40,000 கட்டணம் கூட கட்டமுடிலனா எப்படி டாக்டர் படிக்க முடியும்| சர்ச்சையாகும் துரைமுருகன் பேச்சு

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இடஒதுக்கீடு மூலம் மருத்துவ இடங்களை பெறும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது சிக்கலாக இருந்தது.
இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு மூலம் இடம்பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தேர்தல் சமயம் என்பதால், இரு அரசியல் கட்சிகளும் மாற்றி மாற்றி மாணவர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
கல்விக் கட்டணம் கூட கட்ட வக்கில்லாதவர்கள் ஏன் படிக்கணும்?
– திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் pic.twitter.com/DXB0QQotYo
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘 (@mayavarathaan) November 23, 2020
இதற்கிடையில், அரசு மருத்துவக் கல்லூரியில் கூட கட்டணம் கட்டமுடியவில்லை என்றால் எப்படி டாக்டர் படிக்க முடியும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாக வீடியோ ஒன்று ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருவேளை அரசு மருத்துவக் கல்லூரியில் தேர்வு ஆகியும் 40,000 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் போன மாணவர்கள் திமுகவை அணுகலாமா சார் என நிரூபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அதக்கூட மெடிக்கல் காலேஜ்ல கட்டமுடிலனா அப்புறம் டாக்டர் எப்படி படிக்க முடியும் என துரைமுருகன் அளித்த பதில் வைரலாகி வருகிறது. கீழ்காணும் வீடியோவில், 16வது நிமிடத்தில் இருந்து இடம்பெற்ற காட்சியே வைரல் செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.