கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த திமுக பிரமுகர்!

ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு திமுக பிரமுகர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாநிலமே அதிர்ச்சியில் இருந்து மீண்ட நேரத்தில் மீண்டும் பாலியல் கொடுமைகள் அரேங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் கோப அலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திகைக்க வைத்துள்ளது.
விழா ஒன்றிற்காக சென்னை வந்த தம்பதியினர் இருவர் கோவை செல்வதற்கு 10-ம் தேதி நீலகிரி விரவு இரயிலில் பயணித்து உள்ளனர். அவர்கள் பயணித்த அதே இரயில் பெட்டியில் கோவையில் உள்ள இருகூரை சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான 65 வயது சந்திரன் என்பவரும் பயணம் செய்துள்ளார்.
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு சந்திரன் மற்றும் அவருடன் மற்றொருவரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் மீது புகார் தெரிவிக்க இரயில் சேலம் வந்த போது சேலம் ரயில்வே காவல்துறையிடம் சந்திரன் மீது புகார் அளித்துள்ளார்.
அப்பொழுது பணியில் இருந்த தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்ததாகவும், இதையடுத்து இரயில் கோவை வந்த பொழுது அப்பெண்ணின் கணவன் கோவை ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார்.
பின்னர் கர்ப்பிணியின் கணவர் மீண்டும் சேலம் வரவழைக்கப்பட்டு சேலம் ரயில்வே காவல்துறை புகார் பெற்றனர். இதன் பிறகே இருகூரில் இருந்த சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், சம்பந்தப்பட்ட மற்றொரு நபர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணையில், சந்திரனை ஏப்ரல் 11-ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி இளவரசி உத்தரவிட்டார். பாலியல் தொல்லை சம்பவத்தில் புகாரை பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியதாக சேலம் ரயில்வே தலைமை காவலர்கிருஷ்ணமூர்த்தி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.