சிக்கன் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் (H5N1) தொற்று ஏற்படுமா?

மனிதர்களுக்கு முதன்முதலில் H5N1 நோய்த்தொற்று 1997 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் ஒரு கோழிப்பண்ணை வெடித்த போது ஏற்பட்டது. எனவே உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2003 மற்றும் 2024 ஆகிய காலக்கட்டங்களுக்கு இடையில், H5N1 இன் மூலம் 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 463 பேர் உயிரிழந்துள்ளதாக்வும் அறிய முடிகிறது.

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 11 வயது குழந்தைக்கு இந்த தொற்றின் காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதன் மூலம், இந்தியாவில் H5N1 தொற்றின் மூலம் ஏற்பட்ட முதல் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு 2021 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது.

ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா, சில நேரங்களில் இது “பறவைக் காய்ச்சல்” என்றும் அழைக்கப்படுகிறது.  ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்பது பொதுவாக H5N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் பறவைகளுக்கு தீவிரமான சுவாச நோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா மனிதர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், இவை ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எளிதில் பரவாது. இந்த தொற்றின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களின் இறப்பு விகிதம் தோராயமாக 60% உள்ளது.  கொரோனா தொற்றின் மூலம் ஏற்பட்ட உய்ரிழப்புகளின் சதவீதம் 3% ஆகும். இதன் மூலம் கொரோனா தொற்றின் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிகிறது.


2021 லிருந்து, HPAI A(H5) வைரஸ்கள் அதாவது HPAI A(H5N1) கிளேட் 2.3.4.4b வைரஸ்கள், அமெரிக்காவில் வாழும் காட்டுப் பறவைகளில் பரவி வந்தன. இந்த வைரஸ்கள் தொடர்ந்து கோழிப்பண்ணைகளுக்கு பரவி பின்பு கால்நடைகளுக்கும் பரவின. இவ்வாறு இது மக்களுக்கும் பரவுகிறது. சமீபத்தில் கம்போடியா நாட்டில் மிகவும் ஆபத்தான பறவைக் காய்ச்சல் வைரஸ் நான்கு மனிதர்களுக்கு பதிவாகியுள்ளது. இதன் மூலம் மனிதர்களில் HPAI A வைரஸ் தொற்றின் முதல் பாதிப்பு 2024 இல் கம்போடியாவில் பதிவாகியுள்ளது என்பதை அறிய முடிகிறது. மேலும் கம்போடியாவில் ஏற்பட்ட தொற்று, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் கோழி மற்றும் காட்டுப் பறவைகளில் தொற்றுநோய்களை ஏற்படுத்திய H5N1 வைரஸை போன்ற தொற்று அல்ல என்பதையும் அறிய முடிகிறது.

H5N1 வைரஸின் அறிகுறிகள்:

• தசை வலிகள்

• இருமல்

• தொண்டை புண்

• காய்ச்சல் (பொதுவாக அதிக வெப்பநிலை, > 38°C) மற்றும் காரணம் தெரியாத உடல்நலக்குறைபாடுகள் (Malaise).

ஆரம்ப அறிகுறிகளில் வயிற்று வலி, மார்பு வலி மற்றும் குடல் அசைவுகள் ஆகியவையும் ஏற்படலாம். விரைவான தொற்று பரவலின் காரணமாக கடுமையான சுவாச நோய், உதாரணமாக, மூச்சுத் திணறல், நிமோனியா, கடுமையான சுவாசக் கோளாறு மற்றும் நரம்பியல் அசாதாரணங்கள் (வலிப்பு) போன்ற உபாதைகளும் ஏற்படலாம்.

ஒசெல்டமிவிர் என்ற வைரஸ் தடுப்பு மருந்து, நோயின் ஆரம்ப கட்டத்தில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் நோயாளிகளின் சுவாச அறிகுறிகளை மருத்துவமனையின் ICU வில் தான் கையாள வேண்டும். மேலும் கிளேட் 2.3.4.4b வைரஸ்களுக்கு எதிரான “Candidate Vaccine Viruses (CVVs)” வைரஸ்கள், H5N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் தேவைப்பட்டால் தடுப்பூசி தயாரிக்கவும் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சாதாரண காய்ச்சல் தடுப்பூசிகள் (Seasonal Flu Shots) இந்த நோய்த்தொற்றுகளுக்கு எதிராக சிறிய பாதுகாப்பையே வழங்குகின்றன. எனவே இதற்கான தடுப்பூசி தயாரிப்பு பணிகளுக்காக வைரஸ் மாதிரிகள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

H5N1 ஐ WHO எவ்வாறு கையாளுகிறது? 

உலக சுகாதார அமைப்பு (WHO) பல நாடுகளுடன் இணைந்து H5N1 நோய்த்தொற்றின் காரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அடையாளம் காண்கிறது. மேலும் விலங்குகளுக்கு ஏற்படும் பரவலைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் உள்ள Food and Agriculture Organization (FAO) மற்றும் World Organization for Animal Health (OIE) போன்ற சர்வதேச சுகாதார அமைப்புகளுடனும் இணைந்து WHO செயல்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்தும் ஒரு சர்வதேச ஆய்வக அமைப்பான Global Influenza Surveillance and Response System (GISRS) மூலம், பரவும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டு, அதனால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் செய்யப்படவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களும் நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.

கோழி உண்பதால் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்படுமா?

H5N1 நோய்த்தொற்றின் மூலம் மனிதர்களுக்கு ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளுமே,  உயிருடன் அல்லது இறந்த நோய்வாய்ப்பட்ட பறவைகள் மூலமே ஏற்பட்டுள்ளன அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதியில் நெருங்கிய தொடர்புடன் இருப்பதன் மூலமும் ஏற்பட்டுள்ளன.

எனவே H5N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் பாதிப்படைந்த கோழிகளை மனிதர்கள் உண்பதால், மனிதர்களுக்கும் இந்த தொற்று ஏற்படுகிறதோ என்ற பயம் உலகம் முழுவதுமே நிலவி வருகிறது.

ஆனால் பொதுவாக கோழியை முறையாக சமைக்கும் போது, அதிக வெப்பநிலையின் காரணமாக நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே நன்றாக சமைத்து சாப்பிடுவது நல்லது.

ஆதாரங்கள்:

https://www.cdc.gov/flu/avianflu/avian-flu-summary.html

https://www.who.int/emergencies/disease-outbreak-news/item/2024-DON511

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader