பெண் தலையில் மனுவால் அடித்த அமைச்சர்.. சொல்லிக் கொடுத்து பேச வைத்ததா ஊடகங்கள் ?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்த அமைச்சரிடம் பாலவநத்தத்தைச் சேர்ந்த கலாவதி என்பவர் தனது தாய் மற்றும் தந்தைக்கு முதியோர் உதவித் தொகை கேட்டு மனு அளித்து இருக்கிறார். மனு அளித்த பிறகு கலாவதி கையை நீட்டி உரத்த குரலில் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அமைச்சர் கையில் இருந்த மனுக்களால் அவரின் தலையில் அடிக்கிறார். அதன்பின்னர், அமைச்சர் ” முடியுதோ, இல்லையோ செஞ்சு கொடுத்துருங்க ” என அருகில் இருக்கும் மாவட்ட ஆட்சியரிடம் கூறுகிறார்.

இந்த 10 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கியது. தமிழக பாஜகத தலைவர் அண்ணாமலை, கண்டனம் தெரிவித்ததோடு அமைச்சர் ராமசந்திரன் பதவி விலக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்து இருந்தார்.

வீடியோ வைரலாகி கண்டனங்கள் எழுந்த போதே தந்தி டிவி கலாவதியிடம் பிரத்யேக பேட்டி ஒன்றை எடுத்து வெளியிட்டது. அப்போது அவர் பேசுகையில், ” என் அம்மாவிற்கு முதியோர் உதவித் தொகைக்காக மனு அளித்தேன் அமைச்சர்கிட்ட. அப்போது பேப்பரை வைத்து அடிச்சுட்டு, எனக்கு செய்யாம யாருக்கு செய்வேனு சொன்னாரு ” எனப் பேசி இருப்பார்.

ஆனால், அப்பெண்ணை மற்றொரு பேட்டி எடுக்க சன் நியூஸ், புதியதலைமுறை, கலைஞர் செய்திகள், பாலிமர், கேப்டன், நியூஸ் 18 , ஜெயா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள் சென்ற போது, ” அமைச்சர் அடிக்கவில்லை ” என அப்பெண்ணைக் கூறச் சொல்வதாக வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், ” மறுபடியும் அதை சொல்லுங்கமா எனச் செய்தியாளர் கேட்கிறார். அதற்கு, எத்தனை தடவை சொல்ல சொல்றீக என்று அப்பெண் கூறுகிறார். அதற்கு, ” என்ன பண்ணுறது நீங்க ஒழுங்கா சொல்ல மாட்டிறீங்களே, உங்க பெயரைச் சொல்லிட்டு, இதற்காக மனு கொடுக்க போனேன். மனு வாங்கிட்டு செஞ்சு தாரேன்னு சொன்னாரு, இப்போ ஆர்டர் வந்துருச்சு. அடிக்கல, வைக்கல, செல்லமா தட்டுமாறு, எங்க சொந்தக்காரரு தான் சொல்லுங்க ” என செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

கலாவதி அவர்களை ஊடகங்கள் பேட்டி எடுத்த போது விகடன் தரப்பில் நேரலை செய்யப்பட்டு உள்ளது. 1.25வது நிமிடத்தில், என்ன, எப்படி பேசணும் என்று அருகில் இருக்கும் ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். அதன்பின்னர் பேசிய கலாவதி, ” அடிக்கவே இல்லை. மனுவை வாங்கி விட்டு செய்கிறேன் எனச் சொன்னார் ” எனக் கூறி விட்டார். அடித்த வீடியோ இருப்பதாக கேள்விக் கேட்கப்பட்ட பிறகு, செல்லமாக என ஒருவர் கூறுவதை அவர் திருப்பிக் கூறுகிறார்.

அதன் பிறகு மீண்டும் சில சேனல்கள் திருப்பி பேசச் சொல்லி வீடியோ எடுக்கும் காட்சியே வைரலாகி இருக்கிறது. வீடியோவின் பிற்பகுதியில், அவருக்கு லைட்டால் கண் கூசியது, இதனால் அவர் சோபாவில் அமர்ந்து விடுகிறார். அப்போதும் எப்படி பேச வேண்டும் என ஒருவர் சொல்லி கொடுப்பார்.

இதுகுறித்து களத்தில் இருந்த செய்தியாளரிடம் பேசுகையில், ” முதல் வீடியோவில், இங்கெல்லாம் கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர்.ஆர் தான் சொல்லுறாங்க என அப்பெண் தெலுங்கில் அமைச்சரிடம் உரக்கப் பேசுகிறார். அவர் திரும்ப திரும்ப பேசிய போது மனுவால் தலையில் தட்டியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவர் கிராமத்து பெண் என்பதால் எப்படி பேச வேண்டும் எனத் தெரியவில்லை. ஆகையால், அப்பெண் விட்டு விட்டு பேசியதை எப்படி தொடர்ச்சியாக சொல்ல வேண்டும் என அங்கிருந்தவர்கள் சொல்லிக் கொடுத்தனர். பேட்டியின் நீளம் அதிகம் போய்விடக் கூடாது என்பதற்காக சீக்கிரம் பேச வைக்க அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது ” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும், களத்தில் இருந்த ஜெயா டிவி மாவட்டச் செய்தியாளர் அர்ஜுனன் அவர்களிடம் பேசிய போது, ” அப்பெண் அமைச்சரின் சொந்தக்காரர் தான் ” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் , ” வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த கலாவதி எனக்கு உறவினர் பெண். பொதுவாக அனைவரிடமும் அமைச்சர் என்று இல்லாமல் அவர்களுக்குள் ஒருவராக பழகுவது எனது இயல்பு. அந்த உரிமையில் அவர் கொடுத்த மனு கவரை வைத்தே கலாவதியை உரிமையோடு தலையில் தட்டி அமைதிப்படுத்தினேன். ஒரே தொகுதியில் ஒன்பது முறைக்கும் மேல் மக்கள் சேவகனாகப் பணியாற்றும் என்னைப் பற்றி என் தொகுதி மக்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்கு தெரியும்” எனத் தெரிவித்து உள்ளார்.

எது எப்படியோ, சொந்தமாகவே இருந்தாலும் கூட பொதுவெளியில் மனு கொடுக்க வந்திருக்கிறார். அந்த மனுவில் தனக்கான கோரிக்கை இருக்கிறது. தன் கோரிக்கையை சொல்ல வந்த மக்களில் ஒருவரான வயதான பெண்ணுக்கு அமைச்சர் சொல்ல வேண்டியது சரியான பதில் தான். அதைத் தாண்டி, மனுவால் கோபத்தில் அடித்தேன், சொந்தம் என அடித்தேன் எனக் காரணம் இருந்தாலும் கூட அது சரியானது அல்ல.

Please complete the required fields.




Back to top button
loader