This article is from Jun 17, 2019

சென்னையில் திமுக எம்எல்ஏ மகனின் ஆக்கிரமிப்பு கடை அகற்றம் !

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் எதிரொலியாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி அவர்களின் மகன் ஆக்கிரமித்த நடைபாதை பத்திரமாக மீட்கப்பட்டது என்ற மீம் பதிவை அறப்போர் இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் பார்க்க முடிந்தது.

நடைபாதை ஒன்றில் அமைக்கப்பட்ட விர்ஜின் கேஃப் என்ற கடை அகற்றப்பட்டு இருப்பதாகவும், அக்கடை பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகனுடையது எனக் கூறும் செய்தி உண்மையா என அறிந்து கொள்ள அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த நக்கீரன் என்பவரை தொடர்பு கொண்டோம். அவர் இந்த விவகாரத்தை டேவிட் மனோகர் என்பவர் கையாண்டதாகவும், அவரைத் தொடர்பு கொள்ளுமாறும் தொடர்பு எண்ணை அளித்தார்.

அறப்போர் இயக்கத்தின் டேவிட் மனோகர் என்பவரை Youturn தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். அதில்,

” குரோம்பேட்டையில் சரவணா ஸ்டோர் அமைந்து இருக்கும் பகுதியில் ஜி.எஸ்.டி சாலையின் அருகே நடைபாதையில் ஒரு கடை இருந்தது. இது நடந்து 20-25 நாட்களுக்குள் தான் இருக்கும். சாதாரணமாக இல்லாமல் நன்றாக வடிவமைக்கப்பட்ட அலங்காரத்துடன் கேக் மற்றும் ஜூஸ் விற்பனை செய்யும் கடையை அமைத்து இருந்தனர். முதலில் கடை யாருடையது என்று தெரியாத நிலையில், கடையை பற்றி பதிவிட்டு இருந்தோம். அப்பதிவில், பல்லாவரம் தொகுதியின் எம்எல்ஏ மகன் நம்முடைய கடை என தன் முகநூலில் பதிவிட்ட பதிவை ஒருவர் ஷேர் செய்து இருந்தார். அதன் பிறகு, முன்பு பதிவிட்ட பதிவை நீக்கி விட்டு எம்எல்ஏ மகன் நடைபாதையில் கடையை அமைத்து இருப்பதாக பதிவிட்டோம். அதைத் தொடர்ந்து, அறப்போர் புகார் அளித்தும் இருந்தோம். புகாரைத் தொடர்ந்து நான்கு நாட்களில் கடையை அகற்றி விட்டனர். எம்எல்ஏ மகனின் முகநூலில் கடையை பற்றி பதிவிட்ட புகைப்படங்களை அறப்போர் இயக்கம் பதிவிட்ட பிறகு அப்பதிவை அவர் நீக்கியும் விட்டார் ” என தெரிவித்து இருந்தார்.

பல்லாவரம் தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உடைய மகன் தமிழரசன், நடைபாதையில் அமைக்கப்பட்ட விர்ஜின் கேஃப் கடையை நம்முடைய கடை என முகநூலில் பதிவிட்டு பின் இந்த விவகாரத்தால் நீக்கி உள்ளார்.

வாழ்வாதாரத்திற்கு நடைபாதையில் கடையை விரிக்கும் மக்களிடம் அரசாங்கம் சட்டங்களை கடைபிடிக்க சொல்லும். ஆனால், இங்கோ அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர்.

எம்எல்ஏ எனும் பதவி மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பதவியாகும். அப்படியான, எம்எல்ஏ பதவியில் இருப்பவரின் மகனே நடைபாதையை ஆக்கிரமித்து கடையை அமைத்து உள்ளார். பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினர் என்று தெரிந்தும் அதற்கு எதிராக புகார் அளித்து ஆக்கிரமிப்பை அகற்றவதற்கு முயன்ற அறப்போர் இயக்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவிப்போம் !

Please complete the required fields.




Back to top button
loader