோவில், சர்ச், சில குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. அவற்றை அகற்ற முடிவு செய்து அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக இந்து தமிழ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2021 டிசம்பர் 18-ம் தேதி, ” கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் வாசுதேவன் குட்டை அருகே அமைந்துள்ள வாசுதேவன் கோவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருவதாகவும், அந்த கோவிலை சுற்றி பொதுமக்களால் உப கோவில்கள் கட்டப்பட்டன. கோவில் அருகில் வேளாண்மை நிலத்துக்கான வழித்தடம் உள்ளதால் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கோவில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்படுவதால் நீதிமன்றம் கோவிலை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, புதிதாக கட்டப்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டன ” என மாலைமுரசு செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அடுத்ததாக, மதுரை அருகே இலங்கிப்பட்டியில் சாலையோரம் அமைந்து இருந்த வாழவந்தான் அம்மன் கோவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இலங்கியேந்தல் கண்மாய் மறுகால் பாயும் இடத்தை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளதாகவும், அதன் அருகே மற்றொரு கோவிலும் கட்டப்பட்டது என அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 2020ம் ஆண்டிலேயே கோவிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், மேல்முறையீடு என தள்ளிப்போக இறுதியாக 2021 ஜூலையில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் 2021 ஆகஸ்ட் மாதம் கோவில் இடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் சிவன் கோவில் ஒன்றை பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் கண்டனம் பெற்றது. ஆனால், பெரிய ஏரி புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அந்த கோவில் மட்டுமின்றி 2 பெரிய கட்டிடங்களும் கூட இடிக்கப்பட்டன என விரிவான கட்டுரையை நாம் வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : தனியார் ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடிப்பு.. பரபரப்பு காரணம்!

2021-ம் ஆண்டு ஜூலை மாதம் கோவையில் “ஸ்மார்ட் சிட்டி ” திட்டப் பணிகளுக்காக முத்தண்ணன் குளக்கரையில் மரத்தடியில் இருந்த சிறு கோவிகள் உட்பட 9 கோவில்கள் மற்றும் குடியிருப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் இடிக்கப்பட்டன. தடாகம் சாலை முத்தண்ணன் குளக்கரையில் வசித்த மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு அரசு குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர் ” என இந்து தமிழ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் :

2020 செப்டம்பர் மாதம் தஞ்சையில் பிரம்மாண்ட சிவலிங்க சிலை அமைந்திருந்த ஆதிமாரியம்மன் கோவில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை பொதுப்பணித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கோவில் இடிப்பு தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவினாலேயே ஏரியை ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட கோவில் இடிக்கப்பட்டது.

மேலும் படிக்க : தஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.

2019 நவம்பர் மாதம் கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி பகுதியில் சானல் கரையோரம் கட்டப்பட்டிருந்த கோவில் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. சுடலைமாடசுவாமி கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் போது கோவில் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டதால் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

2019 நவம்பர் மாதம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கோவில், 30 கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது என தினகரன் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

பிற மத வழிபாட்டு தளங்கள் இடிப்பு : 

2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பென்னலூர் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பாதையையும், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேவாலயத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2022 ஜனவரியில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலத்தில் நீர் வழிப்பாதையில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் மட்டுமின்றி நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து இருந்த தேவாலயம் ஒன்றின் சுற்றுச்சுவரும் இடித்து அகற்றப்பட்டது என்றும், இந்து கோவில்கள் மட்டுமே இடிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் ஆணையர் தெரிவித்து இருந்தார்.

2021 டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக திரேஸ்புரம் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் கொடிமரம் ஆகியவை ஆக்கிரமிப்பு நிலத்தில் இருப்பதாகக் கூறி அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

இப்படி கடந்த அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், வீடுகள், மத வழிபட்டு தளங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு இருக்கின்றன.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோவில்களின் நிலங்களை மீட்பது மட்டுமே எங்கள் கட்டுப்பாட்டில் வரும். ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் அகற்றுவது சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்தது. துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தனியார் கோவில்கள் அகற்றப்படுவது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படாது ” எனத் தெரிவித்து இருந்தனர்.

ஆக, இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் எதுவும் இடிக்கப்படவில்லை. தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில்கள் தான் இடிக்கப்பட்டு இருக்கிறது என்பது புரிய வருகிறது.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலரைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசின் உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். நீதிமன்றமும் கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்து இருக்கிறது. வழக்கமாக, நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றி கணக்கெடுப்பு எடுத்து அகற்றி வருகிறோம்.

150 கோவில்கள் இடிக்கப்பட்டதாக கூறுவது மிகைப்படுத்தப்பட்டது. இங்கு ஸ்ரீபெரும்புதூர் ஏரி பகுதியில் தனியார் ஆக்கிரமித்து கட்டிய ஒரு கோவிலை மட்டுமே இடித்து இருக்கிறோம். கோவில் மட்டுமின்றி ஆக்கிரமிப்பில் இருந்த கேன்டீன் உள்பட 2 பெரிய கட்டிடங்களையும் அகற்றி இருந்தோம். ஆனால், அதை யாரும் பேசுவதில்லை. கோவில்கள் மட்டுமே இடிக்கப்படவில்லை, சமீபத்தில் பென்னலூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த சர்ச் ஒன்றும் கூட அகற்றி உள்ளோம். தற்போதும் ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை சேகரித்துக் கொண்டு தான் இருக்கிறோம் ” எனத் தெரிவித்து இருந்தார்.

குஜராத் 80 கோவில்கள் இடிப்பு : 

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கோவில்கள் நீதிமன்ற உத்தரவுகளால் அகற்றப்படுவது போல் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போதும் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் இடிக்கப்பட்டது நிகழ்ந்து இருக்கிறது.

2008-ம் ஆண்டு குஜராத் தலைநகர் காந்தி நகரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில்கள் உட்பட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஆக்கிரமிப்பு குறித்து காந்திநகர் மாவட்ட நிர்வாகம் எடுத்த கணக்கெடுப்பில் 107 கோவில்கள் பிரதான சாலையில் இருப்பதாகவும், 312 கோவில்கள் பிற பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில், ஒரு மாதத்தில் மட்டும் 80 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் சில பெரிய கோவில்களும் அடங்கும்.

ஆனால், மோடி அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாட்டை எதிர்த்து விஷ்வ ஹிந்து பரிஷத் அறிக்கை வெளியிட்டும், போராட்டத்திலும் இறங்கியதால் ஆக்கிரமிப்பு கோவில்களை இடிக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக மோடி அரசு அறிவித்தது என இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு, அரசு புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு, சாலையோர ஆக்கிரமிப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல காரணங்களால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருக்கும் தனியார் மற்றும் பொதுமக்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் இடிக்கப்படும் போது கண்டனம் மற்றும் பரபரப்பு உருவாகிறது. இது கடந்த அதிமுக ஆட்சியிலும் நிகழ்ந்து இருக்கிறது.

அரசு அதிகாரிகள் நேரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் கூட பல கோவில்கள் இடிக்கப்படுவதற்கு பின்னால் நீதிமன்ற வழக்குகள் மற்றும் உத்தரவுகள் இருக்கவே செய்கின்றன. அதேநேரத்தில், ஆக்கிரமிப்பில் இருக்கும் பிற மத வழிபாட்டு தளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சில மத வழிபாட்டு தளங்களின் ஆக்கிரமிப்பு பற்றி எழும் குற்றச்சாட்டுகள் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2021 டிசம்பர் 12-ம் தேதி, திமுக ஆட்சியின் 200 நாட்களில் 130 கோவில்களை இடித்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 2021 டிசம்பர் 20-ம் தேதி, ” திமுக ஆட்சியில் 150 இந்து கோவில்களை இடித்து மக்களைப் புண்படுத்தியுள்ளனர் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்து இருந்தார். திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கோவில்கள் பல அகற்றப்பட்டு இருந்தாலும், பாஜக, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணித் தரப்பினர் இடிக்கப்பட்ட கோவில்களின் எண்ணிக்கையை 130, 150, 160 என அதிகரித்தே தெரிவித்து வருகின்றனர். அதற்கான பட்டியலை எங்கும் அவர்கள் வெளியிடவில்லை, அது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையாகவே இருக்கிறது.

இதேபோல், நாடு முழுவதிலும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில்கள் இடிக்கப்பட்டு அகற்றப்படுகிறது. இது தமிழ்நாட்டிலும் நடக்கிறது, முந்தைய ஆட்சியிலும் நிகழ்ந்து இருக்கிறது. மேலும், கோவில் மட்டுமல்ல வேறு பல தனியார் இடங்களும், சர்ச்சுகளும் இடிக்கப்பட்டு இருக்கின்றது என்பதை செய்தியின் வழியே நம்மால் அறிய முடிகிறது. ஆகையால், வீண் வதந்தியை நம்ப வேண்டாம்.

Please complete the required fields.
Back to top button
loader