கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட திமுக எம்எல்ஏ.. வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை வேண்டும் : அறப்போர் இயக்கம் !

” திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கழகக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் ” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்ததாக ஜனவரி 27-ம் தேதி வெளியான செய்தி பக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் மாநகராட்சி சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நடராஜன் கார்டன் தெருக்களில் 30 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு எம்எல்ஏ கே.பி.சங்கர் தன் ஆதரவாளர்களுடம் சென்று நடராஜன் தெருக்களில் சாலை போடும் பணியை நிறுத்துமாறு கூறியதாகவும், அப்போது மாநகராட்சி உதவிப் பொறியாளர் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க முயற்சித்த போது அவரை எம்எல்ஏ தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மாநகராட்சி உதவிப் பொறியாளர் தரப்பில் மூத்த அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கையாக சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ கே.பி.சங்கரை திமுக கட்சி நீக்கி உள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.சங்கர் மறைந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் ஆவார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒப்பந்ததாரரின் பிரதிநிதி, ” எம்எல்ஏ நான்கு பேருடன் வந்து வேலையை நிறுத்தச் சொன்னார். இப்பிரச்சனையைத் தீர்க்க சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் தலையிட்டபோது, அவரை எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்தனர். பொறியாளரின் உதவியாளரும் தாக்கப்பட்டார். அந்த இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த 13 லாரி ரோடு கலவை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டது ” என டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், சம்பவம் குறித்து திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கூறுகையில், ” சம்பவம் நடந்த இடத்திற்கு நான் செல்லவில்லை. யாரையும் தாக்கவில்லை. பழைய சாலையை எடுக்காமலேயே புதிய சாலையை போட்டால் தனது ஆதரவாளர்கள் கேட்டனர். இதனால் உதவி பொறியாளரை தனது ஆதரவாளர்கள் தாக்கினர். கமிஷன் கேட்டதாகக் கூறுவதிலும் உண்மை இல்லை ” என விளக்கம் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் கூறுகையில், ” திருவொற்றியூர் பகுதியில் ரோடுலிங்க் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எனும் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் தரப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் போது ஒப்பந்ததாரர் மற்றும் உதவிப் பொறியாளர் அங்கு இருக்கும் போது, எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் சென்று நான் நிறுத்த சொல்லியும் ரோடு போடுகிறாயா என அடித்ததாக செய்திகளில் வெளியாகியது.
இதற்கு எம்எல்ஏ தரப்பில், பழைய சாலையை எடுக்காமல் சாலையை போட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எம்எல்ஏ கே.பி.சங்கர் 5% கமிஷன் கேட்டதாகவும், அதில் நடந்தப் பிரச்சனையில் தாக்கியதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா தரப்பிற்கு கிடைத்த தகவலை வெளியிட்டனர். இதன் உண்மைத்தன்மையும் விசாரணையில் தான் தெரியும்.
ஆனால், எம்எல்ஏ கே.பி.சங்கர் அடித்ததாக அந்த உதவிப் பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், தாக்கியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா. பழைய சாலையை எடுக்காமல் புதிய சாலையை அமைத்த காரணத்தினால் தாக்கியதாக இருந்தாலும் கூட அதுவும் தவறு தான். எதற்காக தாக்கினார் என்பதை மாநகராட்சி வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் புகார் அளிக்காமல் இருந்து வருவதால், அவர்களுக்கு என்னமாதிரியான அழுத்தம் இருக்கிறது என்பதும் கேள்வியே.
கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு என்பது கட்சி ரீதியான நடவடிக்கை. ஆனால், ஆட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது தான் முக்கியம். தன்னுடைய எம்எல்ஏ பதவியைக் காட்டிதான் மிரட்டி அடிக்கிறார்கள். அப்படி இருக்கையில், அந்த எம்எல்ஏ மீது எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை. அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது ” எனத் தெரிவித்து இருந்தார்.