சட்டத்தை மீறி சாலை நடுவே திமுக, பாஜக கொடிகள்.. பிரதமரை வரவேற்க வைத்தார்களா ?

நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தாலும், ஏன் முதல்வரே கூறினாலும் கூட அவர்களது கட்சி கூட்டத்திற்கு சாலையை மறைத்தும், சாலை நடுவேயும் கட்சிக் கொடிகள், பேனர்களை வைப்பது தமிழகத்தில் தொடரவே செய்கிறது. தற்போது ஆளும் திமுக கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்நிலையில், சாலை ஒன்றின் நடுவே திமுக மற்றும் பாஜக கொடிகள் இணைந்து வரிசையாக நடப்பட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இடம்பெறும் பேனரும் இடம்பெற்றுள்ளது.

எப்போதும் பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கும் திமுக இம்முறை ஆட்சியில் இருப்பதால் மோடியின் வருகையை வரவேற்பதாக பேசி வருவதால் சமூக வலைதளங்களில் விவாதங்கள் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்க பாஜக, திமுக இணைந்தே கட்சிக் கொடிகளை நட்டு உள்ளதாகவும் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

எங்கு நிகழ்ந்தது ? 

Twitter link  

Twitter link 

சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டமும் நடைபெற்றது. ஆனால், இரு கட்சிகளும் தனித்தனியாக மரியாதை செலுத்தி உள்ளனர்.

Facebook link 

இவர்களுக்காக சிவகங்கை பேருந்து நிலையம் பகுதியில் ஆர்எம்ஆர் திருமண மண்டபம் அருகே உள்ள சாலையின் நடுவே திமுக மற்றும் பாஜகவினர் சட்டத்தை மீறி கொடிகளை நட்ட புகைப்படமே வைரலாகி வருகிறது. இரு கட்சிகளின் கொடிகள் வைக்கப்பட்டது பற்றி பாஜகவினர் சிலர் வீடியோ பதிவிட்டு இருக்கிறார்கள்.

Facebook link 

வைரலாகும் புகைப்படம் குறித்து, பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தென்மண்டல பொறுப்பாளர் திலிப் கண்ணன், ” இந்த நிகழ்ச்சி இன்று சிவகங்கையில் நடந்தது. வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலைஜியை வரவேற்க்க வைத்த கொடி. திமுகவின் அமைச்சர் பெரிய கருப்பன் வேலுநாச்சியார் நினைவு மண்டபத்திற்க்கு வருவதால் அவங்க கட்சிக்காரர்களும் கொடி வைத்தார்கள்.

பிஜேபி கொடியை ஊண்டவிடாமல் திமுகவினர் காவல்துறையை வைத்து மிரட்டி பார்த்தனர்.
அதையும் மீறி கொடியை வைத்தோம். இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சியை பாஜகவினர் நடந்திவிடக்கூடாது அவர்களை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நிறைய இடைஞ்சல் செய்தார்கள். அவர்களின் எதிர்ப்பை தைரியாமாக எதிர்கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் சிவகங்கை பாஜக மாவட்ட தலைவர் அண்ணன் மேப்பல் ம.சக்தி எ சத்தியநாதன். தயவுகூர்ந்து அவரின் உழைப்பை யாரும் கொச்சை படுத்தவேண்டாம். நண்பர்கள் யாரும் வதத்தியை பரப்ப வேண்டாம். ” எனப் பதிவிட்டு இருந்தார்.
.
ஆக, சட்டத்தை மீறி சாலையின் நடுவே திமுக மற்றும் பாஜக கொடிகள் வைக்கப்பட்டது பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அல்ல, சிவகங்கையில் வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு இரு கட்சியினரால் போட்டி போட்டு சாலையின் நடுவே வைத்தது. இரு கட்சிகளும் இணைந்து வைக்கவில்லை. திமுக மற்றும் பாஜக கொடிகள் அருகருகே வைக்கப்பட்டதால் குழப்பம் உண்டாகி உள்ளது. எதுவாயினும், சட்டத்தை மீறி சாலையின் நடுவே திமுக மற்றும் பாஜகவினர் கொடிகளையும், பேனரையும் வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
Please complete the required fields.




Back to top button