செல்போன்களில் அவசர எச்சரிக்கை ஒலி.. அச்சம் தேவையில்லை, காரணம் இது தான்..!

ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து நடத்தும் அவசரகால எச்சரிக்கைக்கான சோதனை..

தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையான மக்களின் மொபைலுக்கு, இன்று காலை சரியாக 11:27 மணியளவில் ‘அவசர எச்சரிக்கை‘ (Emergency Alert) என்ற பெயரில் ஒரு செய்தி அலார சத்தத்துடன் ஆங்கிலத்தில் வந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் சரியாக 11:57 மணியளவில் இதே செய்தி தமிழிலும் வந்ததால் மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். ஒவ்வொரு மொபைல் சேவைக்கும் (Telecom Service Providers) ஏற்ப, இந்த அவசரகால எச்சரிக்கை செய்தியின் நேர அளவானது மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.

அதில் “Emergency alert: Extreme. இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி. உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நேரமுத்திரை: 20-10-2023 11:51 AM 12” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இதே செய்தி இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் கடந்த அக்டோபர் 17 அன்றும் ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்புத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பு:

ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை (DOT) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆகியவை செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்புடன் (Cell Broadcast Alert System) ஒன்றிணைந்து அவசரகால தகவல் தொடர்புகளை அனுப்புவதற்கான சோதனையை நடத்தப்போவதாக கடந்த ஜூலை  மாதம் அறிவித்து ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ளனர்.  

அந்த அறிவிப்பில், “தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து தொலைத்தொடர்புத் துறையானது செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பின் விரிவான சோதனையை மேற்கொள்ளும். இந்த முன்முயற்சியானது பேரழிவுகளின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதையும், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய மக்கள் மற்றும் அவர்களின் சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இடைவிடாத அர்ப்பணிப்பில், செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடையே கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். பல்வேறு மொபைல் ஆப்ரேட்டர்கள் மற்றும் செல் ஒலிபரப்பு அமைப்புகளின் அவசர எச்சரிக்கை ஒளிபரப்பு திறன்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக இந்த சோதனைகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடத்தப்படும். 

இந்த சேவையானது கடுமையான வானிலை எச்சரிக்கைகளான சுனாமி, வெள்ளம் மற்றும் பூகம்பங்களின் போதும், பொதுப் பாதுகாப்புச் செய்திகள், மக்கள் வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற முக்கியத் தகவல் போன்ற அவசர எச்சரிக்கைகளை வழங்கவும், Cell Broadcast மூலம் வழங்கப்படும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, செப்டம்பர் 29-ம் தேதிக்கான சோதனை அட்டவணையில் பஞ்சாப் அடுத்த மாநிலமாக உள்ளது.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம் இந்த அவசரகால எச்சரிக்கை செய்தியானது, நாடு முழுவதும் ஒரு சோதனை முன்னோட்டமாக அனுப்பப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டு எண்: 2110-ன் படி, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டம் எதிர்வரும் 20.10.2023 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்தப்பட உள்ளது. 

சோதனைக் காலத்தில், பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள் பெறப்படும். இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும், உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அவசர எச்சரிக்கை மெசெஜானது, மூன்றாம் உலகப் போர் வருவதற்கான அறிகுறியாகவே அனுப்பப்பட்டுள்ளது என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிந்தது. இவை முற்றிலும் தவறான செய்திகள். இவை இந்தியாவில் ஏற்படக்கூடிய அவசரகால எச்சரிக்கைகளின் போது, நாட்டுமக்களுக்கு உடனே தகவல் கொடுப்பதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு முன்னெடுப்பு மட்டுமே ஆகும். எனவே இந்த அவசரகால எச்சரிக்கை செய்தியின் சோதனைக்கு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

உலகம் முழுவதும் உள்ள அவசர எச்சரிக்கைக்கான சேவைகள்:

இந்தியாவில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பானது, உலகின் பல பகுதிகளிலும் ஏற்கனவே அமலில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகியவை இதே போன்ற எச்சரிக்கை அமைப்புகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அடங்கும்.

  • தீவிர தீ, கடுமையான வெள்ளம் போன்ற அவசரகால வானிலை எச்சரிக்கைகளில் மக்களை எச்சரிக்க, பிரிட்டனின் ஒளிபரப்பு தொழில்நுட்பம் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மொபைல் போன்களுக்கு அறிவிப்புகளை அனுப்பிவருகிறது.
  • அமெரிக்கா ஒரு ‘வயர்லெஸ் எமர்ஜென்சி அலர்ட்ஸ்’ அமைப்பைப் பயன்படுத்தி இத்தகைய அவசரகால செய்திகளை அனுப்புகிறது.
  • ஜப்பானில் மொபைல் போன்களில் விழிப்பூட்டல்களை அனுப்புவது மட்டுமல்லாமல், டிவி, வெளிப்புற ஒலிபெருக்கிகள், ரேடியோ மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலமும் எச்சரிக்கை செய்திகளை ஒளிபரப்புகிறது.
  • தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுடன் கூடிய அவசர எச்சரிக்கை அமைப்பு ஆஸ்திரேலியாவில் உள்ளது.
  • கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நியூசிலாந்தில் எச்சரிக்கை அமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் இந்த அவசரகால விழிப்புணர்வு எச்சரிக்கையானது உலகம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. எனவே, அச்சம் வேண்டாம் மக்களே !

ஆதாரங்கள்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1961680

https://www.financialexpress.com/life/technology-emergency-alerts-japan-to-australia-how-exactly-does-this-system-works-in-other-countries-complete-guide-bkg-3244698/

Press Release 2110

 

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader