ஷர்மிக்கா முன்னுக்குப் பின் முரணாக பேசிய தகவல்களின் தொகுப்பு !

சித்த மருத்துவர் ஷர்மிக்கா யூடியூப் சேனல்களில் ஒரு குலாப்ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும், மாடு நம்மை விடப் பெரிய மிருகம் எனவே அதன் கறியைச் சாப்பிடக் கூடாது, அயோடின் உப்பிற்கு கர்ப்பிணிப் பெண்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவியலுக்குப் புறம்பாக அவர் பேசியது குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டது.  

மேலும், அவர் அறிவியலுக்கு எதிராக மட்டும் இல்லாமல், தான் பேசிய கருத்துக்களுக்கு மாறாகவும் பல இடங்களில் மாற்றிப் பேசியுள்ளார். இதனைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

மாட்டுக்கறி : 

சித்த மருத்துவர் ஷர்மிக்கா 2022, நவம்பர் 29ம் தேதி ‘OmSaravanaBhava’ என்ற யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்காணலில், ‘Beef is not bad for health’ எனக் கூறி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மாட்டினை நாம் சாமியாகப் பார்க்கிறோம். அதனைத் தவிர்த்து மாட்டுக்கறி உடல் நலத்திருக்கு கெடுதல் எனக் கூற முடியாது. குறிப்பிட்ட அளவு மாட்டுக்கறி எடுத்துக் கொள்வது என்பது நல்லது தான் எனக் கூறி இருக்கிறார்.

கடந்த டிசம்பர் 17ம் தேதி ‘I Tamil News’ என்ற வேறொரு யூடியூப் நேர்காணலில் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என மாற்றிப் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் நெறியாளர் மாட்டுக்கறி சாப்பிட்டால் நல்லதா கேட்டதா எனக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஷர்மிக்கா, அறிவியல் அனைத்தையும் நாம் தள்ளி வைத்து விடுவோம் எனக் கூறிவிட்டு தனது விளக்கத்தைத் தரத் தொடங்குகிறார். 

“நமது பாரம்பரியத்திற்கு வருவோம். பீப் கடவுளாகப் பார்க்கக்கூடிய ஒரு அழகான விஷயம். அதனால் அதனைச் சாப்பிடக் கூடாது எனக் கூறுவது அறிவியலுக்குப் புறம்பானது எனக் கூறலாம். அடுத்ததாகத் தமிழ்நாடு மற்றும் இந்தியர்களின் டி.என்.ஏ. பெரிய மிருகத்தை ஜீரணிக்க முடியாது. எனவே, பீப் நமது உடம்புக்கு ஒத்து வராத விஷயம்” எனக் கூறி இருந்தார்.

இதேபோல, 2023, ஜனவரி 6ம் தேதி விகடனுக்கு அளித்த நேர்காணலில், ‘நோயில்லா நெறி’ என்ற புத்தகத்தில் ‘மாட்டு இறைச்சியால் சகல நோயும் வரும்’ என குறிப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இப்படி ஒவ்வொரு இடத்திலும் மாற்றி மாற்றி பேசியுள்ளார். 

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தியதால் ஏற்பட்ட நச்சுத் தன்மை நீக்குதல் (Detoxic) :  

2022, டிசம்பர் 19ம் தேதி ‘Behindwoods O2’ என்ற யூடியூப் பக்கத்தில் நேர்காணல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், நச்சுத் தன்மை நீக்குதல் குறித்து நெறியாளர் கேள்வி கேட்கிறார். அதற்கு, “உடலில் நச்சுத் தன்மை கண்டிப்பாக நீக்க முடியும். நான் மிகவும் புகைப்பிடித்து விட்டேன், நான் மிகவும் மது அருந்தி விட்டேன். ஆனால், இந்த நிமிடம் நான் திருந்தி விட்டேன் என 60 வயதில் நினைத்தாலும் முடியும்.

வெள்ளை பூசணி ஜூஸில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. அதில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை. அனைவரும் இதனைக் குடிக்கலாம். ஆனால், மூச்சு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் 11 மணியளவில் குடிக்கலாம். இது உணவுக் குழாயைச் சுத்தம் செய்யும். அதனைச் சுத்தம் செய்து விட்டாலே மற்ற விஷயங்களும் சேர்த்து சுத்தமாகிவிடும்” எனக் கூறி இருந்தார்.

அதற்கு அடுத்த நாளான, டிசம்பர் 20ம் தேதி ‘OmSaravanaBhava’ யூடியூப் நேர்காணலில், உடலிலிருந்து மிக வேகமாக நச்சுத் தன்மை போக்கிவிட முடியும் என்றால், 60 வயது வரை அனைத்தையும் அனுபவித்துவிட்டு 63 வயதில் சரியாகி விடுவார்களே..! ஆனால், நமது உடல் அப்படிச் செயல்படாது. 25 வயதில் நான் திருந்துகிறேன் என்றால், அடுத்த 25 வருடத்திற்கு பிறகுதான் சரியாகும் எனப் பேசியுள்ளார்.

மார்பகம் பற்றி ஷர்மிகவின் கருத்துக்கள் :

தினமும் 8 முதல் 10 நுங்கு சாப்பிட்டால், ஒன்று முதல் இரண்டு மாதத்தில் மார்பகம் பெரிதாவதை காணலாம் எனக் கடந்த டிசம்பர் 3ம் தேதி நேர்காணலில் கூறி இருந்தார். 

விளக்கம் அளிப்பதாக ஷர்மிக்கா பதிவிட்ட வீடியோவிலும் நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும் என எந்த ஆராய்ச்சி ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை. மாறாக நுங்கு என்று மற்றும் சொல்லிவிட்டு வேறு பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

இது குறித்த விகடனின் கேள்விக்கு, “நுங்கு குளிர்ச்சியானது. குளிர்ச்சியான உணவு எடுத்தால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகம் பெரிதாகும். இது சித்த மருத்துவத்தில் நேரடியாக இல்லை. சித்த மருத்துவ புத்தகத்தில் இருப்பது மட்டும்தான் சொல்லவேண்டும் என்றால் நாங்கள் என்றைக்கு முன்னேறுவது?” எனப் பதில் அளித்துள்ளார்.

தன்னை சித்த மருத்துவர் என சொல்லிக்கொள்ளும் இவர், தனது முன்னேற்றத்திற்காகச் சித்த மருத்துவத்தில் இல்லாத தகவல்களை மக்களைப் பின்பற்றச் சொல்வது எந்த விதத்தில் சரி? 

மேலும், ‘ராணி டிஜிட்டல்’ என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த டிசம்பர் 19ம் தேதி “குப்புறப்படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும்” எனக் கூறி இருந்தார். “இதற்கு, மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை” என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இணை இயக்குநர் டாக்டர்.பார்த்திபன் ‘விகடன்’ நேர்காணலில் கூறி இருக்கிறார்.

‘அகத்தியர் குணவாகடம்’ என்ற சித்த மருத்துவ நூலில் “இளங்காயிலுள்ள நுங்கின் நீரானது, வியர்வைக் குருவை நீக்கும். பசியைத் தரும். தோலுடனே இருக்கும் நுங்கு சீதக்கழிச்சலை விலக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தவிர நுங்கு குறித்து எந்த தகவலும் அப்புத்தகத்தில் இல்லை.

இதேபோல், “நீரிழிவு நோய் சரியாகாது என வெளிநாட்டினர் கூறுவார்கள். அவர்களிடம் இன்சுலின், அண்டி பயோடிக் போன்றவை மட்டுமே உள்ளது. ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை. நம்மிடம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு இருக்கிறது. பார்ப்பதற்கு கணையம் போலவே இருக்கும்” என்றும் கூறி இருந்தார்.

ஆனால், அக்கிழங்கின் பண்புகள் என ‘அகத்தியர் குணவாகடம்’ புத்தகத்தில், “இது மருந்தின் வன்மையைக் குறைக்கும். மூலமுளையையும், குடலிரைச்சலையும், வயிற்றுக்கடுப்பையும் விளைவிக்கும். இதனை வேகவைத்து சாப்பிடலாம். ஆனால், இது மந்தபதார்த்தம் என கூறப்பட்டுள்ளது. நீரிழிவு நோயிக்கான மருந்து என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக மருந்தின் வீரியத்தினை குறைக்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லவர்களுக்கு குழந்தை பிறக்குமா ?

கரு என்பது நாம் உடல் உறவு வைத்துக் கொள்வதாலோ, நமது உடல் நிலையாலோ தோன்றுவது என்பது இரண்டாம் பட்சம். கடவுள் மனது வைப்பது என்பதுதான் முக்கியம். நாம் நல்லவர்களாக இருந்தால் குழந்தை பிறக்கும் என ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அப்போது, குழந்தை இல்லாதவர்கள் கெட்டவர்களா? பாவம் செய்தவர்களா? இப்படி, குழந்தை இல்லாமல் தவிப்பவர்களை இழிவு செய்திருந்தார்.

ஷாம்பு பயன்படுத்தலாமா?

அனைத்து ஷாம்பு வகையிலும் ரசாயணங்கள் உள்ளது. எனவே, ஷாம்புவை காட்டிலும் சியற்காய், அரப்பு தேய்த்துக் குளிப்பது நல்லது எனக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி இருந்தார். அதேபோல், அக்டோபர் 28ம் தேதி சோப்பில் சிறந்தது என எதுவும் இல்லை. ‘No soap’ என்றுதான் நான் பரிந்துரைப்பேன். சோப்பு என்ற ஒரு விஷயம் உலகத்தில் இல்லை என நினைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

டிசம்பர், 27ம் தேதி ‘கலாட்டா பிங்க்’ யூடியூப் நேர்காணலில் ஷர்மிக்காவிடம் ‘நீங்கள் உங்களது முடிக்கு கலர் அடித்து இருக்கிறீர்கள்’ எனக் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு, “நான் ஹேர் ஸ்டைடிங் செய்யவில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ‘அயன்’ செய்வேன்.

மேலும், நான் ‘ஹேர் கலர்’ செய்துள்ளேன். இன்னும்  செய்வேன். அதில், தீங்கு விளைவிக்கும் ரசாயணங்கள் இருப்பது தெரிந்துதான் பயன்படுத்துகின்றேன். நான் இதை எல்லாம் செய்கிறேன் என்றால் எப்படி மெயின்டைன் செய்ய வேண்டுமென எனக்குத் தெரியும்”  எனப் பதில் அளித்துள்ளார். இதே போல, வேறொரு வீடியோவில் தனது உதடு கருப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மையில் ‘லிப் ஸ்டிக்’ பயன்படுத்துவதாகக் கூறி இருக்கிறார்.

தனது விளக்க வீடியோவில் தான் நடத்தும் ‘லவ் யுவர் பாடி’ என்ற மாதாந்திர நிகழ்ச்சியில் ‘உங்களது உடல் எப்படி இருக்கிறதோ, அப்படியே அதனை நேசியுங்கள் எனத் தான் கூறியதாக தெரிவிக்கிறார்.

ஆனால் , அதே வீடியோவில் தனது பழைய புகைப்படத்தைப் பார்த்து ‘குண்டு மாடு’ என தன்னைத்தானே உருவக் கேலி செய்து கொள்கிறார். ‘Say Swag’ என்ற யூடியூபில் பெண்களுக்கு தங்களின் உடலை curvy ஆக வைத்துக் கொள்வது பற்றி கேள்வி கேட்கப்படுகிறது.

“வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால்? எந்த ஒரு பெண்ணும் தனது உடல் ‘curvy ‘ ஆக இல்லை என வருத்தப்படுவதில்லை. கொஞ்சம் உடல் எடையை குறைக்கலாம் என்றாலும் எதுக்கு குறைக்க வேண்டும்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என கூறுகின்றனர். பார்த்தால் 100 கிலோ இருக்கிறார்கள் என ஷர்மிக்கா பதில் அளித்துள்ளார். இம்மாதிரி, பல இடங்களில் மாற்றி மாற்றி பேசியுள்ளார்.

மேலும் படிக்க : யூடியூப் சேனல்களில் பொய் பொய்யா பேசும் ஷர்மிக்கா.. ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் சொல்லும் உண்மை

இப்படி, “மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகத் தவறான கருத்துகளைப் பேசும் ஷர்மிக்கா மீது, பொதுமக்கள் யாரேனும் புகார் அளித்தால் நிச்சயம்  நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி போன்ற மருத்துவர்கள் தொடர்பான புகார்கள் அளிக்க :

இணை இயக்குநர்,

(Dr.பார்த்திபன்),

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி,

அரும்பாக்கம், சென்னை – 600 106.

மின்னஞ்சல் : tamilnadustateayushsociety@gmail.com

                            imhd@tn.gov.in 

போலி மருத்துவர்களைப் பற்றி யூடர்னுக்கு தகவல் அளிக்க :

தொலைபேசி எண் : +91 63697 48351

மின்னஞ்சல் : youturnweb@gmail.com 

Click : Video drive link 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader