This article is from Mar 18, 2021

செந்தில் பாலாஜியின் மணல் விவகார பேச்சு.. விளக்கமும், மக்களின் கோரிக்கையும் !

கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி திமுக ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், ” மு.க. ஸ்டாலின் மே மாதம் 11 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்ற உடன் 11.05 மணிக்கு நீங்களே மாட்டுவண்டியை மணல் அள்ளுவதற்கு ஆற்றுக்கு ஓட்டுங்கள். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்கள். தடுத்தால் எனக்கு போன் பண்ணுங்கள் அந்த அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் ” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Archive link 

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மணல் கொள்ளையை வெளிப்படையாக கூறுவதாகவும், மணல் கொள்ளையை தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என மிரட்டலாக பேசுவதாக செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், ” தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம் ” என ட்வீட் செய்து இருந்தார்.

Archive link

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய செந்தில் பாலாஜி, ” எங்களைச் சுற்றி இருக்கின்ற நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. எங்கள் கரூர் மாவட்டத்தில் இருக்கிற 15,000 குடும்பங்கள் மாட்டுவண்டியை நம்பி பிழைக்கிறார்கள். அந்த 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எல்லா மாவட்டங்களுக்கும் ஒரேமாதிரியான அனுமதி கொடுக்க வேண்டும்.
மாட்டுவண்டி உரிமையாளர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவின் போது, விரைந்து மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறி இருக்கிறது. அதன் மீது நடவடிக்கை எடுப்போம் எனக் கூறிய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் வாக்குறுதி என்பது நாமக்கல், திருச்சி மாவட்டங்களை போல் கரூர் மாவட்டத்திலும் அரசாணை வெளியிடப்பட்டு, மணல் குவாரிகள் முறைப்படுத்தப்பட்டு, மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பொதுப்பணித்துறை மூலமாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டு முறைப்படுத்த வேண்டும். மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விரைவில் திமுக ஆட்சி அமையும். அதன்பிறகு முறைப்படி இவர்களுக்கு மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும் ” என பேசிய வீடியோவை கமல்ஹாசன் ட்வீட் உடன் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து அதிமுகவின் கரூர் வேட்பாளர் எம்.ஆர்.பாஸ்கர், ” மாட்டுவண்டியில் மணல் அள்ளும் பிரச்சனையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இருவேறு விதமாக பேசுவதாகவும், மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆணை பெற்று மாட்டுவண்டியில் மணல் அள்ள பொதுப் பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் சுற்றுவட்டாரப் பிரச்சாரத்தின் போது பேசியதாக ” பாலிமர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

தினேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவிற்கு 2020 டிசம்பரில் நீதிமன்ற அளித்த தீர்ப்பில், ” கரூரில் மணல் குவாரி அமைப்பதற்கு ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட வேண்டும், மற்ற இரண்டு இடங்கள் லாரிகளுக்கு அடையாளம் காணப்பட வேண்டும். எனவே, உரிய உத்தரவிற்காக உயர் அதிகாரிகளுக்கு ஒரு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது ” எனக் கூறப்பட்டுள்ளது. இதையே, செந்தில் பாலாஜியும் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, கரூர் மாவட்டத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரி பல கோரிக்கை மனுக்கள் ஆட்சியாளர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டங்களையும் நடத்தி இருக்கிறார்கள். செந்தில் பாலாஜியும் மாட்டுவண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உடன் கோரிக்கை மனுக்களை வழங்கி இருக்கிறார். இது நீண்டகாலமாக இருக்கும் பிரச்சனை.

திமுக ஆதரவாளர்கள் மத்தியில் பேசியது கரூர் மாவட்டத்தில் உள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையே. எனினும், தங்கள் ஆட்சி தொடங்கிய உடனே மாட்டுவண்டியை ஆற்றுக்கு விடலாம், தடுக்கும் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள், எனக்கு போன் செய்யுங்கள் என பேசியதெல்லாம் மிரட்டல் பேச்சாகவும், சரியான அணுகுமுறையும் அல்ல. விளக்கம் அளிக்கும் வீடியோவில் இருக்கும் தெளிவு பிரச்சார பேச்சில் இல்லை என்பதே சர்ச்சைக்கு காரணம்.

Links : 

தமிழகத்தில் விறுவிறுப்படையும் தேர்தல் பிரச்சாரம் 

மணல் அள்ள அனுமதி கோரி தொழிலாளர்களுடன் வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு

High court case order Cauvery sand
Please complete the required fields.




Back to top button
loader