This article is from Sep 30, 2018

திராவிட நாடு தமிழர்களுக்கு பயன் தருமா ?

ந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், சிறந்த திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏதும் இடம்பெறாததால் அதிருப்தி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகிக் கொள்வதாகவும், வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரப் போவதாக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து ஆந்திர முதல்வர் கூறிய கருத்தையே தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கூறியுள்ளார். சித்தராமையா கூறியதாவது, “ 6 தென் மாநிலங்கள் அதிக வரியை செலுத்தியும் குறைவான நிதியையே பெறுகின்றன. தொடர்ந்து வட மாநிலங்களுக்கே தென் மாநிலங்களின் நிதியை அளித்து வருகின்றனர். உதாரணமாக, உத்திரப்பிரதேசம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும் 1.75 ரூபாய் நிதியாக பெறுகிறது. ஆனால், கர்நாடகா மாநிலம் செலுத்தும் ஒரு ரூபாய் வரிக்கு 45 பைசா மட்டுமே நிதியாக வழங்கப்படுகிறது. ஆகையால், ஏற்றத்தாழ்வுகளை விடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முறையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் தெரிவித்தது போன்று, தமிழகம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் 40 பைசா மட்டுமே நிதி வழங்கப்படுகிறது.  மத்திய அரசு சரியாக நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு மட்டும் தான் மிகக் குறைவான நிதியை மத்திய அரசு வழங்குவதாக தமிழக நிதித்துறை செயலாளரும் குறிப்பிட்டுள்ளார்.

மாட்டிறைச்சிக்கு தடை ஏற்பட்ட போது கேரளா மாநிலத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் உருவாகின. அதில், தென்னிந்திய மாநிலங்களை ஒன்றிணைத்து உருவாகும் திராவிட நாடு குறித்த கோரிக்கைக்கான குரல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட நாடு குறித்த குரல் அண்மையில் வலுபெற்று வருவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர் செய்தியாக வெளியாகி வருகிறது. இச்சமயத்தில் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முரண்பட்ட கருத்துகளை கூறி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் சிக்கியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மு.க.ஸ்டாலின், “ காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவாக அமைப்பதற்காக, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ” என்று கூறினார்.

நிருபர் : திராவிட நாடுகள் கோரிக்கை வலுவடைகின்ற மாதிரியான சூழல் இங்கே ஏற்படுகிறது. அதை நீங்கள் எப்படி பாக்குறீங்க ?

ஸ்டாலின் : “அப்படி வந்தால் வரவேற்கப்படும், வரும் என்ற நம்பிக்கையில் தான் நானும் இருக்கிறேன் ” என்று பதில் அளித்தார்.

மு.க.ஸ்டாலினின் பேச்சால் திராவிட நாடு கோரிக்கையை திமுக முன் வைக்கின்றதா என்ற விவாத நிகழ்ச்சிகள் ஊடகங்களில் அனல் பறந்தன.

இந்நிலையில், மார்ச் 17-ம் தேதி மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ திராவிட நாடு உருவாகிற சூழல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கே, அதை வரவேற்பதாகவும், ஆதரிப்பதாகவும் கூறினேன். ஆனால், ஊடகங்கள் தான் தங்களின் விளம்பரத்திற்காக  திராவிட நாடு உருவாக்க திமுக தொடர்ந்து குரல் எழுப்புவதாகவும், ஆதரிப்பதாகவும் கூறி விவாதங்கள் நடத்தி வருவதாக திராவிட நாடு குறித்த கொள்கையைஅண்ணா என்றோ கைவிட்டதாக கூறியுள்ளார். எனினும், அச்சூழ்நிலையில் திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும், அதற்கான காரண காரணிகள் அப்படியே இருக்கின்றன என்று அண்ணா கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இன்றைய சூழல் உணர்த்துகிறது.

மு.க.ஸ்டாலினின் இத்தகைய பதிலும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உருவாக்கின. திராவிட கட்சியான திமுக திராவிட நாடு கேட்கவோ, குரல் கொடுக்கவோ இல்லை என்பதை வைத்து கிண்டல் செய்து மீம்கள் வரத் தொடங்கின.

சென்னை மாகாணத்தை தனி திராவிட நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரியார் முன் வைத்தார். அதற்கு அண்ணாவும் ஆதரவு அளித்து பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அந்த கோரிக்கைகள் கைவிடப்பட்டது. அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் ஒருமுறை உரையாற்றிய போது, “ திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும் அதற்கான காரணங்கள் உயிர்ப்போடு தான் இருக்கின்றன ” என்று குறிப்பிட்டிருந்தார். அதையே தான் ஸ்டாலினும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் நிருபர் கேட்ட கேள்விக்கு ஆதரவு உண்டு என்றவர். பின்பு பின்வாங்கியது சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. முதலில் அவ்வாறு பேட்டி எடுத்த பின் சமூக வலைத்தளங்களில் திராவிட நாடு என்ற ஹஷ்டக் உடன் ஆதரவும் பெருகியது. தமிழ் தேசியவாதிகளும், தேசியவாதிகளும் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

திராவிட நாடு சாத்தியமா ! தேவையா ! 

திராவிட நாடு தேவை என்கிற பேச்சு எழுந்ததற்கு காரணம், மத்திய அரசு மீது தென் மாநிலங்கள் விரக்தியடைந்ததைக் காட்டுகிறது. தொடர்ந்து தென் மாநிலங்களின் மன நிலையை புரிந்து கொள்ளாமலும், ஒரு மொழி கொள்கையை கடைப்பிடிக்க முயற்சிப்பதும், சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கான இதில் கர்நாடகாவில் இருக்கும் அளவிற்கு வலுவாக பிற மாநிலங்களில் இல்லை எனலாம். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மத்திய அரசோடு கூட்டணியில் இருந்தார். தற்போது விலகி இருக்கிறார். இங்கு தெலுங்கான , ஆந்திரா என்று பிரிந்ததால் தேசிய கட்சிகளை விட மாநில கட்சிகளின் அதிகாரம் ஓங்கியுள்ளது.

கர்நாடகாவை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் ஆட்சி தான். ஆனாலும், நாங்கள் இந்துக்கள் அல்ல, லிங்காயத்துக்கள்( நம்ம ஊர் சைவ மதம் போன்று) என்ற கோஷத்தை முன்னெடுத்தார் சித்தராமையா. அது பெருமளவு கைக்கொடுக்கவும் செய்தது. கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கைகளே ஓங்கி இருக்கும். அங்கு தற்போது கம்யூனிஸ்ட் ஆட்சி. சமீபத்தில் மாட்டிறைச்சி தடை என்று அறிவிப்பு வந்தவுடன் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. அப்போது #dravidanadu  என்ற ஹஷ்டக் ட்ரென்ட் செய்யப்பட்டது.

இப்படி தென் மாநிலங்கள் அனைத்தும் ஒரு வகையில் மத்திய அரசின் மீது இருக்கும் வெறுப்பால் ஆள விடுங்க போதும் என்கிற அளவில் பேசுவது இருந்தாலும், இப்போது வந்திருக்கும் வாதம் தென் மாநிலங்களின் வரியை பிடுங்கி வட மாநிலங்களுக்கு செலவழிக்கிறார்கள் என்பது தான். இது ஒரு வகையில் அடுத்தகட்ட நகர்வு என்று கூறலாம். எனினும், இங்கு தென் மாநிலங்களிடையே உறவு எப்படி இருக்கிறது என்று பார்த்தால், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல பிரச்சனையில் நாம் பிரிந்தே நிற்கிறோம். திராவிட நாடாக பிரிந்தால் நமது வரியை நாமே பெருமளவு பயன்படுத்தி கொள்ள முடியும்.

எனினும், ஆந்திராவோடு கிருஷ்ணா நதி பிரச்சனை மற்றும் செம்மரக் கடத்தல் என்கிற பெயரில் அடிகடி தமிழர்கள் கொல்லப்படுவது. கர்நாடகாவோடு காவிரி பிரச்சனை மற்றும் தமிழர்கள் தாக்கப்படுவது. கேரளாவோடு முல்லை பெரியார் பிரச்சனை, மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகள் தமிழக எல்லையோரத்தில் கொட்டப்படுவதும் என தென் மாநிலங்களுக்கு இடையேயும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த பிரச்சனைகளில் எல்லாம் தலையிட்டு ஆவண செய்ய வேண்டிய மத்திய அரசு தொடர் மௌனம் காப்பது ஏன் என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க.  ஒற்றுமையற்ற மாநிலங்கள் ஒன்று சேர்ந்து நாடாகுவதால் எந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிற கேள்வியும் எழுகிறது. தமிழ் தேசியவாதிகள் தனித்தமிழ் நாடு என்று பேசி வந்தாலும், அண்டை மாநிலத்திடம் இருந்து நமது உரிமைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கும் போது அண்டை நாடாகிவிட்டால் எப்படி சரியாகும்.

பிரிவினையாக யோசிப்பதை விடுத்து நமது தமிழக எம்பிக்கள் முறையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கிறார்களா? கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து மாநில உரிமைக்காக போராடுகிறதா ? என்று யோசிக்க வேண்டும். முறையாக பாரபட்சமின்றி செயல்பட்டு இருந்திருந்தால் திராவிட நாடோ, தனித்தமிழ் நாடோ பேசும் சூழல் வந்திருக்குமா என்று தேசிய கட்சிகள் சிந்திக்க வேண்டிய நேரம். தென் மாநிலங்கள் அனைத்தும் ஒரு குரலில் உரிமை குரல் கொடுக்க முன் வருவது போன்ற சிந்தனை மாற்றத்தை தரலாம். மத்திய அரசும் வட மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும், தென் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும் என பாரபட்சம் காட்டாது செயல்படுவதே இவ்வாறான பிரிவினை சிந்தனையை மனதில் இருந்து அகற்றும். இல்லையேல் இக்கோரிக்கை தவிர்க்க முடியாததாக மாறி பிரச்சனைக்கு வழி வகுக்க வாய்ப்புள்ளது. தேச ஒற்றுமை பாதுகாப்பாக இருப்பது அவர்கள் கையில் என்பதை உணர வேண்டும்.

Please complete the required fields.
Back to top button
loader