This article is from Feb 17, 2020

சிஏஏ தொடர்பாக தவறான புகைப்படத்தை ட்வீட் செய்த திமுக எம்பி| மன்னிப்பு கோரினார்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-விற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென எழுந்த போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திமுகவின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் , ” இதற்கு காரணம் ஆன அதிமுக அரசு மற்றும் ராமதாஸ் கண்டிப்பாக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். பாஜக அமல்படுத்திய சிஏஏ-விற்கு நீங்கள் அளித்த ஆதரவு வாக்கின் விளைவு தான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைமைக்கு காரணம் ” என போராட்டத்தில் இருக்கும் குழந்தை மற்றும் இரத்தத்துடன் சாலையில் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

ஆனால், திமுக எம்பி செந்தில்குமார் பதிவிட்ட புகைப்படம் சிஏஏ போராட்டத்தில் தாக்கப்பட்டு இறந்தவர் அல்ல, திருவாரூர் அருகே சாலை விபத்தில் சிக்கி இரத்தத்துடன் இருக்கும் இளைஞரின் புகைப்படத்தை தவறாக பகிர்ந்து உள்ளார். தவறான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பவே திமுக எம்பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Twitter link | archived link 

” நான் பதிவிட்ட நபரின் புகைப்படம் சிஏஏ-விற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர் அல்ல, அவர் சாலை விபத்தில் சிக்கியவர் என்பதை எனது நண்பர்களும், நலம் விரும்பிகளும் சுட்டிக்காட்டியதில் தெரிந்து கொண்டேன். நான் இதை பதிவு செய்ததற்கு உளமாற மன்னிப்பு கோருகிறேன் மற்றும் வருங்காலத்தில் இதுபோன்ற உறுதிப்படுத்தாத தகவல்களை பதிவு செய்வதற்கு முன்பாக இருமடங்கு எச்சரிக்கையாக இருப்பேன் ” என ஆங்கிலத்தில் பதிவிட்டார்.

தவறான தகவலை பகிர்ந்ததற்கு திமுக எம்பி செந்திகுமார் மன்னிப்பு கோரினாலும் அவர் மீது விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் எழுகின்றன. தவறான செய்தியை பதிவிடும் போது தமிழும், அதை தவறு எனக் கூறும் பொழுது ஆங்கிலத்திலும் பதிவிடுவதாக மீம்ஸ் பதிவுகள் வெளியாகின்றன.

பரபரப்பான சூழ்நிலை நிலவும் தருணத்தில் தவறான தகவல்கள் பரவுவது அதிகம். அப்படி இருக்கும்பட்சத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் உறுதி செய்யாத தகவல்களை, தவறான தகவலைபகிர்வது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து பொறுப்புடன் இருப்பது அவசியம்.

Please complete the required fields.




Back to top button
loader