ஹிந்தி தெரியலனா தமிழ்நாட்டிற்கே திரும்பி போ : மும்பை அதிகாரி.

ஹிந்தி மொழியை இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் கற்க வேண்டும் என வெளிப்படையாக அரசியல் தலைவர்கள் கூறுவதும், சில சமயங்களில் ஹிந்தி திணிப்பிற்கு கடுமையான எதிர்ப்புகளும் தென்னிந்திய மாநிலங்களில் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்த வரலாறும் உண்டு.
இருப்பினும், பிற மொழி சார்ந்தவர்களின் மீதான மோசமான அணுகுமுறை இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் அரங்கேறி தான் வருகிறது. தற்போது மீண்டும் தமிழ் இளைஞர் ஒருவருக்கு மும்பையில் அப்படியொரு மோசமான அணுகுமுறை நிகழ்ந்துள்ளது.
பயோ மெடிக்கல் இன்ஜினியரான 27 வயது ஆப்ரகாம் சாமுவேல் அமெரிக்காவின் Potsdam-யில் அமைந்துள்ள Clarkson university-ல் PhD பயின்று வருகிறார். விடுமுறைக்காக இந்தியா வந்த சாமுவேல் மதுரையில் உள்ள தன் குடும்பத்தினருடன் இருந்து விட்டு ஒரு மாதம் கழித்து அமெரிக்கா செல்ல மும்பை செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். முதலில் மும்பையில் இருந்து பாரிஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் செல்வதே திட்டமாக இருந்துள்ளது.
இதற்காக செவ்வாய்க்கிழமை(ஜனவரி 8) மும்பை விமான நிலையத்தின் கவுன்ட்டர் 33-ல் இமிகிரேஷன் அதிகாரி முன்பு அனுமதி பெறுவதற்காக அணுகிய போது தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்ததால், ஹிந்தி தெரியாத காரணத்தினால் மறுக்கப்பட்டதாக ஆப்ரகாம் சாமுவேல் ட்விட்டரில் பதிவிட்டது 1,500 ஷேர்கள், லைக்கள் பெற்று வைரலாகி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
“ இதே அதிகாரியிடம் அயல்நாட்டு பெண் பயணி ஒருவர் வந்து பேசிய போது முழுவதும் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். ஆனால், என்னைப் பார்த்த போது மட்டும் ஹிந்தியில் பேச நினைத்துள்ளார். அதற்கு எனக்கு ஹிந்தி தெரியாது என கூறிய உடனே திடீரென கோபமாக பிற கவுன்ட்டர்களை அணுகுமாறு கூறிவிட்டார் “ என ஆப்ரகாம் சாமுவேல் தெரிவித்து உள்ளார்.
“ அந்த அதிகாரி மீண்டும் மீண்டும் என்னைப் பார்த்து தமிழ்நாட்டிற்கு திரும்பி செல் என கூறிக் கொண்டே இருந்தார். இது பற்றி இமிகிரேஷன் அலுவலகத்தில் கூறிய பின் உடன் வந்த மற்றொரு அதிகாரி முன்பும் தனது போக்கை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. மறுபடியும், நான் இந்தியாவில் இருக்க ஹிந்தி கற்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டுக்கே திரும்பி செல்ல வேண்டும் “ என உயர் அதிகாரி முன்பும் கூறியதாக சாமுவேல் தெரிவித்து இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பல ட்விட்களை சாமுவேல் பதிவிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்ட பலருக்கும் டாக் செய்துள்ளார். மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கும் டாக் செய்து இதுபோன்று இந்தியாவில் யாருக்கும் நடக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகாரியின் அலட்சிய போக்கிற்கு பின் சாமுவேல் 1pm அளவில் விமானத்தில் பாரிஸ் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றார்.
இதுகுறித்து பேசிய இமிகிரேஷன் சிறப்பு அதிகாரி சுப்ரியா யாதவ், “ அந்த பயணி நிறுத்தி வைக்கப்படவில்லை, 4 நிமிடத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஒருவேளை அதிகாரி மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்த அதிகாரிக்கு எப்படி பேசுவது மற்றும் ஆலோசனை வழங்கல் வகுப்பு நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் இருந்து வரும் ஈழத் தமிழர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வது இருப்பதால் அதைக் கண்டறிய அவ்வாறு நடந்து இருக்கலாம் என இமிகிரேஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் இருக்க ஹிந்தி கட்டாயமில்லை. இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஏதுமில்லை என அரசியல் சாசனத்தில் உள்ளது. அதிக மக்கள் பேசுவதால் பிற மொழி பேசும் மக்களை தவறாக அணுகுவது கண்டிக்கத்தக்கது.
ஹிந்தி தெரியவில்லை என்றால் தமிழகத்திற்கு திரும்பி செல்லுமாறு கூற அவருக்கு அதிகாரமும் இல்லை. இந்தியா பல மொழி, பல மக்கள், பல கலாச்சாரம் ஒன்றிணைந்த யூனியன் அரசு ஆகும். அதை அறிந்தவர்கள் மட்டுமே இந்தியர்கள், பிரிவினைவாதம், மொழி வெறி பிடித்தவர்கள் எப்படி இந்தியராக இருக்க முடியும். PhD படிக்கும் நன்கு ஆங்கிலம் அறிந்தவருக்கே இந்த நிலைமை.
‘Don’t know Hindi? Go back to Tamil Nadu’
Tamil Nadu flyer vents anger online after being quizzed in Hindi at Mumbai airport
Denied immigration at Mumbai airport because I don’t speak Hindi: Tamil Nadu man alleges