அண்ணா நினைவுநாளில் ஓட்டுத்தரகருடன் ஒப்பந்தமா ?

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் (I-PAC) நிறுவனத்துடன் இணைந்து இருப்பதை பற்றி மு.க. ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்திலும், அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் மாற்றி மாற்றி நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
Happy to share that many bright & like-minded young professionals of Tamil Nadu are joining us under the banner of @IndianPAC to work with us on our 2021 election and help shape our plans to restore TN to its former glory!
— M.K.Stalin (@mkstalin) February 2, 2020
ஸ்டாலின் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டரில், ” 2021 தேர்தலில் எங்களுடன் இணைந்து பணியாற்றவும் மற்றும் தமிழகத்தில் அதன் முந்தைய புகழை மீட்டெடுப்பதில் எங்களின் திட்டங்களை வடிவமைக்கவும் தமிழ்நாட்டின் பல கூர்மையான மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இளம் தொழில் வல்லுநர்கள் இந்தியன்-பேக் என்ற குடையின் கீழ் எங்களுடன் இணைகிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி ! “.
Thanks Thiru @mkstalin for the opportunity. The @IndianPAC Tamil Nadu team is excited to work with DMK to help secure an emphatic victory in 2021 elections and contribute in putting the state back on the path of progress and prosperity under your able leadership. https://t.co/PXmRLWMrQz
— I-PAC (@IndianPAC) February 2, 2020
பிரசாந்த் கிஷோர் என்பவர் அரசியல் விளையாட்டுகளை கச்சிதமாக விளையாடுபவர் என்று பெயர் பெற்றவர். ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி தனது செயல்பாடுகள் மூலமாகவோ, தன் கொள்கைகள் மூலமாகவோ தன்னை மக்களிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் மக்களின் கருத்தை பொருத்து இவர்கள் சரியானவர்கள் தேர்ந்தெடுக்கலாமா கூடாதா என்ற முடிவை எடுப்பதற்கு பெயர்தான் ஜனநாயகம்.
ஜனநாயகம் என்பது மக்களின் விருப்பத்தை மக்களின் மூலமாக தன்னை ஆள்பவர்கள் யார் என்று தீர்மானிக்கும் அற்புதமான திட்டம். அதை கேலிக்கூத்தாக்கும் விதமாக ஏற்கனவே பலரும் பணம் கொடுப்பது, பரிசுப் பொருள் கொடுப்பது, தவறான வாக்குறுதியை முன்னிறுத்துவது, தேவையில்லாத அதீத விசயங்களை கொண்டு சேர்ப்பது என்று ஏமாற்றி வருகிறார்கள். அதில் புதிதாக சேர்ந்துள்ளது தான் தகவல். எப்படியெல்லாம் இயங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை தீர்மானிக்கும் விளையாட்டில் தகவல்தான் எதையும் தீர்மானிக்கிறது.
மக்களின் மனம், மக்கள் எதை விரும்புகிறார்கள், எதைச் சொன்னால் மக்களின் மனம் மாறும் என்றெல்லாம் மக்களின் மனங்களை அளப்பதற்கு தகவலைப் பயன்படுத்தும் முறை தான் இந்த Data . இது பல நாடுகளின் தேர்தலிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஏன் நம் நாட்டு தேர்தலிலும்கூட தான். இதற்கு முன் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை போன்ற விசயங்களை செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.
ஒரு நபர் தானே நல்லவராக இருப்பதும், கொள்கையை புரிந்து வகுப்பதும், அதன் மூலமாக மக்களின் வாழ்வை மாற்ற நினைப்பதும் வேறுவகை. ஆனால் இதைத்தான் மக்கள் விரும்புவார்கள், அதனால் இப்படி பேசலாம், இப்படி உடை உடுத்தலாம், இந்த வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம், இதை சரி செய்யலாம் என திட்டம் வகுப்பதற்கும், விளம்பரம் செய்வதற்கும் இது ஒன்றும் பல்பொடி வியாபாரம் அல்ல.
இந்தப் பல் பொடியை பயன்படுத்தினால் பல் வெள்ளையாகும் என்று சொல்லி விற்பதைப் போல ஒரு அரசியல் கட்சியை வெறும் மார்க்கெட்டிங்களையும், அதை விளம்பரமாக்கும் வகைகளை மட்டுமே நம்பி செல்வது சரியானதா?. மேலும், இதற்காக ஒரு நிறுவனம் செயல்படுமெனில், அந்த நிறுவனம் எத்தனை கோடிகளை செலவு செய்யும், அதற்கான ஆட்களுக்கு இந்த கட்சிகள் என்ன செய்யப்போகிறார்கள், அதற்கான தொகை என்ன, அவர்கள் எப்படி ஆணைகளைப் பிரிக்கப் போகிறார்கள் என்ற கேள்விகளும் வருகிறது. அவர்கள் கூறுவதை பரப்புவதால் என்ன மாதிரியான நன்மை விளையும் என்ற கேள்விகளும் வந்துகொண்டே இருக்கிறது.
ஆக, அரசியல் என்பது சந்தைப் பொருளாக மாறி சேவை என்கிற துறையில் வெறும் விளம்பரமும் கூச்சலும் அதன் மூலமாக கிடைக்கும் வெற்றியும், அதில் பணத்தை விதைப்பதையும் மனங்களை மாற்ற லஞ்சம் கொடுப்பதைப் போல தான் பார்க்க வேண்டும். இது தேர்தலில் பிரதிபலிக்கும் செய்திகள். தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சொல்லப்படுகிற மற்றும் விளம்பரப்படுத்தப்படும் ஒவ்வொரு செய்தியும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதைப் புரிந்துதான் தொடர் கட்டுப்பாடுகளை உலக அளவில் சந்தித்து வருகிறது சமூக ஊடகங்கள். அந்த யுக்தியை பயன்படுத்தி அடிதட்டு மக்களின் கருத்தை கூட மாற்றி அமைக்கும் முயற்சியானது பெரு அரசியல் கட்சிகளின் கூடாரமாக தேர்தல் சிக்கியிருக்கிறது.
இதை பல கட்சிகள் செய்து வந்தாலும் கூட ஏற்கனவே வேறு சில நிறுவனத்தோடு திமுக கூட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆகையால், அவர்களும் இதற்கு புதிதானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இம்முறை அந்த வெற்றியை சூத்திரம் தான் வழி செய்யும். இதில், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளே மக்களிடம் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று நம்பியிருந்த, முன்னொருகாலத்தில் மக்களிடம் சென்று தன் கருத்துக்களை தெருவெங்கும் முழங்கிய ஒரு இயக்கத்தின் வழிவந்த திமுக என்பது தான் சோகம்.
இன்று அண்ணாவின் நினைவுநாள். அண்ணாவின் நினைவுநாளான இன்று அவர் முழங்கிய எல்லா கோட்பாடுகளையும் மறந்து இப்படி வியாபார நிறுவனமாக பரிணமித்திருக்கிறது என்பது திமுக செய்கிற திமுக என்கிற கழகத்துக்கு செய்கிற மிக மோசமான தாக்குதலே தவிர வேறு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.
ஏனென்றால், அண்ணா பல மேடைகளில் ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிக்காதீர்கள் என்று முழங்கிய கணீர் குரல் இன்றும் பலருக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஐந்துக்கும், பத்துக்கும் உன் வாக்கை விற்காதே என்று அவர் பேசிய பேச்சு மறக்கக் கூடியதல்ல. அந்நாளிலேயே இப்படி வியாபார நிறுவனத்தை அணுகி இருப்பது பெரும் சோகம்.
ஜனநாயகமற்ற ஜனநாயகத்தை ருசிக்கும் நிலைமையில் இருக்கிற இன்றைய இந்தியாவில் அனைவரும் இருக்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே தகவலை வைத்து விளையாடுகிற விளையாட்டுக்குள் இறங்கிவிட்டது ஜனநாயகத்தை தினமும் கத்தியால் குத்திக் கொண்டே !.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.