மிரட்டிய திமுகவினர் பற்றி திருமாவளவன் சொன்னது என்ன ?

தர்மபுரியில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது திமுகவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். திமுகவை விமர்சித்ததால் மேடைக்கு வந்த திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதோடு மேடையை கலைக்க முயன்றதாக வீடியோ சமூக வலைதளங்கள், செய்திகளில் வைரலாகியது.
இதன் மூலம் திமுக ஆட்சியில் பேச்சுரிமை, கருத்துரிமை இல்லை என நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், நாம் தமிழர் கட்சியின் அவதூறு கருத்துக்களின் காரணமாக திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்.பி திருமாவளவன், ” கருத்துக்கு கருத்து தான் எடுத்து வைக்க வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது. நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனத் தெரிவித்ததாக செய்திகளில் வெளியாகின.
ஆனால், திருமாவளவன் அப்படியொரு கருத்தை சொல்லவில்லை, அவர் பேசியதை திரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாக திமுக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் இசை ட்விட்டர் பக்கத்தில், ” விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் சொல்லாத ஒரு கருத்தை புனைந்து பொய்செய்தியாக வெளியிடும் விலைபோன ஊடகங்களின் விசமச்செயலை புறக்கணிப்போம் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
எம்.பி திருமாவளவன் அளித்த செய்தியாளர்கள் சந்திப்பின் முழுமையான வீடியோவில், ” அந்த சம்பவம் தவறானது. அதை திமுக தலைமை ஒருபோதும் அங்கீகரித்த நிலையை பார்க்கவில்லை. தன்னியல்பாக மேடைகளில் அவதூறு பேசுவதும், எதிர்த்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுகவினர் சமூக வலைதளங்களில் பதில் சொல்கிறார்கள். என்றாலும் கூட, கருத்திற்கு கருத்து தான் எடுத்து வைக்க வேண்டும் தவிர வன்முறை கூடாது. இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என நம்புகிறேன்.
அரசு நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா எனச் செய்தியாளர் கேட்ட பிறகு, எடுக்க வேண்டும். இதுமாதிரி அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை முன்மொழியிற நேரத்தில், கருத்துக்களை கருத்தாக தான் அணுக வேண்டுமே தவிர இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
ஜெயா செய்தியில் வெளியான திருமாவளவன் பேசிய சிறு காட்சியை வைத்து, நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறவே இல்லை என திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், முழுமையான வீடியோவில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே திருமாவளவன் தெரிவித்து இருக்கிறார்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.