திமுக வாக்குறுதி நாடகக் காதலுக்கு அல்ல, கலப்பு திருமணத்திற்கு !

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் முன்னேறிய வகுப்பு பெண்களை நாடகக் காதல் மூலம் ஆதிதிராவிடர் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் ரூ.60,000 பணம் மற்றும் 1 பவுன் தங்க காசு பரிசு என 259வது வாக்குறுதியாகக் கூறப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

” முதலியார், பிராமணர், நாயுடு, வன்னியர், யாதவர், நாடார், அகமுடையார், ரெட்டியார், பிள்ளை, கள்ளர், மறவர், செட்டியார், கொங்கு வெள்ளாளர், முத்தரையர் உள்ளிட்ட எந்தவொரு சாதியை சேர்ந்த பெண்ணை, ஆதிதிராவிடர் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டால் – ரூ.60,000 பணம் மற்றும் 1 பவுன் தங்க காசு பரிசு என திமுக தேர்தல் அறிக்கையின் 259 ஆவது வாக்குறுதியாக கூறப்பட்டுள்ளது. கலப்பு திருமணத்தை ஆதரிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நாடகக் காதலை வி.சி.கவுடன் அரங்கேற்ற துடிக்கும் வாக்குறுதி நெஞ்சழுத்தத்துடன் திமிராக தேர்தல் வாக்குறுதியாகவே வகுத்துள்ளார்கள் ” எனப் பரப்பி வருகிறார்கள்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 259வது வாக்குறுதியில், ” அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும். கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம்  தங்கக் காசும் வழங்கப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
.
மதம் விட்டு மதம், சாதி விட்டு சாதி கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பது ஒன்றும் புதிதல்ல. கேரளாவில் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் கணவன் அல்லது மனைவி என யாரவது ஒருவர் எஸ்.சி அல்லது எஸ்.டி பிரிவாக இருக்கையில் ரூ75,000 நிதியுதவி பெறலாம்.
.
பொதுப் பிரிவில் உள்ள மணமக்கள் வருடம் 1 லட்சத்திற்கு குறைவான வருமானத்தைக் கொண்டு இருந்தால் 30,000 நிதியுதவி அளிக்கப்படும். மேலும், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு தற்காலிகமாக தங்க இருப்பிட வசதியையும் ஏற்படுத்தி தருவதாக கேரளா சமூகநீதி துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
கலப்பு திருமணத்திற்காக அறிவிக்கப்பட்ட நிதியுதவியை நாடகக் காதல் என்றும், கலப்பு திருமணம் என்ற பெயரில் நாடகக் காதலை ஊக்குவிப்பதாக சாதிய பெயரைக் குறிப்பிட்டு தவறாக பரப்பி வருவதை பார்க்க முடிகிறது. மேலும், இந்த திட்டத்தில் மணமக்களின் யாராவது ஒருவர்(கணவன் அல்லது மனைவி) ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினராக இருக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல் :
சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளில் ஒருவர் பட்டியலினத்தவராக இருக்கையில் மத்திய அரசு சார்பில் டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதித்திட்டம் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
அம்பேத்கர் திட்டத்தின் கீழ், மாநில வாரியாக ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் நிதியுதவி மற்றும் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்த ஆண்டு அறிக்கையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தலா 2,000 பேர் பயன்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2018-ல் மத்திய அரசின் அம்பேத்கர் திட்டத்தின் விவரங்கள் மற்றும் இலக்கு குறித்த விரிவான தகவல் கட்டுரையை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.
Links :
Please complete the required fields.




Back to top button