கேள்வி கேட்ட அறப்போர்.. பேனர்களை அகற்றிய திமுக !

சென்னையில் அதிமுக பிரமுகர் சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த பிறகு திமுக கட்சியின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொண்டர்கள் பேனர்களை வைக்கக்கூடாது என்ற அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

Advertisement

ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடாது என கூறி இருந்தாலும் தமிழகத்தில் திமுக கட்சியின் சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியது. கட்சித் தலைவரின் வார்த்தையை மீறியும் தொண்டர்கள் செயல்படுகிறார்களா எனும் விவாதங்களும் எழுந்தன.

இந்நிலையில், திருவண்ணாமலையில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற இருந்த திமுக கட்சி சார்பிலான நிகழ்ச்சிக்காக சாலையில் வைக்கப்பட்ட பேனர்கள், நுழைவுவாயில் போன்ற ஆர்ச்சுக்கள் உள்ளிட்டவையின் புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி இருந்தது.

செப்டம்பர் 14-ம் தேதி அறப்போர் இயக்கத்தின் ட்விட்டர் பக்கத்தில் , ” நாளை திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் திமுக கூட்டத்திற்கு நெடுஞ்சாலையில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் சாலையில் பிரயாணம் செய்பவர்கள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இந்த சாலை வளைவு அமைத்த அந்த கொலைகார கட்சி பிரமுகரை எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய போகிறார்? ” என திமுக பேனர்கள் புகைப்படங்கள் உடன் கேள்வி கேட்டு இருந்தனர்.

அறப்போர் இயக்கத்தின் கேள்விக்கு திமுகவின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து இருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், ” எங்கள் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் அந்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என்ற தகவலை அறப்போர் இயக்க தோழர்களின் பார்வைக்கு தெரியப்படுத்துகிறோம் ” என பேனர்கள் அகற்றப்பட்ட புகைப்படங்கள் உடன் பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று, உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில், ” ‘பேனர்கள் கூடாது’ என்று கேட்டுக்கொண்டிருந்தேன். ‘இது, இதற்கான நிகழ்ச்சி’ என்பதை உணர்த்த மேடையில் வைக்கப்பட்ட அந்த ஒன்றைத் தவிர கூடுதலாக ஒரு பேனர்கூட வைக்கவில்லை என்பது மகிழ்ச்சி. இந்தப் புரிதலே உங்களை இன்னும் நெருக்கமாக உணரவைக்கிறது. தொடரவும். நன்றி, வாழ்த்துகள் ” என்ற ட்விட்டையும் காண முடிந்தது.

மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேனர்களை வைக்கக்கூடாது எனக் கூறியிருந்தாலும் அத்தனையும் மீறி கட்சி ஆதரவாளர்கள் பேனர்களை வைக்கவேச் செய்கின்றனர். அதனை எதிர்த்து கேள்விகள் கேட்டாலொழிய பேனர்கள் அகற்றப்படுகின்றன.

இதற்கு முன்பாக 2017-ல் கோயம்புத்தூரில் ரகு என்ற இளைஞர் பேனரால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்த பொழுது இறந்தவரின் இல்லத்திற்கு ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிறகு ஊடங்களுக்கு அளித்த பேட்டியில், ” பேனர்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவை வரவேற்கிறேன். அனுமதி வாங்கி பேனர்கள் வைக்கலாம் என்ற சூழ்நிலை இருந்தாலும், நியாயமாக பேனர்கள், கட்அவுட் வைப்பதற்கு முற்றாக தடை வேண்டும் ” என கூறி இருந்தார்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக சார்பில் பேனர்கள், கட்அவுட்களே வைக்கப்படவில்லையா. தற்பொழுதும் அதேபோன்று பேனர்கள் வைக்கக்கூடாது என கூறியும் பேனர்களை வைக்கின்றனர். கேள்விகள் எழுந்த பிறகு அகற்றப்படுகின்றன. கேள்வி கேட்டால் மட்டுமே தவறுகள் நிகழாமல் இருக்குமா ?. இனி வரும் காலங்களில் ஸ்டாலின் கூறியது போன்று பேனர்கள் வைக்கப்படுவது நிறுத்தப்படுமா அல்லது வழக்கம் போல கடைபிடிக்காமல் செல்வார்களா என்பது கேள்விக்குறியே .

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button