நீட் தடை கேட்டால் படிப்பறில்லாதவர்களா.. திமுக அமைச்சரவையில் எத்தனை பேர் படித்தவர்கள் ?

செப்டம்பர் 22ம் தேதி காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா “தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக தலைவர்கள் படிக்காதவர்கள். அதனால் தான் அவர்கள் நீட், தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றை எதிர்க்கின்றனர்” என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நட்டா பேசுகையில், ” அவர்கள்(திமுக) தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. நான் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, அவர்கள் நீட் தேர்வை எதிர்த்தனர். உண்மையில், படிக்காத தலைவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது, கல்வியை பற்றி முடிவெடுக்கும் போது இது மாதிரிதான் நடக்கும்” என்று பேசியுள்ளார்.
ஜே.பி நட்டா பேசியது அரசியல்ரீதியாக எதிர்ப்பையும், கண்டனத்தையும் பெற்றது. எனினும், தரவு ரீதியாக தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வி தகுதியை பற்றித் தேடினோம். அந்த தகவல்கள் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு(ADR) மற்றும் இந்திய தேர்தல் ஆணைய வலைத்தளத்தில் உள்ளது.
அதை ஆராய்ந்ததில், திமுகச் சட்டமன்ற உறுப்பினர்களில் 37.40 சதவீதம் பேர் பள்ளி படிப்பும், 12.80 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 23.20 சதவீதம் பேர் தொழிற் பட்டப்படிப்பும், 22.40 சதவீதம் பேர் முதுகலை பட்டதாரிகளாவும், 3.20 சதவீதம் பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர் என்ற தகவல் கிடைத்தது.
இதில் குறிப்பாக ஜே.பி நட்டா அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் என திமுகவின் அமைச்சர்களை நோக்கி இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஆனால் உண்மை அதற்கு முரணாக உள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் 3 முதுகலை பட்டமும், ஒரு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எம்சிஏ பட்டம் பெற்றவர்.
தமிழக அமைச்சர்களில் 2 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 10 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்,12 பேர் பட்டப்படிப்பை முடித்தவர்கள், 10 பேர் பள்ளிப்படிப்பு படித்தவர்கள். இதில் படிப்பறிவில்லாதவர்கள் என்று யாரும் இல்லை.
நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவு தடைபடும் நிலை ஏற்படுவதாலும், தேசியக் கல்விக் கொள்கை உள்ளிட்டவையால் மும்மொழிக் கொள்கை என இந்தியை திணிக்கும் முயற்சி என பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் இருந்து கல்வியாளர்களும் , மக்களும் இவற்றை எதிர்க்கின்றனர். ஆனால், படிப்பறிவில்லாதவர்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பதால்தான் கல்வி விசயத்தில் இப்படி நடக்கிறது என தவறான வாதத்தை பாஜக தேசியத் தலைவர் நட்டா தெரிவித்து இருக்கிறார்.
இங்கு படிப்பறிவில்லாதவர்கள் என்று யாரும் இல்லை.. படிப்பு முக்கியம் என்பதால்தான் இவை எதிர்க்கப்படுகின்றன..!
Links :
BJP National President Shri JP Nadda addresses public meeting in Karaikudi, Tamil Nadu